Published:Updated:

``இந்துக்களின் புனித யாத்திரைக்கு ரூ.50,000 நிதியுதவி!” - புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ( அ.குரூஸ்தனம் )

கைலாஷ், மானசரவோர் போன்ற இடங்களுக்கு புனிதப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரூ.50,000 அரசு நிதியுதவியாக வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ் மற்றும் கந்தசாமி ஆகியோருடன் நான் டெல்லி சென்றிருந்தபோது, மத்திய உள்துறை இணையமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்தோம். அப்போது மாநில அந்தஸ்து தொடர்பான மத்திய அரசின் முடிவு புதுச்சேரி மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தியுள்ளது. எனவே, அதை நீங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினோம்.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை
கைலாஷ் மானசரோவர் யாத்திரை
விகடன்

அதேபோல மத்திய சாலைப் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரியைச் சந்தித்து, விழுப்புரம் - நாகப்பட்டினம் 4 வழிச்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதற்கான நிதியை உடனடியாக ஒதுக்கித் தர வேண்டுமென கோரிக்கை விடுத்தோம்.

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கைலாஷ் மற்றும் மானசரோவர் பகுதிகளுக்கு புனித யாத்திரை செல்கிறார்கள். ஏற்கெனவே ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்கு அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படுகிறது. மத்திய அரசு அந்தத் திட்டத்தை நிறுத்திவிட்டபோதிலும், மாநில அரசு தொடர்ந்து வழங்கிவருகிறது.

கைலாஷ்
கைலாஷ்
விகடன்

மானசரோவர் மற்றும் கைலாஷ் போன்ற இடங்களுக்குச் செல்லும் யாத்ரீகர்கள் குறைவாகவே இருக்கிறார்கள். மனச்சுமையும், பொருளாதார நெருக்கடியும் ஏற்படாமல் அவர்கள் சென்று வருவதற்கு அரசு சார்பில் ஒரு நபருக்கு ரூ. 50,000 நிதியுதவி வழங்கப்படும்.

நிறைய பக்தர்கள் இதன் மூலம் மானசரோவர் செல்ல வாய்ப்பு ஏற்படும். புதுச்சேரி அரசைப் பொறுத்தவரை, நாங்கள் அனைத்து மதங்களையும் சமமாகவே கருதுகிறோம். இன, மத பாகுபாடு இல்லாமல் புதுச்சேரி அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

முதல்வர் நாராயணசாமி
முதல்வர் நாராயணசாமி
விகடன்

அந்த அடிப்படையிலேயே யாத்ரீகர்களுக்கு இந்த நிதியுதவி அளிக்கப்படுகிறது. இந்தத் தொகை முதல்வர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை இந்து சமய அறநிலையத்துறையில் பெற்று விண்ணப்பிக்கலாம்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு