Published:Updated:

`தரம் இல்லாதவர்களுக்கு பதவி தரப்பட்டால் இப்படித்தான்'- அமைச்சரை சாடும் வசந்தகுமார்!

H.vasantha kumar
H.vasantha kumar

``ஒரு அமைச்சர் என்பவர் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் பிரதிநிதி. தரம் இல்லாதவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டால் இப்படித்தான் தரக்குறைவாகப் பேசுவார்கள்” என ஹெச்.வசந்தகுமார் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நடைபெற உள்ள நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியின் வேட்பாளராக நாகர்கோவிலைச் சேர்ந்த ரூபி மனோகரன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பிரசாரத்தை தொடங்குவதற்காக, கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஹெச்.வசந்தகுமார் இன்று விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார்.

h.vasantha kumar m.p
h.vasantha kumar m.p

தொடர்ந்து விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “நாங்குநேரி தொகுதியில் போட்டியிடுவதற்கு தி.மு.க, காங்கிரஸ் தொண்டர்கள் பலரும் விருப்பம் தெரிவித்தனர். ஒரு சிலர் சுயேச்சையாக வேட்புமனுத் தாக்கல் செய்வதாகக்கூட சொல்லிருந்தனர். ஒரு ஆர்வத்தில் அவர்கள் அதைச் சொல்லியிருக்கலாம். இருப்பினும் யாரும் சுயேச்சையாக நின்று போட்டியிட மாட்டார்கள். அனைவரும் இணைந்தே செயல்படுவார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில் சாகர்மாலா திட்டத்தின் கீழ் மத்திய அரசு எந்தவித திட்டத்தையும் நிறைவேற்ற முடியாது. பரப்பளவில் மிகச் சிறிய மாவட்டமான குமரி மாவட்டத்தில் சுற்றுச்சூழல், இயற்கை வளம் ஆகியவை பாதுகாக்கப்பட வேண்டும். எனவே, குமரியில் கடலுக்குள் புதிய துறைமுகம் அமைப்பது என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது.

காங்கிரஸ் ஆட்சியில்கூட சேது சமுத்திர திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்த முடியாமல் போனது. ஒரு திட்டத்தை சரியாகச் செயல்படுத்த முடியவில்லை எனில் அதை அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். பாதை மட்டும் நமக்கு கிடைத்தால்போதும் என்று நினைத்து சேது சமுத்திரத் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், மக்களின் மத உணர்வை அது பாதிக்கும் என்பதால் அத்திட்டத்தை அந்த நேரத்தில் செயல்படுத்த முடியவில்லை. ஆனால், மீண்டும் மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சேது சமுத்திர திட்டத்தைச் செயல்படுத்தும் என்பதை நான் கூற முடியாது. ஏனெனில், மக்களின் மனநிலையைதான் நம்மால் எடுத்துக்கூற முடியும்.

h.vasantha kumar m.p
h.vasantha kumar m.p

திட்டம் என்பது கைவிடப்பட்ட பிறகு, அது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறபோதிலும் அதைச் செயல்படுத்துவதா வேண்டாமா என்பதை மத்திய அரசுதான் முடிவு செய்ய முடியும். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்காக மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. ஆனால், இந்தியாவில் 80% பொருள்கள் சீனா, இந்தோனேசியா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இதனால் சில உற்பத்தியாளர்கள் வரியைக் கட்டாமல் லாபமடைகின்றனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 சதவிகிதத்துக்கும் கீழ் வந்துவிட்டது. ஆகவே, தொழில் வளர்ச்சி ஏற்பட வேண்டுமெனில் வெளிநாடுகளில் இருந்து பொருள்கள் இறக்குமதி செய்யப்படுவது நிறுத்த வேண்டும். உள் நாட்டுக்குள்ளேயே இறக்குமதியான பொருள்களைத் தயார் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனாலேயே பல கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாகும். அதன் மூலம் தொழில் வளர்ச்சியும் ஏற்படும். காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் அகண்ட பொருளாதாரத்துக்கு மாற்று ஏற்பாடுகள், திட்டங்கள் இருந்தன. ஆனால், அதை தற்போது உள்ள அரசு அதில் கவனம் செலுத்தவில்லை” என்றார்.

h.vasantha kumar
h.vasantha kumar

இறுதியாகப் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் தொடர் சர்ச்சைப் பேச்சு குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்துப் பேசிய அவர், “ஒரு அமைச்சர் என்பவர் தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்களின் பிரதிநிதி. தரம் இல்லாதவர்களுக்கு அமைச்சர் பதவி தரப்பட்டால் கே.டி.ராஜேந்திர பாலாஜி போன்றோர்கள் இப்படித்தான் தரக்குறைவாகப் பேசுவார்கள்” என்றார்.

பின் செல்ல