Published:Updated:

அ.தி.மு.க-வின் உள்ளாட்சி வியூகம் உடைந்ததன் 'உள்ளரசியல்'!

எடப்பாடி
எடப்பாடி

உள்ளாட்சித் தேர்தலில் ஒருசில அமைச்சர்களைத் தவிர்த்து, மற்ற எவருமே கடைசி நேரத்தில் பண மூட்டையை அவிழ்க்க வில்லை என்ற தகவலும் கட்சித் தலைமைக்குப் புகாராகப் போயிருக்கிறது.

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்கள் மற்றும் சென்னை நீங்கலாக மீதம் உள்ள 27 மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவிகிதத்துக்கு அதிகமான இடங்களை தி.மு.க கூட்டணி கைப்பற்றியிருப்பது, ஊரகப் பகுதிகளில் வலுவான வாக்குவங்கியை வைத்திருப்பதாகக் கருதப்படும் அ.தி.மு.க-வுக்கு பெரும்பின்னடைவு என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

அதேசமயம், ஒட்டுமொத்த வெற்றி என்று பார்த்தால், அது தி.மு.க-வுக்குத்தான் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். ஆளுங்கட்சியின் பணம், அதிகாரபலம், போலீஸ் கெடுபிடி எனப் பல இடையூறுகளுக்கு மத்தியில் - குறிப்பாக தேர்தல் வேலையே பார்க்காமல் வெற்றி பெற்றுள்ளது தி.மு.க.

'அமைதி' ஆன அதிகாரிகள்!

தேர்தல் முடிவுகள் அறிவிக்க தாமதமானதால், மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கே சென்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் சீறியிருக்கிறார் அதன் பிறகுதான் ஓரளவு முடிவுகள் வெளியாகத் தொடங்கின. மீண்டும் இரவு 11 மணிக்கு தேர்தல் ஆணைய அலுவலகம் வந்த ஸ்டாலின், மாநிலத் தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக நடந்துகொள்வதாகக் குற்றம்சாட்டினார். இரவு முழுவதும் தி.மு.க. தலைவர்களே நேரடியாகக் களத்தில் நின்றதால் உற்சாகமடைந்த தொண்டர்களும் விழிப்புடன் இருந்தனர். வாக்கு எண்ணிக்கையில் குறைந்த வாக்கு வித்தியாசம் வரும்போது, வெற்றி அறிவிப்பை நிறுத்திவைத்து ஆளுங்கட்சிக்குச் சாதகமாக அறிவிப்பார்கள் என ஆளுங்கட்சியினர் பலரும் நம்பியிருந்தனர். முழுமையாக படிக்க க்ளிக் செய்க... http://bit.ly/2sP582i

அ.தி.மு.க-வின் உள்ளாட்சி வியூகம் உடைந்ததன் 'உள்ளரசியல்'!

திருச்சி மாவட்டத்தில் அ.தி.மு.க-வைச் சேர்ந்த சிலர் 'தைரியமாக வேட்பாளராக நில்லுங்கள். தானாக ஜெயிப்பீர்கள். நம்மகிட்ட போலீஸ், அதிகாரிகள் துணையிருக்கு' என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார்கள். இந்த டயலாக்கை மாவட்ட உயர் அதிகாரிகளிடம் சொல்லிய தி.மு.க-வின் முக்கியப் புள்ளிகள், 'அ.தி.மு.க-காரங்க இப்படிப் பேசிகிட்டு இருக்காங்க. அவர்கள் சொல்றபடி நீங்க ஏதாவது தில்லுமுல்லு செஞ்சீங்கன்னா, நாங்க சும்மா இருக்க மாட்டோம்' என்று எச்சரித்திருக்கிறார்கள். இதுபோதாதென மீடியாக்களை தி.மு.க லாகவமாகப் பயன்படுத்திய விதமும், மாநிலம் முழுவதும் விடிய விடிய தி.மு.க தலைவர்களே களத்தில் நேரடியாக நின்றதும் ஆளுங்கட்சியின் திட்டத்தில் மண்ணை அள்ளிப்போட்டன. வாக்கு எண்ணிக்கையை மாற்ற திட்டமிட்டிருந்த இடங்களில் அதிகாரிகள் 'நமக்கேன் வம்பு?' என்று அமைதிகாத்துவிட்டார்கள். இதனால், பெரியளவில் தில்லுமுல்லுகள் நடைபெறாமல் வாக்கு எண்ணிக்கை சுமுகமாக நடந்து முடிந்தது

