Published:Updated:

முருகனுக்கு ஹெச்.ராஜா ஸ்கெட்ச்... சீட் மறுக்கப்படும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்! - கழுகார் அப்டேட்ஸ்

கழுகார் அப்டேட்ஸ்
கழுகார் அப்டேட்ஸ்

கழுகாரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. ``உமக்கான தகவல்கள் மெசஞ்சரில் வந்துசேரும்... எடுத்துக்கொள்ளும்’’ - சுருக்கமாகப் பேச்சை முடித்துவிட்டு தொடர்பைத் துண்டித்தார். சற்று நேரத்தில், அவர் அனுப்பிய தகவல்கள் நமது மெசஞ்சரில் வந்து கொட்டின.

எல்.முருகனைப் பின்னுக்குத் தள்ளிய ஹெச்.ராஜா?!

தேவர் குருபூஜையில் கலந்துகொள்ள தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன், அக்டோபர் 30-ம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொனுக்கு வந்திருந்தார். முதன்முறையாக குருபூஜைக்கு வரும் முருகனை முன்னே அழைத்துச் செல்லாமல், அவரைக் கூட்டத்தில் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஹெச்.ராஜா முன்னே சென்றது கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தேவர் நினைவிடப் பொறுப்பாளர்களும், முருகனை மறந்துவிட்டு ஹெச்.ராஜாவுக்குப் பரிவட்டம்கட்டி மரியாதை செய்தனர். அப்போதுகூட, அருகில் நின்றிருந்த முருகனுக்கும் மரியாதை செய்யுங்கள் என்று ராஜா கூறவில்லையாம்.

ஹெச்.ராஜா, எல்.முருகன்
ஹெச்.ராஜா, எல்.முருகன்

அதனால், முருகனின் முகம் வாடிவிட்டதாம். இதைச் சற்று தாமதமாகக் கவனித்த பா.ஜ.க துணைத் தலைவர் நயினார் நாகேந்திரன், உடனே நினைவிடப் பொறுப்பாளர்களிடம் சொல்லி, முருகனுக்குப் பரிவட்டம் கட்டி மரியாதை செய்யவைத்திருக்கிறார். கட்சியின் மாநிலத் தலைவருக்கு முக்கியத்துவம் தராமல், எந்தப் பொறுப்பிலும் இல்லாத ஹெச்.ராஜா தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டது புகைச்சலை உருவாக்கியிருக்கிறது.

ராஜானு பேரு வெச்சுருக்குறதாலேயே தனக்கு மட்டும்தான் மரியாதை கிடைக்கணும்னு நினைக்கிறாரோ?!

ஊர் ஊராகச் சுற்றும் பன்னீர்!

கடந்த ஒரு மாதமாக, சென்னைக்கும் தேனிக்குமிடையே காரில் பறந்துகொண்டேயிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். பெரியகுளத்தில் வசிக்கும் தன் தாயாரைப் பார்த்துவிட்டு, தனது தொகுதியான போடிக்குக் கிளம்பும் பன்னீர், பல்வேறு திட்டப்பணிகளைப் பார்வையிட்டுவருகிறார். சமீபத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும் கிராமமான மேலப்பரவுக்கு நடந்தே சென்று அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். கோயில் பணிகள், கட்சி நிர்வாகிகளின் வீட்டு விசேஷங்கள் என்று எதையும் விடுவதில்லை. `எல்லாம் தேர்தலுக்கான அச்சாரம்தான்’ என்கிறது லோக்கல் அ.தி.மு.க. ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் என்று தேனி மாவட்டத்துக்குள் நான்கு சட்டமன்றத் தொகுதிகள் வருகின்றன. இந்தத் தேர்தலில் அந்த நான்கையும் வென்றே தீருவது என்பதில் பன்னீர் உறுதியாக இருக்கிறாராம்.

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

எதிர்முகாமான தி.மு.க-விலோ, தேனி வடக்கு மாவட்டப் பொறுப்பாளராக தங்க தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டிருக்கிறார், அவருக்கு போடி, பெரியகுளம் தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. வரும் சட்டமன்றத் தேர்தலில் போடியில் பன்னீரை எதிர்த்து தங்கம் நிற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ``2019 நாடாளுமன்றத் தேர்தலில், மற்ற அனைத்துத் தொகுதிகளிலும் அ.தி.மு.க மண்ணைக் கவ்வியபோதும், தேனி தொகுதியில் அ.தி.மு.க-வை வெற்றிபெறவைத்து, மகனை எம்.பி-யாக்கியவர் பன்னீர். வரும் சட்டமன்றத் தேர்தலிலும், தன்னுடைய செல்வாக்கைத் தக்கவைத்துக்கொள்ள வேண்டிய நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. இதனால்தான், ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்திருக்கிறார்’’ என்கிறார்கள் அ.தி.மு.க-வினர்.

பன்னீரோட திட்டத்துல வென்னீரை ஊத்திடாதீங்கப்பு!

``தீபாவளி பர்சேஸுக்குக்கூட போக முடியலையே?’’

`வேலூர் மாவட்ட சமூக நலத்துறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவரின் ஹேண்ட்பேக்கில் தங்கக்காசுகள் குலுங்குகின்றன’ என்று சென்ற முறை கூறியிருந்தேன் அல்லவா... விஷயத்தைப் படித்துவிட்டு அந்தப் பெண் அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் ரகசியமாகக் கண்காணிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். `குழந்தைத் திருமணங்களில் பெண் அதிகாரி இதுவரை என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுத்திருக்கிறார்’ என்பது குறித்தும் அலசிவருகிறது விஜிலென்ஸ். இதனால், பதறிப்போயிருக்கும் அந்தப் பெண் அதிகாரி, தன்னைப் பற்றிப் போட்டுக்கொடுப்பது யாரென்று கேட்டு, தனக்குக் கீழுள்ள அலுவலர்களை லெஃப்ட் அண்ட் ரைட் வாங்கியிருக்கிறார். ஹேண்ட்பேக்கில் பணம் எதையும் வைத்துக்கொள்ளாமல், டிஜிட்டல் இந்தியாவை நோக்கி நகர்ந்திருக்கிறாராம்.

வேலூர்
வேலூர்

``விஜிலென்ஸ் பீதியால தீபாவளி பர்சேஸுக்குக்கூட கடைத்தெரு பக்கம் போக முடியலையே?’’ என்று புலம்புகிறாராம் அந்தப் பெண் அதிகாரி.

இதைப் போட்டுக்கொடுத்தது யாருனு சமூக நலத்துறை அலுவலர்களைத் திரும்பவும் டார்ச்சர் பண்ணுவாரே?!

வசூல் வேட்டையில் மூவரணி முதல் ஹேண்ட்பேக்கில் தங்கக்காசு வரை! - கழுகார் அப்டேட்ஸ்
``சுட்டுக் கொன்னுடுவேன்!’’
மிரட்டும் வனத்துறை அதிகாரி

நீலகிரி மாவட்டத்தில் அமைந்திருக்கும் முதுமலை புலிகள் காப்பகத்திலிருந்து பழங்குடிகளை வெளியேற்றி, அவர்களை வேறு இடங்களில் மீள்குடியேற்றம் செய்யும் பணிகள், தற்போது தீவிரமாக நடைபெற்றுவருகின்றன. இதற்காக மத்திய அரசு கோடிக்கணக்கான ரூபாயையும் ஒதுக்கியிருக்கிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு முதற்கட்ட மீள்குடியேற்றப் பணிகள் நடந்தபோது, அந்த நிதியில் வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடு செய்துவிட்டதாகச் சர்ச்சை எழுந்து, அது தொடர்பாக வழக்கு பதிவும் செய்யப்பட்டது.

முருகனுக்கு ஹெச்.ராஜா ஸ்கெட்ச்... சீட் மறுக்கப்படும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்! - கழுகார் அப்டேட்ஸ்

தற்போது இரண்டாம்கட்ட மீள்குடியேற்றப் பணிகள் நடந்துவரும் நிலையில், பென்னை பகுதியில் குடியிருக்கும் பழங்குடிகள் தங்கள் பூர்வீக வாழ்விடத்தைவிட்டு வெளியேறத் தயக்கம் காட்டிவருகின்றனர். அவர்களிடம் வனத்துறை அதிகாரி ஒருவர் மிகக் கடுமையாக நடந்துகொள்கிறாராம். சில தினங்களுக்கு முன்னர் பென்னை பழங்குடி கிராமத்துக்குச் சென்ற அவர், ``நீங்கள் காட்டைவிட்டு வெளியேறாவிட்டால், துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன்” என்று மிரட்டிச் சென்றிருக்கிறாராம். இதனால், அந்தக் கிராமமே அச்சத்தில் உறைந்திருக்கிறது.

அவரு வனத்துறை அதிகாரியா... இல்லை வனக்கொள்ளையனா?

``ஒரு துண்டுக்காக இப்படியா சண்டை போடுறது?’’

சிவகங்கை மாவட்டம், மானாமதுரையில் அ.ம.மு.க மற்றும் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் அ.தி.மு.க-வில் இணையும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், அமைச்சர் ஜி.பாஸ்கரன், அ.தி.மு.க மாவட்டச் செயலாளர் செந்தில்நாதன், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ-வான நாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது, கட்சியினருக்கு அ.தி.மு.க கொடி வண்ணத்தில் துண்டுகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.

மானாமதுரை விழா
மானாமதுரை விழா
மானாமதுரை விழா
மானாமதுரை விழா

அதை வாங்குவதற்கு முண்டியடித்துக்கொண்டு தொண்டர்கள் மோதிக்கொள்ளவும் ஏரியாவே களேபரமாகிவிட்டது. ``இதுக்கு மேலயும் இங்கே இருந்தா, நம்ம சட்டையைக் கிழிச்சிருவானுங்கபோலருக்கு. ஒரு துண்டுக்காக இப்படியா சண்டை போடுறது?’’ என்று கொதிப்படைந்த அமைச்சர் பாஸ்கரன், விட்டால் போதுமென்று அங்கேயிருந்து அவசர அவசரமாகக் கிளம்பிவிட்டார்.

வேட்டியை உருவாம விட்டாங்களேனு சந்தோஷப்படுங்க!

``ஒன்றரை மாதத்துக்காக ஒரு மாற்றமா?’’

நவம்பர் 3-ம் தேதி, தமிழகத்திலுள்ள உயர் போலீஸ் அதிகாரிகள் மூவரின் பணியிடமாற்ற அறிவிப்பு வெளியானது. அதில், குடிமைப் பொருள்கள் வழங்கல்துறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் டி.ஜி.பி-யாக இருந்த ஜாபர் சேட், தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் இயக்குநராக மாற்றப்பட்டிருக்கிறார். டிசம்பர் 19-ம் தேதியுடன் அவர் ஓய்வுபெறவிருக்கும் நிலையில், இந்தப் பணியிடமாற்றம் நடந்திருக்கிறது.

ஜாபர் சேட்
ஜாபர் சேட்

‘ரிட்டயர்டாக ஒன்றரை மாதமே இருக்கும் நிலையில் இந்த மாற்றம் அவசியமா?’ என்ற கேள்வி அதிகாரிகள் மத்தியில் எழுந்திருக்கிறது. அரசாங்கம் நினைச்சா ரிட்டயர்ட்மென்ட்டுக்கு ஒரே ஒரு நாள் இருக்கும்போதுகூட டிரான்ஸ்ஃபர் போடும்னு தெரியாதா?

ஜோதி நிர்மலாவுக்கு எதிராக ஒத்துழையாமை இயக்கம்!

பதிவுத்துறைத் ஐ.ஜி-யாக இருந்த ஜோதி நிர்மலா, தமிழக மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராக மாற்றப்பட்டிருக்கிறார். `ஜோதி நிர்மலாவின் நியமனத்தைப் பற்றி முன்கூட்டியே ஏன் தகவல் சொல்லவில்லை?’ என்று துறையின் மேலிட நபர் டென்ஷனாகியிருக்கிறார். இதற்கிடையில், நவம்பர் 2-ம் தேதி முறைப்படி பொறுப்பேற்பதற்காக, வள்ளுவர்கோட்டத்தில் அமைந்திருக்கும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் அலுவலகத்துக்கு ஜோதி நிர்மலா சென்றிருக்கிறார்.

ஜோதி நிர்மலா
ஜோதி நிர்மலா

அவரை வரவேற்கக்கூட யாரும் வரவில்லையாம். திக்குமுக்காடிப்போய், அவரே தன்னுடைய அறையைத் தேடிக் கண்டுபிடித்து இருக்கையில் அமர்ந்திருக்கிறார். `ஜோதி நிர்மலா வரும்போது யாரும் வரவேற்கக் கூடாது’ என்று மேலிட நபர் வாய்மொழி உத்தரவு போட்டிருந்ததுதான் இதற்குக் காரணமாம். நிறுவன அதிகாரிகளின் இந்த ஒத்துழையாமையைக் கண்டு அதிர்ந்துபோயிருக்கிறார் நிர்மலா.

ஜோதியின் பிரகாசம் குறைஞ்சிடுச்சுனு சொல்லுங்க!

கைதான கொள்ளையன்...
காவல்துறை அதிகாரிகளிடையே சண்டை!

சென்னை, தி.நகர் நகைக்கடை ஒன்றில், அக்டோபர் 20-ம் தேதி கிலோக் கணக்கில் தங்க நகைகள் கொள்ளைபோயின. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த மார்க்கெட் சுரேஷ் இந்த வழக்கில் தேடப்பட்டுவந்தார். திருவள்ளுரிலிருக்கும் சுரேஷின் காதலியை வளைத்துப் பிடித்த தனிப்படை போலீஸ், விசாரணைக்காக அவரை அழைத்துக்கொண்டு சென்னை வந்துவிட்டது. ஆனால், சுரேஷ் அங்கு வருகிறாரா என்று கண்காணிக்க காவலர்களைப் பணியமர்த்தவில்லை. இந்தச் சமயத்தில் மதுபோதையில் காதலியின் வீட்டுக்கு வந்த சுரேஷைப் பார்த்ததும், அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கடுமையாக அவரைத் தாக்கியிருக்கிறார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டு அங்கு சென்ற திருவள்ளூர் போலீஸார், சுரேஷை மீட்டு விசாரித்தபோதுதான் அவர் பிரபல கொள்ளையன் என்பது தெரியவந்திருக்கிறது. திருவள்ளூர் லிமிட்டிலும் சுரேஷ் மீது வழக்குகளும் இருக்கவே, அவரைக் கைதுசெய்தனர்.

போலீஸார்
போலீஸார்

அதைக் கேள்விப்பட்ட பிறகே, தனிப்படை போலீஸ் திருவள்ளூருக்குச் சென்றிருக்கிறது. அங்கு தனிப்படையில் இடம்பெற்றிருக்கும் உதவி கமிஷனர் மகிமைவீரனுக்கும், திருவள்ளூர் டி.எஸ்.பி-யான துரைப்பாண்டியனுக்கும் இடையே சுரேஷை யார் கஸ்டடியில் வைத்துக்கொள்வது என்பதில் கடும் வாக்குவாதமே ஏற்பட்டுவிட்டதாம். கடைசியில் சுரேஷை திருவள்ளூர் போலீஸார் தங்கள் கஸ்டடியில் வைத்துக்கொள்ள, வெறும் கையோடு திரும்பியிருக்கிறார்கள் சென்னை தனிப்படையினர். அதேநேரத்தில், சுரேஷின் கூட்டாளியான அப்பனு என்கிற வெங்கடேசனை சென்னை போலீஸ் கைதுசெய்திருக்கிறது. வடபழனியில் முதல்வர் பங்கேற்ற தனியார் மருத்துவமனைத் திறப்பு விழாவில் இருந்ததால்தான், கொள்ளையன் சுரேஷைப் பிடிக்க காவலர்களைப் போட முடியவில்லை என்று சால்ஜாப்பு சொல்லி நடவடிக்கையிலிருந்தும் தப்பியிருக்கின்றனர் அவர்கள்.

பிரதான குற்றவாளியை விட்டுட்டு மத்தவங்களைவெச்சுக்கிட்டு என்ன பண்ணப் போறீங்க ஆபீஸர்ஸ்?

``இவங்களுக்கு சீட் கொடுக்காதீங்க!’’
- ஐபேக் அதிரடி

மீண்டும் போட்டியிட்டால் ஜெயிக்க வாய்ப்பில்லாத தி.மு.கழக எம்.எல்.ஏ-க்களின் பட்டியலை ஐபேக் தயாரித்துவருகிறது. மண்டலவாரியாக இல்லாமல், ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தொகுதிகளில் மட்டும் சர்வே செய்து முதற்கட்ட பட்டியலைத் தயாரித்திருக்கும் ஐபேக், அந்தப் பட்டியலை ஸ்டாலின் முன்பு சமீபத்தில் சமர்ப்பித்திருக்கிறது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

அதில், நத்தம் ஆண்டி அம்பலம், வேளச்சேரி வாகை சந்திரசேகர், சங்கராபுரம் உதயசூரியன் ஆகியோரின் பெயர்கள் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கின்றனவாம். இவர்களைத் தவிர்த்துவிட்டு, வேறு யாருக்காவது சீட் கொடுக்கலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறதாம் ஐபேக். இதுபோல, இன்னும் நான்கு லிஸ்ட் எடுக்கப்படவிருப்பதாகக் கூறுகிறார்கள்.

யார் யார் தலை உருளப்போகுதோ?

அடுத்த கட்டுரைக்கு