Published:Updated:

`முதிர்ச்சி இல்லை; மூளை வளரவே இல்லை!’ - அப்ரிடியை கடுமையாகச் சாடிய கம்பீர்

ராம் பிரசாத்

அப்ரிடி - கம்பீர் இருவரும் ட்விட்டரில் வார்த்தைப் போர் புரிந்து வருகின்றனர்.

Gautam Gambhir
Gautam Gambhir

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாகித் அப்ரிடி பேசினாலே தற்போது சர்ச்சையாகிவருகிறது. அப்ரிடி - கம்பீர் இடையேயான இணைய வழி மோதல் சமீபகாலமாக அதிகமாகிவருகிறது. ட்விட்டரில் இருவரும் வார்த்தைப் போர் புரிந்துவருகின்றனர். இந்நிலையில், அப்ரிடி தனது ட்விட்டரில், “பாகிஸ்தான் பிரதமரின் அழைப்பை ஏற்று, வரும் வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு மசார் -இ- காயித் வருவேன். காஷ்மீர் மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்துவேன். செப்டம்பர் 6-ம் தேதி, ஷாஹீத்தின் வீட்டுக்கு வருவேன். விரைவில் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதிக்கு வருவேன்” என ட்வீட் செய்திருந்தார். காஷ்மீர் மக்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்த பாகிஸ்தானில் ஒவ்வொரு வாரமும் 30 நிமிட நிகழ்ச்சி நடைபெறும் என பிரதமர் இம்ரான் கான் அறிவித்திருந்தார். பிரதமரின் இந்த அறிவிப்பு தொடர்பாகத்தான் அப்ரிடி இப்படி ட்வீட் செய்திருந்தார்.

அப்ரிடி
அப்ரிடி

அப்ரிடியின் இந்த ட்வீட்டுக்கு கமென்ட் செய்த முன்னாள் கிரிக்கெட்டரும் பா.ஜ.க எம்.பி-யுமான கவுதம் கம்பீர், அப்ரிடியின் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டு, ``நண்பர்களே ஷாகித் அப்ரிடி முதிர்ச்சியடையவில்லை. அவருக்கு உதவிபுரிய ஆன்லைன் மழலையர் பள்ளியின் பயிற்சிக்கான கருவிகளை ஆர்டர் செய்கிறேன்’ எனப் பதிவிட்டார்.

கம்பீரின் இந்தப் பதிவையடுத்து, காட்டாமான ரீப்ளேவை அப்ரிடி அளித்தார். `கராச்சியில் தற்போது வானிலை மாற்றம் அடைந்துள்ளது. காற்றுடன் மழை வருகிறது. கம்பீர் ஒவ்வொரு முறையும் ஏதாவது சொல்லும்போது எனக்கு இதுதான் நினைவுக்கு வருகிறது’ என ஒரு புகைப்படத்துடன் கமென்ட் செய்திருந்தார். இந்திய அணியின் முன்னாள் மனநிலை பயிற்சியாளர் பேடி அப்டன், ‘நான் பணிபுரிந்த பலவீனமான மற்றும் மனரீதியாக மிகவும் பாதுகாப்பற்ற நபர்களில் கம்பீரும் ஒருவர்’ என்று கூறுவதாக அமைந்த புகைப்படம் அது.

கம்பீர்
கம்பீர்

இந்நிலையில், டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கம்பீர், “சிலர் ஒருபோதும் வளர மாட்டார்கள், அவர்கள் கிரிக்கெட் விளையாடுவார்கள். ஆனால், ஒருபோதும் முதிர்ச்சியடைந்தவர்களாக இருக்க மாட்டார்கள். அவருடைய மூளையும் வளரவில்லை. அப்ரிடி எல்லாவற்றையும் அரசியலாக்க விரும்பினால், அவர் ஏன் அரசியலில் சேரவில்லை. அரசியலுக்கும் முதிர்ச்சி உள்ளவர்கள் தேவை. ஆனால், அவருக்கு அது இல்லை” என்று பதிலளித்துள்ளார்.