Published:Updated:

ஜூ.வி செய்தி எதிரொலி: ``இரண்டு மாதங்களில் குட்கா இல்லாத தமிழ்நாடு!'' - அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

குட்கா
குட்கா

இன்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.

`குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!’ என்ற தலைப்பில் அட்டைப்படத்துடன் கட்டுரையை வெளியிட்டது இந்த வார ஜூனியர் விகடன் இதழ். இந்தச் செய்தியின் எதிரொலியால், உடனடி நடவடிக்கையாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஓர் அவசரக்கூட்டத்தைக் கூட்டினார். (ஜூனியர் விகடன் கட்டுரையைப் படிக்க க்ளிக் செய்யவும் )

உணவுப் பாதுகாப்புத்துறை, காவல்துறை மற்றும் தமிழக உள்ளாட்சி அமைப்புகள் கலந்துகொண்ட கூட்டத்தில் குட்கா ஒழிப்பு குறித்த பல அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டார். மிக முக்கியமாக, "சட்டவிரோதமாக குட்கா விற்கும் அனைத்துக் கடைகளும் சீல்வைத்து மூடப்படும். இன்னும் இரண்டு மாதங்களுக்குள் குட்கா இல்லாத மாநிலமாகத் தமிழ்நாடு மாறும்" என அதிரடியாகத் தெரிவித்திருக்கிறார்.

மேலும், ``நேற்று ஒரு வாரப்பத்திரிகையில் குட்கா தாரளமாக விற்பது பற்றி பல விஷயங்களை எழுதியிருந்தார்கள். அது நிஜம்தான். தற்போது கூட குட்கா தாரளமாக புழக்கத்தில் உள்ளது. விற்பனை செய்யப்படும் கடைகள், உற்பத்தி செய்கிற இடங்கள் என்ற எந்த தகவலையும் எங்களது துறையின் சிறப்பு நடவடிக்கை பிரிவுக்கான போன் எண்: 94440 42322 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவல் சொல்லலாம். தகவல் சொல்கிறவர்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் '' என்றும் அறிவித்தார் அமைச்சர் மா.சுப்பிரமணியம்.

அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அமைச்சர் மா.சுப்பிரமணியன்

இது குறித்து மேலும் பேசிய மா.சுப்பிரமணியன், ``கொரோனா பரவல் மிகத் தீவிரமாக இருந்ததால், கொரோனா பேரிடரை எதிர்கொள்வதிலேயே எங்களின் முழு கவனத்தையும் செலுத்திவிட்டோம். எனவே, குட்கா ஒழிப்பில் அதிக கவனம் செலுத்தவில்லை என்பது உண்மைதான். ஆனால் கொரோனா போலவே குட்காவும் ஒரு பேரிடர்தான். எனவே, அதை தமிழ்நாட்டிலிருந்து முழுவதுமாக ஒழித்துக்கட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிட்டிருக்கிறோம். முதற்கட்டமாக அனைத்துக் கடைகளுக்கும் எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும். அதன் பின்னரும் விற்பனை செய்தால் கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதையும் மீறி விற்க நேர்ந்தால் கடை முழுவதுமாக இழுத்து மூடப்பட்டு சீல்வைக்கப்படும்!" என்றார்.

குட்கா இன்னும் ஜோராக விற்கிறது முதல்வரே!

மேலும், ``குட்கா விற்பனையைத் தடுக்க, உணவுப் பாதுகாப்புத்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகள் ஆகிய மூன்று துறைகளும் ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும்!" எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.

முன்பு குட்கா விவகாரத்தில் அதிமு- வை ஸ்டாலின் விமர்சித்த புகைப்படம்
முன்பு குட்கா விவகாரத்தில் அதிமு- வை ஸ்டாலின் விமர்சித்த புகைப்படம்

மேலும், ``குட்கா போன்ற போதைப்பொருள்களைப் பள்ளி, கல்லூரி மாணவர்கள்தான் பெரும்பான்மையாக பயன்படுத்துகின்றனர் என்ற தகவல்களும் வருகின்றன. எனவே, தமிழகம் முழுவதும் இருக்கக்கூடிய பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் குறித்த பாதிப்புகள் அடங்கிய பதாகைகள், மாதிரி பொம்மைகள் அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஆலோசனை செய்கிறோம்" என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார். கடந்த எட்டு ஆண்டுகளில் சட்டவிரோதமாக விற்கப்பட்டு வந்த 30 கோடி அளவிலான குட்கா பொருள்களைக் கைப்பற்றியிருப்பதாகத் தெரிவித்தவர், இனி பறிமுதல், அபராதம் போன்ற வழக்கமான நடைமுறைகளைத் தாண்டி, சட்டவிரோதமாக குட்கா விற்கும் கடைகளுக்கு சீல்வைக்கப்படும். இதனால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று அஞ்சும் எந்த வியாபாரியும் இனி குட்கா விற்பனை செய்ய மாட்டார்" என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி ஒருவர் நம்மிடம் கூறும்போது, ``உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச்சட்டம் மற்றும் அதன் விதிகளின் கீழ் எந்த ஒரு உணவிலும் சுகாதாரத்தைப் பாதிக்கும் பொருள் இருக்ககூடாது. புகையிலை மற்றும் நிக்கோட்டின் ஆகியவற்றை உணவுப்பொருளில் சேர்க்ககூடாது என்றும் விதிமுறை உள்ளது. புகையிலையால் ஏற்படும் பல்வேறு வகையான புற்று நோய்களைத் தடுக்கும் வண்ணம் புகையிலை மற்றும் நிக்கோட்டினை மூலப்பொருளாக கொண்ட குட்கா, பான்சமாலா மற்றும வேறு எந்த சுவைக்கும் பொருளையும் தயாரிக்கவும், சேமிக்கவும், வண்டிகளில் எடுத்து செல்லவும், விநியோகிக்கவும், விற்பனை செய்யவும் தடை விதிதது 23.5.2013-ல் அரசு ஆணை வெளியிடப்பட்டது. இந்த ஆணை வருடம்தோறும் நீடிக்கபபட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த 2013-ல் துவங்கி இந்த ஆண்டு வரை சுமார் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டுள்ளது.

குட்கா
குட்கா

597 குற்றவியல் வழக்குகள் நீதிமன்றங்களில் தொடரப்பட்டு அவற்றில் 90 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு அபதாரமாக ரூ. 14,63,000 விதிக்கப்பட்டுள்ளது. மேலும், 96 உரிமையியல்(சிவில்) வழக்குகள் நீதிமன்றத்தில் தொடரப்படடு அவற்றில் 87 வழக்குகளில் தீர்ப்பு வழங்கப்பட்டு அபதாரமாக ரூ. 34,35,000 விதிக்கப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ள வழக்குகள் மீது தொடர் நடவடிக்கைகள் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது அமைச்சர் அறிவித்த உத்தரவுகளை உடனே செயல்படுத்தப்போகிறறோம். இனி யாரும் குட்கா, பான்மாசாலாவை தமிழகத்தில் விற்கவோ, வாங்கவோ முடியாது '' என்று தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு