Published:Updated:

ரஜினி சொன்ன பாணியில் கட்சிக்கு கருணாநிதி, ஆட்சிக்கு எம்.ஜி.ஆர்...1979-ல் நடந்தது என்ன?

கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - பிஜு பட்நாயக் - எம்.ஜி.ஆர்

`நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோதும் நான், எம்.ஜி.ஆர் இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம்.’

நடிகர் ரஜினிகாந்த், தனது அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பாக விளக்குவதற்காக, சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நேற்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். கிட்டத்தட்ட அரை மணி நேரத்துக்கும் மேலாகப் பேசிய ரஜினி, `மக்களிடம் எழுச்சி வந்தால்தான் அரசியலுக்கு வருவேன்' என்றார். அதோடு, அரசியலில் தான் மூன்று திட்டங்களை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார். அதில், ``கட்சிக்கு ஒரு தலைவர். ஆட்சிக்கு ஒரு தலைவர்'' என்று அவர் தெரிவித்த மூன்றாவது திட்டம்தான் தற்போது மிகப்பெரிய விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. 'ஏற்கெனவே இது தேசிய கட்சிகளில் உள்ள நடைமுறைதான், இது ஒரு தோற்றுப்போன வழிமுறை' என்றும், இல்லை, `ரஜினி சொல்வது சரிதான், இது அதிகாரக் குவிப்பைக் கட்டுப்படுத்த உதவும்' என ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்

இந்தநிலையில், இதே போல, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு முன்பாகத் தமிழகத்தில் இருபெரும் கட்சிகளான தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் இணைக்கப்பட இருந்ததும், கட்சிக்கு கருணாநிதி தலைவர், ஆட்சிக்கு எம்.ஜி.ஆர் தலைவர் எனத் திட்டம் தீட்டப்பட்டதும், பின்னர், அந்தத் திட்டம் கைவிடப்பட்டதும் இன்றைய தலைமுறை அறிந்திராதது. அது குறித்து ஒரு ரீவைண்ட்தான் இந்தக் கட்டுரை.

1975-ம் ஆண்டு, இந்திரா காந்தி கொண்டுவந்த அவசரநிலைப் பிரகடனத்தை எதிர்த்து, தொடர்ச்சியாகக் குரல் எழுப்பி வந்ததன் காரணமாக 1976-ம் ஆண்டு ஜனவரி 31-ம் தேதி கருணாநிதி தலைமையிலான தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்டது. தொடர்ந்து, 1977-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தி.மு.க-விலிருந்து வெளியேறி தனிக்கட்சி ஆரம்பித்திருந்த எம்.ஜி.ஆர் தலைமையிலான அ.தி.மு.க அமோக வெற்றிபெற்றது. முதல்முறையாக முதல்வர் நாற்காலியில் அமர்ந்தார் எம்.ஜி.ஆர். இந்திய அளவில் ஜனதா கட்சி வெற்றிபெற்று மொரார்ஜி தேசாய் பிரதமரானார். ஆனால், அவரின் கட்சிக்குள் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். தொடர்ந்து சரண் சிங் பிரதமரானார். அவருக்கு அளித்து வந்த ஆதரவை இந்திரா காங்கிரஸ் 24 நாள்களில் விலக்கிக்கொள்ள அவர் தற்காலிக அரசின் பிரதமராகப் பதவி வகித்துக்கொண்டிருந்தார்.

இந்திரா காந்தி
இந்திரா காந்தி

இந்தியாவில் அவசர நிலைப் பிரகடனம் திரும்பப் பெறப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்த நிலையில், மீண்டும் ஒரு ஸ்திரத்தன்மையற்ற நிலையை நோக்கி நாடு சென்று கொண்டிருந்தது. இந்திரா காந்தியின் எமெர்ஜென்சியை எதிர்ப்பதற்கு எப்படி பல்வேறு கொள்கைகளை உடைய தலைவர்கள் ஒன்றாகக் கரம் கோத்தார்களோ அப்படியொரு தேவை மீண்டும் எழுந்தது. இந்த நேரத்தில் தமிழகத்தில் தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் எதிரெதிர் துருவமாக இருப்பது நல்லதல்ல என ஜனதா கட்சித் தலைவர்கள் கருதினார்கள். குறிப்பாக, தமிழகத்தில் திராவிடக் கட்சிகளின் ஆதரவோடு காங்கிரஸ் மீண்டும் வளர்ந்து வருவதை அவர்கள் விரும்பவில்லை. அதனால், இருவரும் மீண்டும் ஒன்றிணைவது நல்லது எனப் பெரும்பாலான தலைவர்கள் கருதினர். குறிப்பாக, அதற்கான முயற்சியை அப்போதைய மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக் முன்னெடுத்தார்.

