Published:Updated:

``தமிழுக்கும் சமஸ்கிருதத்துக்கும் இடையே எங்கேயிருந்து சண்டை வந்தது?'' - ஹெச்.ராஜா விளக்கம்

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

`இந்தியாவில் பல்வேறு மொழிகளுக்கு இடையே பொதுவானதொரு இணைப்பு மொழியாக சம்ஸ்கிருதம் வரவேண்டும்' என அம்பேத்கர் சொல்லியிருப்பதாகச் சொல்கிறார் ஹெச்.ராஜா!

`தஞ்சைப் பெரிய கோயிலில் தமிழில் குடமுழுக்கு செய்யவேண்டுமா அல்லது சம்ஸ்கிருதத்தில் கும்பாபிஷேகம் செய்யவேண்டுமா...' என்ற சர்ச்சைக்குத் தீர்வாக இரண்டு மொழிகளிலும் நடத்தலாம் என்று தீர்ப்பளித்திருக்கிறது மதுரை உயர்நீதி மன்றம்!

ஆனால், இந்தத் தீர்ப்பு வெளிவருவதற்கு முன்பே, `தமிழில் குடமுழுக்கு செய்தால், அரசு கவிழும்' என்று கூறி வழக்கம்போல், தமிழக அரசியலை அதிரவைத்தவர் பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா!

இந்தா நிலையில், பா.ஜ.க தேசியச் செயலாளர் ஹெச்.ராஜாவிடம் பேசினேன்....

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``குடமுழுக்கை தமிழில் நடத்தினால், அரசு கவிழும் என்ற தங்களது பேச்சு, தமிழக அரசுக்கான மிரட்டலா?''

``ஆகம விதிகளை மீறினால் அரசனுக்கு ஆபத்து என்று சில ஆன்மிகவாதிகள் சொல்கிறார்கள். அரசன் என்று சொன்னால், இன்றைய சூழ்நிலையில் முதல் அமைச்சர்தானே? அதைத்தான் நானும் சொன்னேனே தவிர, மிரட்டல் எதுவும் விடுக்கவில்லை.''

``குட்டக் குட்ட குனியுற கூட்டம் நாங்க இல்ல!" அ.தி.மு.க-வுக்கு எதிராக ஏன் கொதித்தார் பிரேமலதா?

``குறிப்பிட்ட மொழியில்தான் கடவுள் வழிபாடு நடத்த வேண்டும் என்று ஆகம விதிகளில் குறிப்பிடப்படவில்லை என்கிறார்களே?''

``1997-ல் கருணாநிதி முதல்வராக இருந்தபோது எந்த மொழியில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது? அன்றைக்கெல்லாம் வாய் மூடி இருந்தவர்கள் இப்போது ஏன் பேசுகிறார்கள்? தஞ்சை பெருவுடையார் கோயிலில், நேர்வாசல் வழியாகப் போகாமல் வேறு வாசல் வழியாகத்தான் செல்வார் கருணாநிதி. எனவே, இதுபோன்ற விஷயங்களில் பா.ஜ.க-வினரைவிடவும் தி.மு.க-வினருக்கு அதிக நம்பிக்கை உண்டு!

இப்படியொரு கோரிக்கையின் பின்னணியில் இருப்பது டேவிட் மணியரசன், சீமான், ஜெய்னுலாபுதின், அகமது கபீர் போன்ற இந்துக்கள் அல்லாத கிறித்துவ, இஸ்லாமிய நபர்கள்தான். நாத்திகர்கள் மற்றும் இந்து மதவெறி சக்திகள் இந்துமதத்துக்கு எதிராகத் தொடுத்திருக்கும் யுத்தம்! ஏனெனில், மதம் வேறு, மொழி வேறு. குஜராத்திலுள்ள இந்துவின் மொழி குஜராத்தி, அதேபோல், ஆந்திராவில் தெலுங்கு, கேரளாவில் மலையாளம் என்று தனித்தனி மொழிகள் உண்டென்றாலும்கூட, எல்லோருக்கும் பொதுவாக இந்து மதமும் அதன் சாஸ்திர சடங்குகளும் உண்டு. ஆனால், இந்து மதத்தில் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இந்துக்கள் அல்லாதவர்களும் நாத்திகர்களும் எப்படிப் பேச முடியும்?''