தி.மு.க முழு வேகத்துடன் களமிறங்கியதால், முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் வாக்கு எண்ணிக்கை நடந்த ஜனவரி 2-ம் தேதி அன்று இரவு 7 மணிக்கு ராயப்பேட்டை தலைமைக் கழகம் வந்தனர். அங்கு இருந்தபடியே ஒவ்வொரு மாவட்டச் செயலாளரிடமும் பேசிய எடப்பாடி தரப்பினர், “என்னய்யா வேலைபார்த்தீங்க... எல்லா சப்போர்ட்டும் இருந்தும் எப்படி கோட்டைவிட்டீங்க?” என்று கொந்தளித்துவிட்டார்கள். குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் இரண்டு அமைச்சர்கள் இருந்தும் எப்படி கோட்டை விட்டீர்கள் என்று கொதித்துவிட்டாராம் முதல்வர்.

'மூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்...'

உள்ளாட்சித் தேர்தலில் ஒருசில அமைச்சர்களைத் தவிர்த்து, மற்ற எவருமே கடைசி நேரத்தில் பண மூட்டையை அவிழ்க்க வில்லை என்ற தகவலும் கட்சித் தலைமைக்குப் புகாராகப் போயிருக்கிறது. “ஆரம்பத்தில் லேசாகச் செலவுசெய்ய ஆரம்பித்தார்கள்தான். ஆனால், போகப்போக மூட்டையைப் பதுக்கிவிட்டார்கள். 'அடுத்த முறை ஆட்சிக்கு வருவோமா என்பது சந்தேகம்தான். எனவே, மீதம் இருக்கும் ஒரு வருடகாலம் அமைதியாகக் கழித்துவிட்டு, இருக்கும் பணத்தை வைத்து கல்வித்தந்தை அல்லது தொழிலதிபர்கள் ஆகிவிடலாம்' என்றுதான் அமைச்சர்கள் பலரும் திட்டமிடுகிறார்களே தவிர, உள்ளாட்சித் தேர்தல் செலவுகளுக்கு என பணத்தையே வெளியே எடுக்கவில்லை” என்று பொங்குகிறார்கள் அ.தி.மு.க-வின் அடிமட்டத் தொண்டர்கள்!

அ.தி.மு.க-வின் உள்ளாட்சி வியூகம் உடைந்ததன் 'உள்ளரசியல்'!

தொடர்ந்து கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் அளவிலும், அமைச்சர்களின் இந்தப் பாராமுகம்தான் அ.தி.மு.க-வை உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் வீழ்ச்சிப்பாதைக்குக் கொண்டு சென்றதாக போர்க்குரல்கள் எழத் தொடங்கியுள்ளன. வரும் ஜனவரி 6-ம் தேதி சட்டமன்றம் கூடுகிறது. இதற்கு முன்னதாக எம்.எல்.ஏ-க்கள் கூட்டத்தை நடத்த அ.தி.மு.க முடிவு எடுத்துள்ளது. இந்தக் கூட்டத்தில் மேற்கண்ட விவகாரம் பெரியதாக வெடிக்கலாம் என அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை ஆளுங்கட்சியாக இருக்கும் கட்சிதான் பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றும். 1996 முதல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்கள் அனைத்திலும் இதுதான் நடந்துள்ளது. முதல்முறையாக எதிர்க்கட்சியான தி.மு.க சரிபாதி எண்ணிக்கைக்கும்மேல் உள்ளாட்சிப் பதவிகளைக் கைப்பற்றி ஆளுங்கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளது. நகர்ப்புறங்களில் தி.மு.க வலுவாக இருக்கும் எனக் கருதிதான், தாங்கள் பலமாக இருக்கும் கிராமப்புறங்களில் முதற்கட்டமாக தேர்தலை நடத்திட அ.தி.மு.க வியூகம் வகுத்தது. மேலும், 'தி.மு.க 30 சதவிகித இடங்களுக்குமேல் கைப்பற்றாது' என்றும் அ.தி.மு.க தலைவர்கள் வியூகம் வகுத்திருந்தனர். இந்த வியூகம்தான் இப்போது உடைந்துள்ளது.

