Published:Updated:

``ஸ்டாலினுக்கு நன்றி!’’- ஹெச்.ராஜாவின் திருவள்ளுவர் ட்விஸ்ட்...!

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

"பஞ்சமி நில விவகாரத்தை மறைப்பதற்காகத்தான் வள்ளுவர் பிரச்னையைக் கிளப்பியிருக்கிறது தி.மு.க‌. ஆண்டாள் விவகாரத்தில் ஒன்று சேர்ந்து போராடியது போல் திருவள்ளுவர் விவகாரத்தில் ஈடுபடவேண்டும்" எனக் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ஹெச்.ராஜா.

சமூக வலைதளத்தில் திருவள்ளுவர் குறித்த விவாதங்களையொட்டி தமிழகத்தில் பெரும் சர்ச்சைகள் ஏற்பட்டன. மேலும், தஞ்சை பிள்ளையார்பட்டியில் திருவள்ளுவர் சிலை சேதப்படுத்தப்பட்ட சம்பவம் மக்களிடையேயும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. திருவள்ளுவர் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவர் என்ற விவாதம் அனல் பறந்துகொண்டிருக்கும் நிலையில், சென்னையில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஹெச்.ராஜா கலந்துகொண்டார். செல்போனுக்கு அனுமதியில்லாத அந்தக் கூட்டத்தில் புகுந்தோம்.

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

தேசிய ஊடகவியலாளர் ஜெயக்கிருஷணன் பேசத்தொடங்கினார். ``ராஜ ராஜ சோழனுக்கு நடந்த கதைதான் தற்போது திருவள்ளுவருக்கும் நடந்துகொண்டிருக்கிறது. திருவள்ளுவருக்கு எங்கு கோயில் உள்ளது என்று யாருக்காவது தெரியுமா? சென்னை மயிலாப்பூரில் இருக்கிறது. எனது நண்பர்களுடன் அங்கு போய் வந்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர், `எங்க சார் போயிட்டு வந்தீங்க' என்று கேட்டார். நான், `திருவள்ளுவர் கோயிலுக்குச் சென்று வந்தேன்' என்றேன். அவர் பதறிப் போய், `ஏன் சார் அங்கு போனீங்க. அங்கு போனா பதவி பறிபோய்விடும் என்ற சகுனம் இருக்கிறது. இது உங்களுக்குத் தெரியாதா?' என்று கேட்டார். தெரியாது என்றேன். இந்த சகுனத்தால்தான் திராவிடக் கட்சிகளான தி.மு.க, ம.தி.மு.க, கம்யூனிஸ்ட்கள் இக்கோயிலுக்கு வராமல் இருக்கிறார்கள் என்றார். என்னுடைய கேள்வி எல்லாமே, நீங்கள் எப்போது இக்கோயிலுக்குச் சென்று வதந்திக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். இத்தனை வருடங்களாகத் திருவள்ளுவர் கோயிலுக்குப் போகாதது ஏன்? இதை முதலில் தெளிவுபடுத்துங்கள்" என முடித்துக்கொண்டார்.

`தவறாக அச்சிடப்பட்ட
வள்ளுவர் படம்!’ - தமிழ்ப் பல்கலைக்கழக அழைப்பிதழ் சர்ச்சை

அடுத்ததாக ஹெச்.ராஜா மைக் பிடித்து பேசத்தொடங்கினார், "திராவிடப் பொய்யர்கள் புரட்டள்காரர்களால்தான். நாம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாவற்றையும் இழந்துகொண்டிருக்கிறோம். முதலில் நாம் ஸ்டாலினுக்குத்தான் நன்றி சொல்லவேண்டும். பஞ்சமி நில விவகாரத்தை மறைப்பதற்காக தி.மு.க செய்யும் வேலைதான் இது. கடந்த ஐந்தாறு மாதத்திற்கு முன்பு திருவள்ளுவர் காவி உடை அணிந்த படத்தை பா.ஜ.க., ஐ.டி விங் டீம் பதிவு செய்கிறது. அப்போதெல்லாம் இந்தப் பிரச்னை கொண்டுவராமல் இப்போது வருகிறது என்றால் என்ன காரணம். இதற்கு யார் காரணம் என்று முதலில் யோசிக்கவேண்டும். இங்கு நடக்கும் முக்கியப் பிரச்னைகளுக்குக் காரணமே தி.மு.க தான். கலகம் பிறந்தால்தான் வழிபிறக்கும் என்று சொல்வார்கள். முதலில் கலகம் பிறக்கட்டும், தானாக‌ வழியும் பிறக்கும். இந்தக் கோட்பாடு படி பயணிப்பவன் நான்.