பிறகு, என்ன நடந்தது என்பது பற்றி, நெஞ்சுக்கு நீதி மூன்றாம் பாகத்தில் கருணாநிதி எழுதியுள்ளார். அதை அறிக்கையாகவும் 2012-ம் ஆண்டு மே 14-ம் வெளியிட்டார் கருணாநிதி. அந்த அறிக்கையைப் பார்ப்போம்.

``1979, செப்டம்பர் 6-ம் தேதி தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ஆர் டெல்லியில் இருந்தார். அன்று மாலையில் அவர் இந்திரா காந்தியைச் சந்திப்பதாக இருந்தது. ஆனால், அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை. அதற்குக் காரணம்; எம்.ஜி. ஆருக்கு ஏற்பட்ட குழப்பம் என்று ஏடுகள் எழுதின. குழப்பத்துக்குக் காரணம்; அதே நாள் காலையில் அவர், பிரதமர் சரண் சிங்கைச் சந்தித்தபோது ``அ.தி.மு.க, இந்திரா காங்கிரஸுடன் உறவு கொள்வதாக இருந்தால் காபந்து சர்க்காரில் மத்தியில் அமைச்சர்களாக இருக்கும் இரண்டு அ.தி.மு.க அமைச்சர்களும் பதவி விலகி விடுவதுதான் நியாயமாகும்” என்று சரண் சிங், எம்.ஜி.ஆரிடம் கூறிவிட்டார். எனவே எம்.ஜி.ஆர், இந்திரா காந்தியைச் சந்திக்காமலே திரும்பிவிட்டார். அதே செப்டம்பர் 6-ம் தேதி மாலையில் டெல்லியிலிருந்து மத்திய அமைச்சர் பிஜு பட்நாயக், தொலைபேசி வாயிலாக என்னைத் தொடர்புகொண்டு, முக்கியமான அரசியல் விஷயம் பேச வேண்டுமென்றும் சென்னைக்கு வந்து என்னைச் சந்திப்பதாகவும் கூறினார். நானும் அவர் என்னை சென்னைக்கு வந்து சந்திப்பதை ஒப்புக்கொண்டேன். இதற்கிடையில் ஏடுகளில் தி.மு.க-வையும் அ.தி.மு.க-வையும் இணைப்பதற்கான முயற்சிகளில் பிஜு பட்நாயக் ஈடுபடப்போவதாகச் செய்திகள் வந்தன.

கருணாநிதி
கருணாநிதி

செப்டம்பர் 8-ம் தேதி வேலூர் நிகழ்ச்சிக்குச் சென்றிருந்த என்னிடம் இது பற்றிக் கேட்டனர். ``பூம்புகாரில் நிருபர்களிடம் பேசிய முதலமைச்சர் எம்.ஜி.ஆர், தி.மு.க - அ.தி.மு.க இரண்டும் ஒன்றாக இணைவதில் என்ன தவறு' என்று கூறியிருக்கிறார். ஆனால், அதே நாள் மாலையில் காரைக்கால் பொதுக்கூட்டத்தில் தி.மு.க நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறாது என்று அறை கூவல் விடுத்துப் பேசியிருக்கிறார். எதற்கும் பொறுத்திருந்து பார்க்கலாம்” என்று கருத்துப்படப் பதில் அளித்தேன். என்னிடம் தொலைபேசியில் கூறியவாறு 12.9.1979 அன்று பிஜு பட்நாயக் சென்னையில் என் வீட்டில் என்னைச் சந்தித்து தி.மு.க, அ.தி.மு.க, இணைப்பு குறித்துப் பேசினார். நீண்ட நேரம் இருவரும் விவாதித்த பிறகு; ஏற்கெனவே நான் கழகப் பொதுச் செயலாளருடனும் கழக முன்னணித் தலைவர்களுடனும் கலந்து பேசி எடுத்த முடிவுக்கேற்ப; இரு கட்சிகளும் இணைந்திடச் சில நிபந்தனைகளைச் சொன்னேன்.

  • இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க என்ற பெயரில்தான் இயங்க வேண்டும்.