இந்தத் தேர்தலில் 70 சதவிகித இடங்களைக் கைப்பற்றி, ஆளுங்கட்சிமீது எதிர்ப்பலை ஏதும் இல்லை என நிரூபிக்க அ.தி.மு.க முயன்றது. ஆனால், மக்களின் முடிவுகள் எதிர்மாறாக வந்துள்ளதால், அடுத்தகட்டமாக நடத்த திட்டமிட்டிருந்த பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களை நடத்துவதா, வேண்டாமா என அ.தி.மு.க தலைமை யோசிப்பதாகவும் தகவல்கள் வருகின்றன. இந்தத் தேர்தல் மூலமாக தன் ஆளுமையை நிரூபிக்க எடப்பாடி தரப்பு முயன்றது. ஆனால், அ.தி.மு.க கோட்டைவிட்டதுதான் மிச்சம்! அதேசமயம், தி.மு.க-விலும் ஏராளமான உள்ளடி வேலைகள் நடந்துள்ளன.

- ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளையொட்டிய ஜூனியர் விகடனின் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > மூட்டையை அவிழ்க்காத அமைச்சர்கள்... கோட்டைவிட்ட அ.தி.மு.க... உடைந்தது உள்ளாட்சி வியூகம்! https://www.vikatan.com/government-and-politics/election/discussion-about-local-body-election-results

”ஆளுங்கட்சிக்கு எதிராக தி.மு.க கொந்தளித்தது என்றால், கூட்டணிக் கட்சியும் அ.தி.மு.க-வுக்கு எதிராகக் கொந்தளித்துள்ளதே?"

"திண்டிவனத்தில் நடந்த பா.ம.க பொதுக்குழு விவகாரத்தைச் சொல்கிறீரா? அ.தி.மு.க-வுக்கு எதிராக அன்புமணி இவ்வளவு கோபப்படுவார் என்று யாருமே நினைத்துப்பார்க்கவில்லை என்கின்றனர் பா.ம.க நிர்வாகிகள். 'அ.தி.மு.க கூட்டணியில் இரண்டாவது பெரிய கட்சியாக இப்போது இருப்பது பா.ம.க. ஆனால், உள்ளாட்சித் தேர்தல் இட ஒதுக்கீட்டில் பா.ஜ.க-வுக்குக் கொடுத்த அளவுக்குக்கூட பா.ம.க-வுக்கு இடங்களை ஒதுக்கவில்லை' என்று அந்தக் கட்சியினர் புலம்ப ஆரம்பித்துவிட்டனர்.

அ.தி.மு.க-வின் உள்ளாட்சி வியூகம் உடைந்ததன் 'உள்ளரசியல்'!

'இருபது சதவிகிதம் வரை உங்களுக்கு என்று வாக்கு கொடுத்துவிட்டு, கடைசி நேரத்தில் அலைக்கழித்துவிட்டார்கள்' என்று கட்சி நிர்வாகிகள் புலம்பியிருக்கின்றனர். திருவள்ளூர் மாவட்டத்தில் ஒற்றை இலக்கத்தில்தான் சீட்டே வழங்கப்பட்டது. இந்த விவகாரத்தையெல்லாம் மனதில்வைத்துதான், 'பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது' என்று அன்புமணி சீறியிருக்கிறாராம்."

- இதற்கு அ.தி.மு.க தரப்பில் என்ன ரியாக்‌ஷனாம்? - கழுகார் சொல்லும் தகவல்களை முழுமையாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: "பா.ம.க தயவு இல்லாமல் அ.தி.மு.க ஆட்சி நீடித்திருக்காது" https://www.vikatan.com/government-and-politics/policies/mister-kazhugu-politics-and-current-affairs-jan-8

* சிறப்புச் சலுகை > விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 2006 முதல் இப்போது வரை வெளிவந்த லட்சக்கணக்கான கட்டுரைகளையும் வாசிக்கலாம். ஒரேநேரத்தில் 5 டிவைஸ் வரை லாகின் செய்யும் வசதியும் உண்டு. உங்களுக்காக இதோ ஒரு சிறப்புச் சலுகை. ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > http://bit.ly/2sUCtJ9

அடுத்த கட்டுரைக்கு