தஞ்சாவூர் பெரிய கோயில்
தஞ்சாவூர் பெரிய கோயில்

`` `ஆகம அறிஞரான சத்தியவேல் முருகனார்' ஆகமத்தில் மொழி பற்றி குறிப்பிடவில்லை' என்று சொல்கிறாரே?''

``இதுவரை எந்த மொழியில் நடைபெற்று வருகிறது என்பதுதான் பேச்சு. சில பேர், சில பேரை விலைக்கு வாங்கியிருக்கலாம். சில பேர், சில காரணங்களுக்காக பழக்கத்தை மீறிக்கூடப் பேசலாம். இந்து மத பொட்டினை அவமானமாக நினைத்து அழித்த, மு.க.ஸ்டாலினுக்கு இந்து மதம் பற்றிப் பேச அதிகாரம் கிடையாது.''

``ஆகம அறிஞரான சத்தியவேல் முருகனாருக்கு உங்கள் பதில் என்ன?''

``இதுவரை என்ன பழக்கம் இருந்ததோ அதைத்தான் பின்பற்ற வேண்டும் என்கிறேன். தமிழ்த் தேசியப் பிரிவினைவாதிகள் சிலரின் கோரிக்கைகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது என்று ஆன்மிகவாதிகளுக்கு நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏற்கெனவே தமிழ் மொழியை வைத்துத்தான் இந்து மதத்தைச் சீரழிக்கின்ற ஈ.வெ.ரா., அண்ணாதுரை, கருணாநிதி போன்றவர்கள் வந்தார்கள்.''

சீமான்
சீமான்

``ஆன்மிக நம்பிக்கையாளர்களான பொதுமக்களே, `தமிழ் மொழியில்தான் குடமுழுக்கு வேண்டும்' என்று கடந்த காலங்களில் கேட்டிருக்கிறார்களே?''

``தமிழ் மொழிக்கும் சம்ஸ்கிருதத்துக்கும் இடையே எங்கேயிருந்து சண்டை வந்தது? கால்டுவெல் என்கிற அந்நிய பிஷப், இங்கே வந்து மதமாற்றம் செய்வதற்கு முன்பு, நடைபெற்ற சிலப்பதிகாரம் காலத்தில் கோவலனுக்கும் கண்ணகிக்கும் திருமணம் எப்படி நடைபெற்றது என்று உங்களுக்குத் தெரியுமா?

வயது முதிர்ந்த அந்தணன், வேதத்தின் வழியைக் காட்ட, அக்னியை வலம் வந்துதான் அந்தத் திருமணமே நடந்துள்ளது. எனவே, இப்போது எழுந்திருக்கும் இந்தக் கோரிக்கை என்பது மொழிப்பற்றால் வந்தது அல்ல. இந்து மதத்தை அழிப்பதற்காக ஆங்கில ஏகாதிபத்தியத்தின் கைக்கூலிகளும் ஈ.வெ.ரா வகையறாக்களும்தான் இப்படிப் பேசுகிறார்கள். பத்திரிகையாளர்களான நீங்களும் இதுபோன்ற கேள்விகளை கேட்டு சிண்டு முடியப் பார்க்காதீர்கள்.

``இந்திய நாட்டில் பல்வேறு மொழிகள் இருந்தாலும்கூட, இவர்களிடையே ஒருவருக்கொருவர் தொடர்புகொள்ள வசதியாக, இணைப்பு மொழியாக கடந்த காலங்களில் சம்ஸ்கிருதம் மொழி இருந்துள்ளது. எனவே, வரும் காலத்திலும் சம்ஸ்கிருதம் இணைப்பு மொழியாக வர வேண்டும்' என்று அம்பேத்கரே கூறியிருக்கிறார். அதைப்பற்றி நீங்கள் பேச மறுப்பது ஏன்?''