``ஸ்டாலினுக்கு நன்றி!’’-  ஹெச்.ராஜாவின் திருவள்ளுவர் ட்விஸ்ட்...!

அத்தோடு மனிதர்கள் எல்லோருமே ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள்தான். மதத்தைச் சாராதது ஒன்று மட்டுமே. அது மிருகம்தான். சுப.வீரபாண்டியன், கி.வீரமணி, திருமுருகன் காந்தி போன்றோர்கள் பொய்யான கருத்துகளைச் சொல்லி இளைஞர்களின் மூளையைக் குப்பைத்தொட்டியாக மாற்றிவிட்டார்கள். தூய்மை இந்தியா திட்டத்தின் மூலமாகச் சுத்தம் செய்வதுபோல் அனைவருடைய மூளைகளைச் சுத்தம் செய்யவேண்டிய இடத்தில் நாம் இருக்கிறோம். சாதி அடையாளம் தப்பில்லை. மொழி, மற்ற இனமொழிகள் அடையாளம் தப்பில்லை என்றால் இந்துமத அடையாளங்கள் மட்டும் ஏன் தப்பு என்கிறீர்கள். இதை நாம் கேள்வி கேட்க வேண்டாமா? இந்தக் கேள்விகளை ஒவ்வொருவரும் கேட்க வேண்டும். திராவிட பாரம்பர்யத்தைக் கொண்ட சில அறிவுஜீவிகள் இந்து மற்றும் ஜாதிய அடையாளங்களைப் பிரித்து வைத்துக்கொண்டு அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்கள். இதை நாம் ஏற்கக்கூடாது!’’ என்றவர் திருவள்ளுவர் விஷயத்துக்கு மாறினார்.

இன்னும் ஓயாத சர்ச்சை... அல்லல்படும் அய்யன் வள்ளுவர்!

’’திருவள்ளுவர் திருக்குறளை இந்து சனாதன அடிப்படையில்தான் கட்டமைத்திருக்கிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை. இதற்கு ஓராயிரம் ரெக்கார்டுகளை நம்மால் காட்டமுடியும். திருக்குறளில் உள்ள 1330 குறள்களிலும் நம்முடைய சனாதன கொள்கைகளைத்தான் சொல்லியிருக்கிறது. திருவள்ளுவர் இந்துதான் என்பதற்கு பூர்ண லிங்கம் பிள்ளை என்பவர் செய்த ஆய்வு முன்னுதாரணமாக இருக்கிறது. பிராமணியத்தைப் பெரிதும் விமர்சித்து வந்தவரான பூர்ண லிங்கம் பிள்ளையே திருவள்ளுவரின் குறள்களை ஆராய்ந்து அவர் இந்துதான், சமணர் அல்ல என்று கூறியிருப்பதாக விக்கிப்பீடியாவில் தெள்ளத் தெளிவாக இருக்கிறது. அத்தோடு ஒளவையார் படத்தில் திருவள்ளுவர் எப்படி வருகிறார். பூணூல் போட்டுக்கொண்டு, காவி வேடத்தில்தான் வருகிறார். இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டும். இவர்களுக்கு இன்னும் தெளிவு வேண்டுமானால் என்னிடம் கேளுங்கள் நான் சொல்கிறேன்.

``ஸ்டாலினுக்கு நன்றி!’’-  ஹெச்.ராஜாவின் திருவள்ளுவர் ட்விஸ்ட்...!

வைரமுத்து ஆண்டாளைப் பற்றித் தரக்குறைவாக விமர்சனம் செய்த போது நாம் கடுமையாகப் போராட்டம் செய்ததன் விளைவாக அவர் பத்திரிகையில் எழுதுவதையே நிறுத்திவிட்டார். இதுபோன்று மதத்திற்கு எதிரான விஷயங்கள் நடக்கும் போது அனைவரும் ஒன்றுகூட வேண்டும். அத்தோடு திராவிடக் கட்சி இங்கு பிழைப்பு நடத்துவதற்காக நம்மைப் பிளவுபடுத்தும் வேலையில் இறங்கியிருக்கிறது. அவர்களுக்கு நாம் யார்; நமது கோட்பாடு என்ன; அவர்களால் நாம் இழந்தவை என்ன என எல்லாவற்றையும் ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துரைக்க வேண்டும்!" என்றார்.

கூட்டம் நிறைவடைந்தது!

அடுத்த கட்டுரைக்கு