நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சியிலுள்ள 18 வார்டுகளில் 14 வார்டுகளில், திமுக-வின் அதிகாரபூர்வ வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டனர். தி.மு.க-வின் நகரச் செயலாளர் ஜான்கென்னடி அளித்த பரிந்துரை அடிப்படையில், மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியதால் இரு வார்டுகளை மட்டுமே தி.மு.க கைப்பற்றியது.
கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இரு இடங்கள் மட்டுமே கிடைத்தன. சுயேச்சையாகப் போட்டியிட்ட தி.மு.க-வின் போட்டி வேட்பாளர்கள் மூவர் வெற்றிபெற்றனர். அ.தி.மு.க ஒன்பது வார்டுகளிலும், பாரதிய ஜனதா, தே.மு.திக தலா ஒரு வார்டிலும் வென்றன. இருப்பினும் பேரூராட்சித் தலைவர் பொறுப்பைக் கைப்பற்ற தி.மு.க தரப்பில் குதிரைப் பேரம் நடத்தப்பட்டதாகப் பேச்சு எழுந்தது. இது தொடர்பான ஆடியோ வெளியாகி சர்ச்சையானது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்த நிலையில், திசையன்விளை பேரூராட்சியில் இன்று நடந்த தலைவருக்கான தேர்தலில் தி.மு.க-வும், அதி.மு.க -வும் போட்டியிட்டன. அதில், இரு தரப்பினருக்கும் சமமாக ஒன்பது கவுன்சிலர்களின் ஆதரவு கிடைத்ததால் குலுக்கல் முறையில் வெற்றி, தோல்வியைத் தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. அதில், அ.தி.மு.க-வின் ஜான்சிராணி வெற்றிபெற்றார்.

அ.தி.மு.க மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர்களான 10 பேரின் ஆதரவு ஜான்சிராணிக்கு இருந்த நிலையில், ஒன்பது வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் அ.தி.மு.க-வினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே, தி.மு.க தரப்பில் பணம் மற்றும் பதவி ஆசையைக் காட்டி கவுன்சிலர்களை வளைத்துப் பிடிக்கும் முயற்சி நடந்திருப்பதாக அ.தி.மு.க-வினர் குற்றம்சாட்டுகிறார்கள்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
தி.மு.க-வின் ஒன்றியச் செயலாளரும், நெல்லை மாவட்ட பஞ்சாயத்துத் தலைவருமான வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், அ.தி.மு.க கவுன்சிலர்களுக்குப் பணம் மற்றும் பதவி ஆசைகாட்டிப் பேசும் ஆடியோவையும் அ.தி.மு.க-வினர் வெளியிட்டுள்ளனர். பெண் கவுன்சிலர் ஒருவரிடம் அவர் பேசும் ஆடியோ வைரலாகப் பரவிவருகிறது.அதில் பேசும் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ், ``நானும் சபாநாயகரும் சேர்ந்து ஒரு லிஸ்ட்டைக் கொடுத்து அவர்களை போட்டியிடவைக்க முடிவு செஞ்சிருந்தோம்.

எனக்கும் எங்க மாவட்டச் செயலாளருக்கும் ஆகாது. நான் மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவரானபோது எங்களுக்குள் கருத்து வேறுபாடு வந்துருச்சு. அதனால அவரை எதிர்த்து நான் அரசியல் பண்ணுறேன். எனக்கு எதிராக அவர் நான் சொன்ன ஆட்களுக்கு சீட் கொடுக்கலை. இப்போ உங்களுக்கு நல்ல வாய்ப்பு வந்திருக்கு. இது திரும்பக் கிடைக்காது. உங்களை துணைத் தலைவராக்கிடுறேன். 40 அல்லது 50 லட்சம் பணம் கொடுத்துடுறேன். உங்க வீட்டுக்காரருக்கும் எங்க கட்சியில் நல்ல பதவி வாங்கிக் கொடுத்துடுறேன்...” என்று பேசுகிறார்.
வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசும் ஆடியோ தற்போது நெல்லை மாவட்டத்தில் வைரலாகப் பரவிவருகிறது. பேரூராட்சித் தலைவர் பொறுப்பைக் கைப்பற்ற மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் ஒருவரே ஓப்பனாக குதிரைப் பேரத்தில் ஈடுபடுவதைக் கேட்டு கட்சியினர் மட்டுமல்லாமல் பொதுமக்களும் அதிர்ச்சியும் அதிருப்தியும் அடைந்துள்ளனர்.

ஆனாலும், மறுமுனையில் பேசும் பெண் கவுன்சிலர் தனக்கு எந்தப் பணமும் தேவையில்லை என்கிறார். ``பணம் இன்று வரும் நாளை போகும். ஆனால் மானம்தான் பெரிது. பணத்தை வாங்கிக்கொண்டால் எனக்கு ஓட்டுப் போட்ட மக்கள் முகத்தில் எப்படி விழிப்பேன்" என்று எதிர்க்கேள்வி கேட்கிறார். இந்த ஆடியோ தொடர்பாக காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அ.தி.மு.க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.