நாளை மறுநாள் தண்டனை விவரம் அறிவிப்பு!- அயனாவரம் சிறுமி வன்கொடுமை வழக்கில் போக்ஸோ நீதிமன்றம் #LiveUpdates

``கடவுளை வழிபாடு செய்யத் தகுதியில்லாத மொழியா தமிழ்?''

``இல்லவே இல்லை.... தேவாரம், திருவாசகம், நாலாயிர திவ்யப் பிரபந்தம், கம்பராமாயணம் என எல்லாமே தமிழில்தானே இருக்கிறது. தமிழைத், `தெய்விக மொழி' என்றுதான் எல்லா ஆன்மிகவாதிகளும் சொல்கிறார்கள். தமிழ் - சமஸ்கிருதம் என இரண்டு மொழிகளிலும்தான் வழிபாடுகள் நடைபெறும் என்றுதான் இப்போதும் சொல்லியிருக்கிறார்கள். எனவே, இந்த இரண்டு மொழிகளிலும்தான் நடக்கும்.

தமிழ்நாட்டில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் 44,000 கோயில்களில், 37,000 கோயில்களில் பிராமணர் அல்லாதவர்கள்தான் பூசாரிகளாக இருக்கிறார்கள்.

இந்துக் கோயிலில் தமிழில் வழிபாடு செய்ய வேண்டும் என்று கேட்கும் ஜெய்னுலாபுதீனிடம், `மசூதியில் ஏன் நீங்கள் அரபு மொழியில் ஓதுகிறீர்கள்...' என்று நீங்கள் ஏன் கேட்பதில்லை?''

தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயில்

``கடவுள் வழிபாடு செய்ய ஆகம விதிகளின்படி கற்றுத்தேர்ந்தவர்களேகூட இன்றைக்கும் தமிழ்நாட்டில் அர்ச்சகர்களாக முடியவில்லையே?''

``நல்ல நாள், பெரிய நாளில் ஆரம்பித்து சாஸ்திர சம்பிரதாயங்களை மக்களுக்கு எடுத்துச்சொல்லி மக்களை வழிநடத்தக் கூடியவர்கள் கோயில் பூசாரிகள். வெறுமனே தீபம் காட்டுவதற்கு மட்டும் நான் 3 மாதம் படித்துவிட்டு வருவேன் என்பதல்ல. ஆகம விதிமுறைகளைப் படிப்பதென்பது, 5 வயதிலேயே பாடசாலையில் சேர்ந்து, 12 வருடங்களாக புலால் உண்ணாமல், ஆசார அனுஷ்டானங்களையெல்லாம் அனுசரித்து கற்றுத் தேற வேண்டும். அப்படிக் கற்றுத் தேர்ந்தவர்கள் எவராயிருந்தாலும் அர்ச்சகர்களாக ஏற்றுக்கொள்ளத் தக்கவரே''

``அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் இயற்றிய தமிழ்நாட்டில், இன்னும் நடைமுறைப்படுத்த முடியாத சூழ்நிலையில், கேரளாவில் அமல்படுத்தப்பட்டிருக்கிறதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''

ஹெச்.ராஜா
ஹெச்.ராஜா

``ஆகம விதிகளின்படி கற்றுத் தேர்ந்தவர்கள் கேரளாவில் இருப்பதனால், அவர்களை அர்ச்சகர்களாக நியமித்திருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இங்கே யாரும் அப்படிக் கற்றுத் தேறவில்லையே... `கோயிலில் பூஜை செய்கிறவனுக்கு எங்கே சோறு கிடைக்கிறது...' என்ற எண்ணத்தினால் எல்லோரும் ஐ.ஏ.எஸ் படிக்க நினைக்கிறார்களோ என்னவோ...!''

அடுத்த கட்டுரைக்கு