Published:Updated:

`கிரண்பேடி விழாவில் ஹிஜாப் சர்ச்சை; காவல்துறை தடியடி!' - போர்க்களமான மாஹே அரசுக் கல்லூரி

கிரண் பேடி
கிரண் பேடி

ஆளுநர் கிரண்பேடிக்கு கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைத் தாக்கிய காவல்துறையினருக்கு இந்திய மாணவர் சங்கம் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி புதுச்சேரியின் பிராந்தியங்களில் ஒன்றான மாஹேவுக்கு 2 நாள் சுற்றுப் பயணமாக இன்று காலை ரயிலில் சென்றடைந்தார். தொடர்ந்து அங்கு அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் மற்றும் அரசுத் துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். இதற்கிடையில் மகாத்மா காந்தி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்த மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

மாணவர்கள் போராட்டம்
மாணவர்கள் போராட்டம்

அப்போது அங்கு திரண்ட மாணவ மாணவிகள் குடியிருப்பு திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகக் கிரண்பேடிக்கு கறுப்புக்கொடி காட்டியதோடு `Go Back’ என்ற கோஷத்தையும் எழுப்பினர். தொடர்ந்து அவர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் தடியடி நடத்தினர். அதனால் அந்தப் பகுதி போர்க்களமாகக் காட்சியளித்தது.

காவல்துறையினர் தடியடி மூலம் மாணவர்களைத் தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியானது. அந்த வீடியோ காட்சியில் காவல்துறையைச் சேர்ந்த ஒருவர் தனது காலால் மாணவர்களை எட்டி உதைக்கும் காட்சியும் இடம்பெற்றிருந்தது. காவல்துறையினர் அரங்கேற்றிய இந்தச் சம்பவம் காட்டுமிராண்டித் தனமானது என்று கண்டித்திருக்கும் இந்திய மாணவர் சங்கம், கைது செய்யப்பட்ட மாணவர் சங்க நிர்வாகிகளையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருக்கிறது. இது தொடர்பாக இந்திய மாணவர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் ஜெயப்பிரகாஷ், ``துணை நிலை ஆளுநர் கிரண்பேடிக்கு கறுப்புக்கொடி காட்ட வேண்டும் என்று மாணவர்களுக்கு எந்தத் திட்டமிடலும் இல்லை.

மாஹேவில் அதிகாரிகளுடன் கிரண்பேடி
மாஹேவில் அதிகாரிகளுடன் கிரண்பேடி

ஆனால், கிரண்பேடி கலந்துகொள்ளும் விழாவில் ஹிஜாப் அணிந்திருந்த இஸ்லாமியப் பெண்களையும், கறுப்பு நிறத்தில் துப்பாட்டாவை அணிந்திருந்த பெண்களையும் காவல்துறையினர் அனுமதிக்கவில்லை. கேரளத்தை ஒட்டியிருக்கும் மாஹேவின் வரலாற்றில் இதுவரை இப்படி கெடுபிடிகள் நிறைந்த அராஜகப் போக்கு கடைப்பிடிக்கப்பட்டதில்லை. அதைக் கண்டிக்கும் விதமாகத்தான் கிரண்பேடிக்கு கறுப்புக்கொடி காட்டியதோடு, திரும்பிப் போ என்ற கோஷத்தையும் மாணவர்கள் எழுப்பினர். அதேபோல சுமார் 800 மாணவ மாணவிகள் படிக்கும் அந்தக் கல்லூரியில், வெறும் 40 மாணவர்களிடம் மட்டுமே கலந்துரையாடிவிட்டுச் சென்றிருக்கிறார் ஆளுநர் கிரண்பேடி அவர்கள். காவல்துறையின் இந்தக் காட்டுமிராண்டித் தனத்தை இந்திய மாணவர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது” என்றார்.

பின் செல்ல