Published:Updated:

அரவணைப்பு ப்ளஸ் ஒருங்கிணைப்பு - எடப்பாடியின் குஷியும்... அ.தி.மு.கவின் வெற்றி ரகசியமும்!

அ.தி.மு.க வெற்றிபெறும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பே உளவுத்துறை எடப்பாடியிடம் நோட் போட்டிருந்தது. அந்த அளவுக்கு, அ.தி.மு.க வேட்பாளர் அறிவிப்பு முதல் பிரசாரம் வரை அனைத்தையும் மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக செய்திருந்தனர்.

அ.தி.மு.க வேட்பாளர்கள் முத்தமிழ்ச்செல்வன்- நாராயணன்
அ.தி.மு.க வேட்பாளர்கள் முத்தமிழ்ச்செல்வன்- நாராயணன்

மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மெகா வெற்றியைப் பெற்றது தி.மு.க கூட்டணி. அடுத்த நான்கு மாதத்தில் நடைபெற்றுள்ள இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத ஏறுமுகத்தைப் பெற்றுள்ளது அ.தி.மு.க.

தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன்  வேட்பாளர் புகழேந்தி
தி.மு.க தலைவர் ஸ்டாலினுடன் வேட்பாளர் புகழேந்தி

நாங்குநேரி, விக்கிரவாண்டி இரண்டு தொகுதிகளுமே தி.மு.க கூட்டணி வசம் இருந்த தொகுதிகள். இந்த இரண்டு தொகுதிகளும் இப்போது ஆளும்கட்சி வசம் செல்லும் நிலைக்குச் சென்றுள்ளது. விக்கிரவாண்டியில் தி.மு.க வேட்பாளராக புகழேந்தி அறிவிக்கப்பட்டபோதே அங்கு புகைச்சலும் ஆரம்பமானது. சொந்தத் தொகுதியில் உள்ள நிர்வாகிகளைப் புறக்கணித்துவிட்டு பொன்முடி அவருடைய நண்பரை எம்.எல்.ஏ-வாக கொண்டுவர ஆசைப்படுகிறார் என்று புலம்ப ஆரம்பித்தனர் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க நிர்வாகிகள்.

மறுபுறம் நாங்குநேரியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட வசந்தகுமார், மத்திய அமைச்சர் பதவியை குறிவைத்து எம்.எல்.ஏ- பதவியை ராஜினாமா செய்துவிட்டு எம்.பி-யாகிச் சென்றுவிட்டார். அது அந்தத் தொகுதி மக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது.

அதேநேரம் `நாங்குநேரியில் காங்கிரஸ் கட்சியில் யாருமே இல்லையா? சென்னையில் வசிக்கும் ரூபி மனோகரை இங்கு ஏன் வேட்பாளராக நிறுத்த வேண்டும்?’ என்ற புகைச்சல் அந்தத் தொகுதியில் எழுந்தது. அதுவே அந்தத் தொகுதியில் பொதுவான அதிருப்தியையும் ஏற்படுத்தியது. அதேநேரம் அ.தி.மு.க தரப்பு இந்த இரண்டு தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் ஆரம்பம் முதலே இருந்தது.

கடந்த தேர்தல் வரை அ.தி.மு.க-வுக்குள் ஒற்றுமை இல்லாத தன்மையும், யாருக்கும் கட்டுப்படாத தன்மையும் அதிகம் இருந்தது. ஏன்... கடந்த தேர்தலில் அமைச்சர்கள் பலரே ஏனோதானோ என்றே வேலை செய்தார்கள். அந்த நிலை இந்தத் தேர்தலில் இருந்துவிடக் கூடாது என்பதில் எடப்பாடி தெளிவாக இருந்தார். மற்றொருபுறம் இந்த இடைத்தேர்தலில் பெறும் வெற்றிதான் தன் தலைமையின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் என்பதில் தெளிவாக இருந்ததால், அமைச்சர்களுக்கு அழுத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்
ஸ்டாலினுடன் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன்

விக்கிரவாண்டி தொகுதியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் அ.தி.மு.க வெற்றிபெறும் என்று இரண்டு நாள்களுக்கு முன்பே உளவுத்துறை எடப்பாடியிடம் நோட் போட்டிருந்தது. அந்த அளவுக்கு, வேட்பாளர் அறிவிப்பு முதல் பிரசாரம் வரை அனைத்தையும் அ.தி.மு.க–வினர் மிகவும் திட்டமிட்டு நேர்த்தியாக செய்திருந்தனர். தி.மு.க வேட்பாளரை அறிவித்தபிறகே அ.தி.மு.க வேட்பாளராக முத்தமிழ்ச் செல்வனை அறிவித்தது. தி.மு.க வேட்பாளருக்கு எதெல்லாம் மைனஸாக இருந்ததோ அதை ஈடுகொடுக்கும் வகையில் அ.தி.மு.க வேட்பாளாரைத் தேர்ந்தெடுத்தார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

மற்றொருபுறம் இந்தத் தொகுதி வெற்றி என்பது தனது சொந்த கௌரவப் பிரச்னையாகப் பார்ததார். தேர்தல் அறிவிக்கப்பட்டது முதல் தொகுதி முழுவதும் பம்பரமாக சுற்றிவந்து பணியாற்றினார். பணம் இந்தத் தேர்தலில் பிரதானமாக விளையாடியது. குறிப்பாக வாக்காளர்களுக்கு மட்டும் பணம் என்றில்லாமல், கூட்டணிக் கட்சியினருக்கும் ஸ்பெஷலாக கவனிப்பு நடத்தினார்.

அதேநேரம் ஸ்டாலின் வன்னியர் இடஒதுக்கீடு அறிவிப்புக்குப் பிறகு பா.ம.க-தி.மு.க இடையே எழுந்த அறிக்கை யுத்தம் பா.ம.க-வினரை தீயாக வேலைசெய்ய வைத்தது. சி.வி.சண்முகம் கட்சியினரை அரவணைப்பது முதல் கூட்டணிக் கட்சியினரை ஒருங்கிணைப்பது வரை அனைத்தையும் சிறப்பாக செய்திருந்தார்.

பொன்முடியோ களத்தில் இருந்த நேரத்தைவிட வீட்டிலிருந்து உத்தரவு போடும் நேரமே அதிகம் இருந்தது. வன்னியருக்கு எதிராக பொன்முடி இருக்கிறார் என்ற கருத்து தொகுதி முழுவதும் உலவ ஆரம்பித்தது. பொன்முடியின் இடத்தை நிரப்பும் வகையில் ஜெகத்ரட்சகன், ஏ.வ.வேலு, நேரு உள்ளிட்டவர்கள் பணியாற்றினாலும் சொந்த மாவட்டத்துக்காரர் கவனம் இல்லாமல் இருக்கும்போது இவர்களால் எவ்வளவு வீரியமாக பணியாற்ற முடியும் என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. அமைச்சர் பதவியில் அவர் இல்லாவிட்டாலும் மனதளவில் அமைச்சர் போன்றே கட்சி நிர்வாகிகளிடம் அவர் நடந்துகொண்டார். குறிப்பாக கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரைக்கூட இவர் ஒழுங்காக நடத்தவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நாங்குநேரியில் அ.தி.மு.க-வின் வெற்றியை தங்கமணி தலைமையிலான டீம் நேர்த்தியாகக் கொண்டு சென்றுவிட்டது. காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த அதிருப்தியும், வசந்தகுமார் மனதில் போட்டிருந்த திட்டமுமே அ.தி.மு.க-வுக்குச் சாதகமாக மாறிவிட்டது. சீட் வாங்கியது முதல் தேர்தல்நாள் வரை மொத்த செலவையும் ரூபி மனோகரே பார்த்துக்கொண்டார். ஆனால், அ.தி.மு.க தரப்பில் அமைச்சர்கள் பலரும் காசை வாரி இறைத்தனர். மூன்று ரவுண்டாக பண விநியோகம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் கட்சிக்கு ஒத்துழைக்க வேண்டிய தி.மு.க ஆமை வேகத்தில் பணியாற்றியது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் திணறிப்போய்விட்டார்கள். இந்த இரண்டு தொகுதியிலுமே அ.தி.மு.க-வின் ஆட்சிக்கு கிடைத்த வெற்றி என்பதைவிட எதிர்க்கட்சியின் திட்டமிடாத செயலுக்குக் கிடைத்த தோல்வி என்றே பார்க்கவேண்டியுள்ளது.

``விக்கிரவாண்டியில் பத்தாயிரம் ஓட்டுகள் வித்தியாசத்திலும், நாங்குநேரியில் குறைந்த வாக்குகள் வித்தியாசத்திலும் வெற்றி பெறுவோம் என்றுதான் நினைத்தேன். ஆனால், பரவாயில்லை. அமைச்சர்கள் கடுமையாக உழைத்துள்ளனர். அதுதான் முதல் ரவுண்டிலிருந்தே நாம் தொடர்ந்து முன்னணியில் இருக்கிறோம்” என்று வீட்டில் தன்னை சந்திக்க வந்த சீனியர் அமைச்சர்களிடம் எடப்பாடி பழனிசாமி மகிழ்ச்சியாகச் சொல்லியுள்ளார்.

இதே வேகத்தோடு உள்ளாட்சித் தேர்தலையும் நடத்திவிடலாம் என்று முடிவு செய்துள்ளதாம் அ.தி.மு.க தலைமை.

`2,56,414 வாக்காளர்கள்; 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை!' - நாங்குநேரி இடைத்தேர்தல் அப்டேட்