Published:Updated:

மேற்கு வங்கம்:கைதான அமைச்சர்களுக்கு வீட்டுக்காவல்! -வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்றப்படுமா வழக்கு?

கைதுசெய்யப்பட்டவர்கள்
கைதுசெய்யப்பட்டவர்கள்

மேற்கு வங்கத்தில் லஞ்ச ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட இரண்டு அமைச்சர்கள் உட்பட நான்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களை வீட்டுக்காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு அரசியல் சூடுபிடித்துள்ளது. 2016-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட நாரதா இணையதள லஞ்ச வீடியோ வழக்கில் சமீபத்தில் சி.பி.ஐ அதிகாரிகள் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பர்ஹித் ஹகிம், சுப்ரதா முகர்ஜி, மதன் மித்ரா, சோவன் சாட்டர்ஜி ஆகிய நான்கு பேரை கடந்த திங்கள் கிழமை காலையில் கைதுசெய்தனர். அவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி மம்தா பானர்ஜி சி.பி.ஐ அலுவலகத்தில் பல மணி நேரம் தர்ணா போராட்டம் நடத்தி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அதே நாளில் நான்கு பேருக்கும் சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் ஜாமீன் கொடுத்தது. ஆனால் அதை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்துவிட்டது.

மம்தா பானர்ஜி
மம்தா பானர்ஜி

இதையடுத்து நான்கு பேரும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்துள்ளனர். அதோடு அவர்கள் இப்போது மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஜாமீன் மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. தலைமை நீதிபதி ராஜேஷ், நீதிபதி அரிஜித் பானர்ஜி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணையில் நீதிபதி அரிஜித் நான்கு பேருக்கும் இடைக்கால ஜாமீன் கொடுக்கலாம் என்று கருத்து தெரிவித்தார். ஆனால் நீதிபதி ராஜேஷ் நான்கு பேரையும் வீட்டுக்காவலில் வைக்க வேண்டும் என்று தெரிவித்தார். நீதிபதிகளுக்குள் இதில் ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை. இதையடுத்து நான்கு பேரையும் தற்காலிகமாக வீட்டுக்காவலில் வைப்பதாகவும், மூன்று நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச் ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

ஆனால் நான்கு பேருக்கும் வீட்டுக்காவல் கொடுக்க சி.பி.ஐ மற்றும் நான்கு பேர் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துஷார் மேத்தா, நான்கு பேரும் தொடர்ந்து சிறையிலேயே இருக்க வேண்டும் என்றும், அவர்களை வீட்டுக்காவலுக்கு மாற்றக் கூடாது என்று வாதிட்டார். அவர்களை வீட்டுக்காவலில் வைத்தால் சாட்சிகளை மிரட்டுவார்கள் என்றும் வாதிட்டார்.

நான்கு பேர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்கி, நான்கு பேருக்கும் உடனே இடைக்கால ஜாமீன் வழங்க வேண்டும் என்றும், மூன்று நீதிபதிகள் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் அமைத்து ஜாமீன் மனுவை உடனே விசாரிக்க வேண்டும் என்றும், வீட்டுக்காவலில் வைப்பது என்பது இடைக்கால ஜாமீன் மனுவை ரத்து செய்ததாகவே கருதுவதாகவும், கைதும் வீட்டுக்காவலும் ஒன்றுதான் என்றும், எனவே உடனே நான்கு பேரையும் ஜாமீனில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் வாதிட்டார். ஆனாலும் நீதிபதிகளின் உத்தரவின்படி நான்கு பேரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர்.

நான்கு பேரும் கைதுசெய்யப்பட்டவுடன் மம்தா பானர்ஜி சி.பி.ஐ அலுவலகத்துக்குச் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து அவருக்கு எதிராகவும் சி.பி.ஐ நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளது. மேலும் இந்த வழக்கை வேறு மாநில நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்றும் சி.பி.ஐ கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முகுல் ராய், சுவந்து அதிகாரி இரு பா.ஜ.க தலைவர்கள் மீதும் சி.பி.ஐ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதற்கு சி.பி.ஐ காரணமும் தெரிவித்துள்ளது.

மம்தா
மம்தா

முகுல் ராய் லஞ்சப் பணத்தை கையால் வாங்கியதற்கான வீடியோ இல்லை என்றும், சம்பவம் நடந்தபோது சுவந்து அதிகாரி மக்களவை உறுப்பினராக இருந்தார் என்றும், அவர் மீது வழக்கு தொடர மக்களவை சபாநாயகரிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் இன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. 2014-ம் ஆண்டு மேத்யூ சாமுவேல் என்ற பத்திரிக்கையாளர் போலி கம்பெனி ஒன்றை உருவாக்கி, அந்த கம்பெனிக்கு சாதகமாகச் செயல்பட திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்களிடம் லஞ்சம் கொடுத்து, அதை வீடியோவாக எடுத்து 2016-ம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு நாரதா என்ற இணையதளத்தில் வெளியிட்டார். இந்த வழக்கில்தான் இப்போது சி.பி.ஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

52 மணி நேர வீடியோ டேப்... ஸ்டிங் ஆபரேஷனுக்கு உதவிய திரிணாமுல் எம்.பி-`நாரதா' வழக்கில் நடந்தது என்ன?
அடுத்த கட்டுரைக்கு