  • அக்கட்சிக்கு அண்ணா படம் பொறித்த கொடியே இருப்பதில் எங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை.

  • முதலமைச்சராக இப்போதுள்ள எம்.ஜி.ஆர் அவர்களே அப்பதவியில் நீடிக்கட்டும்.

  • இரு கட்சிகளும் இணைவது என்பதற்காகத் தி.மு.க-வில் இப்போதுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அமைச்சர் பதவி எதுவும் தேவையில்லை.

  • இரு கட்சிகளும் இணைந்த பிறகு, உரிய நேரத்தில் தலைமைக் கழகத்தின் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர் மற்றும் நிர்வாகப் பொறுப்புகள் குறித்து முடிவு செய்து கொள்ளலாம்.

  • முக்கியமான விஷயம்: எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சியில் இடஒதுக்கீட்டில் கொண்டு வந்துள்ள சமூக நீதிக்குப் புறம்பான 9,000 ரூபாய் உச்சவரம்பு ஆணை; பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு என்பது உடனடியாகத் திரும்பப் பெறப்பட வேண்டும்.

இவற்றைக் கேட்டவுடன் பிஜு பட்நாயக் அவர்கள், மிகவும் மகிழ்ந்து உற்சாகத்துடன், 'இந்த நிபந்தனைகளை எம்.ஜி.ஆர் ஏற்றுக்கொள்ள எந்தக் கஷ்டமும் இருக்காது. நான் இப்போதே எம்.ஜி.ஆர் இல்லம் செல்கிறேன். இன்றைக்கே உங்கள் இருவரையும் சந்திக்க வைக்கிறேன்” என்றார். அதற்கு நான், ``அவரைச் சந்திப்பதில் எனக்கொன்றும் மறுப்பு இல்லை. சந்திப்பதற்கு முன்பு கழக முன்னோடிகள் அனைவரிடமும் நான் கலந்து பேச வேண்டும். பொதுச் செயலாளர் வெளியூர் சென்றுள்ளார். இன்று மாலையில்தான் வருகிறார். அவரையும் மற்றவர்களையும் கலந்து பேசிக்கொள்கிறேன். எனவே, சந்திப்புக்கு நாளைய தினம் ஏற்பாடு செய்யுங்கள்'' என்றேன்.

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

மறுநாள், 13.9.1979 அன்று சந்திக்க முடிவாயிற்று. அதற்குள் மாநில முழுவதுமுள்ள மாவட்ட கழகச் செயலாளர்கள், தலைமைக் கழகச் செயலாளர்களுடன் தொடர்பு கொள்ளப்பட்டு, அவர்கள் அனைவரும் 13-ம் தேதி காலையில் சென்னை வந்து சேர்ந்திடவே - அவர்களின் கருத்துகளையும் நானும் பொதுச் செயலாளரும் கேட்டறிந்தோம். அதன்பிறகு, அன்று 11 மணியளவில் பிஜுபட் நாயக் முன்னிலையில் நானும் எம்.ஜி.ஆரும் சென்னை சேப்பாக்கம் அரசினர் விடுதியில் சந்தித்துப் பேசினோம். அப்போது கழகப் பொதுச் செயலாளர் பேராசிரியர், அ.தி.மு.க சார்பில் நாவலர் நெடுஞ்செழியன், பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

பிறகு, நானும் எம்.ஜி.ஆர் அவர்களும் அந்த விடுதியின் வேறொரு அறையில் தனிமையில் பேசினோம். பிஜுபட்நாயக்கிடம் நான் தெரிவித்த கருத்துக்களும் நிபந்தனைகளும் உண்மைதானா என்று எம்.ஜி.ஆர் வியப்புடன் கேட்டார். இரு கட்சிகளும் இணைந்து தி.மு.க என்ற பெயரில் இயங்க வேண்டுமென்பதற்கு தி.மு.க என்ற பெயரில்தான், ஏற்கெனவே பல இடங்களில் கட்டடங்கள், சொத்துகள் இருக்கின்றன என்பது மட்டுமல்லாமல், தி.மு.க என்பதுதான் அண்ணா உருவாக்கிய கழகம். எனவே, அந்தப் பெயரே நிலைக்கலாம் என்பதையும் அவரிடம் விளக்கினேன். அண்ணாவின் படத்தைப் பதித்துள்ள கொடியே இணைந்துவிடப் போகும் கட்சியின் கொடியாக இருக்கட்டுமென்றும் கூறினேன். மற்றும் பிஜு பட்நாயக்கிடம் கூறிய மற்றவைகளையும் எம்.ஜி.ஆரிடம் விளக்கினேன். அவர் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட நாளில் இரண்டு கட்சிகளின் செயற்குழு, பொதுக் குழுக்களையும் வெவ்வேறு இடங்களில் கூட்டி இரு கட்சிகளின் இணைப்புத் தீர்மானத்தை நிறைவேற்றிவிடலாம் என்றும் அறுதியிட்டுக் கூறினார்.

பின்னர், இருவரும் நாங்கள் தனித்துப் பேசிக்கொண்டிருந்த அறையிலிருந்து வெளியே வந்து பிஜு பட்நாயக்கிடமும் அங்கிருந்த இரு கட்சிகளின் தலைவர்களிடமும் பேச்சின் முடிவு குறித்துத் தெரிவித்தோம். செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் எங்களைச் சூழ்ந்துகொண்டு கை குலுக்கினர். புகைப்படமெடுத்தனர். நிருபர்களின் கேள்விக்குப் பதில் அளித்தபோதும் நான், எம்.ஜி.ஆர் இருவருமே இரு கட்சிகளின் செயற் குழு, பொதுக்குழுக்களில் விவாதித்து முடிவு அறிவிக்கப்படுமென்று கூறினோம். செப்டம்பர் 13-ம் தேதி நாங்களிருவரும் பிஜு பட்நாயக் முன்னிலையில் சந்தித்துப் பேசியதற்கு மறுநாள் 14.9.1979 அன்று வேலூர் பொதுக் கூட்டத்தில் பேசிய எம்.ஜி.ஆர் அவர்கள் தி.மு.க, அ.தி.மு.க இணைப்புப் பற்றி உறுதியான கருத்து எதுவும் தெரிவிக்காதது மட்டுமல்ல, அவரை மேடையில் வைத்துக்கொண்டே அவரது அமைச்சர்கள் தி.மு.கழகத்தையும் என்னையும் மிகக் கடுமையாகவும், தரக்குறைவாகவும் தாக்கிப் பேசியிருக்கிறார்கள்.

சேப்பாக்கம் அரசினர் விடுதியில் நாங்கள் சந்தித்துப் பேசிய பிறகு, வேலூர் பொதுக் கூட்டத்துக்கு இடையில் என்ன நடந்தது என்று தெரியாது. வேலூருக்குப் பிறகு, இணைப்புப் பற்றிப் பேச்சுத் தொடரவில்லை. வேலூர் கூட்டத்துப் பேச்சுக்களால் புண்பட்ட தி.மு.கழக முன்னணியினரும் இணைப்பு என்பதில் தங்களுக்குள்ள மாறுபாடான கருத்தைத் தலைமைக்குத் தெரிவிக்கத் தொடங்கினர்.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி
எம்.ஜி.ஆர் - கருணாநிதி

யு.என்.ஐ செய்தி நிறுவனத்தினர், என்னை அணுகி, `தொடர் நடவடிக்கை என்ன?' என்று கேட்டபோது ``இரு தரப்பிலும் தொடர் நடவடிக்கை இல்லை. இரு கட்சிகளின் தேர்தல் உடன்பாடுகள் வெவ்வேறாகத்தானிருக்கக் கூடுமெனக் கருதுகிறேன்” என்று பதில் அளித்தேன். ஆனால், பிஜுபட்நாயக், தனது முயற்சி வெற்றி பெற்றுவிட்டது என்ற மகிழ்ச்சியுடன் டெல்லியிலிருந்து எனக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு வாழ்த்துத் தெரிவித்து இணைப்புக்கான அடுத்த முயற்சிகள் எப்படியிருக்கின்றன என்று விவரம் கேட்டார்.

நான் அவரிடம் வேலூரில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் எம்.ஜி.ஆரும் மற்ற அமைச்சர்களும் பேசிய கருத்துகள் இணைப்புக்கான அடிப்படையில் இல்லாதது மட்டுமல்ல இணைப்புக் கூடாது என்ற நிலையில் இருந்தது என்பதையும், எனவே தி.மு.க. முன்னணியினரும், பல்வேறு மட்டங்களில் உள்ள செயல்வீரர்களும் இணைப்புக்கு இப்போது சாதகமாக இல்லையென்று கூறினேன். அவர் என்னை உடனே புறப்பட்டு டெல்லி வருமாறு கேட்டுக்கொண்டார். இதற்கிடையே இந்திரா காந்தி அமைச்சரவையில் ஓர் அமைச்சராக இருந்தவரும், இந்திரா காந்திக்கு மிகவும் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்த ஸ்டீபன், முரசொலி மாறனுடன் டெல்லியில் தொடர்பு கொண்டு, இந்தியாவின் நன்மைக்காகவும், ஒரு நிலையான ஆட்சி அமைய வேண்டுமென்பதற்காகவும் நடந்தவற்றையெல்லாம் மறந்து விட்டு மீண்டும் தி.மு.க-வுடன் இந்திரா காங்கிரஸ் தேர்தல் உடன்பாடு கொள்ள விரும்புவதாகத் தெரிவித்து இரண்டு மூன்று முறை மாறனிடம் அக்கருத்தை அவர் வலியுறுத்தவே, மாறன் அதுபற்றி எனக்குத் தகவல் தெரிவித்தார்.

`எம்.ஜி.ஆர் மிகுந்த நுணுக்கமானவர். அவர் எல்லோரிடமும் ஒரு கருத்தை கேட்பார். ஆனால், முடிவு அவருடையதாகத்தான் இருக்கும். இந்த நேரத்தில் இதைத்தான் செய்வார் என யாரும் அவரைக் கணிக்க முடியாது. தனது தனிப்பட்ட வாழ்க்கையானாலும் அரசியலானாலும் தனது உள்ளுணர்வு சொன்னபடியே அவர் நடந்துகொண்டார். அப்படித்தான் இரு கட்சிகளின் இணைப்பு குறித்து மிகுந்த மகிழ்ச்சியுடன் முடிவெடுத்த அவர் இறுதி நேரத்தில் அதிலிருந்து பின்வாங்கினார்.
தமிழக அரசின் உளவுத்துறை டிஜிபி மோகன் தாஸ் (`எம்.ஜி.ஆர்; நிழலும் நிஜமும்' நுாலில்)

1971-ம் ஆண்டுக்கு முன்பு பிரதமர் இந்திரா காந்தி வங்கிகளை தேசிய உடமை ஆக்கியது, மன்னர் மானியங்களை ஒழித்தது போன்ற செயல்களுக்காகத் தி.மு.க-வும் இடதுசாரி கட்சிகளும் அவரை ஆதரித்ததைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் தேர்தலில் இந்திரா காந்தியின் ஆதரவு பெற்ற வேட்பாளரான வி.வி.கிரியை ஆதரித்து வெற்றி பெறவும் செய்தது ஒரு கட்டம். அதன் பிறகு, நடைபெற்ற தேர்தல்களில் தி.மு.க, இந்திரா காங்கிரஸுடன் உடன்பாடு கொண்டு நாடாளுமன்றத்துக்கு மட்டும் இந்திரா காங்கிரஸுக்கு 9 இடங்களை விட்டுக் கொடுத்து வெற்றி பெறச் செய்தது. அதன் பின்னர் 1975-ல் நெருக்கடிக் காலப் பிரகடனம், அதற்கு தி.மு.க. பெரும் எதிர்ப்பு, 1976-ல் ஆட்சிக் கலைப்பு- மிசாக் கொடுமை இத்தனைக்கும் பிறகு, மீண்டும் தி.மு.க-வுடன் தேர்தல் உடன்பாடு கொள்ள 1980-ல் இந்திரா காந்தி பெருமுயற்சி எடுத்து, என்னையும் உடனடியாகப் புறப்பட்டு டெல்லிக்கு வந்து தன்னைச் சந்திக்குமாறு கூறுகிறார் என்றால், அது அரசியலில் ஒரு பெரிய திருப்புமுனைதானே'' இவ்வாறு தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் கருணாநிதி.

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

இந்த விஷயம் தொடர்பாக, அ.தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர் கோவை செல்வராஜிடம் பேசினோம்.

``அந்தமாதிரி முயற்சிகள் நடந்தது உண்மைதான். இரண்டு கட்சிகளின் சார்பிலும் பேசப்பட்டது. ஆனால், அந்த முயற்சியில் இருந்து எம்.ஜி.ஆர் பின்வாங்கவில்லை, கலைஞர்தான் பின்வாங்கினார். பிஜு பட்நாயக்கின் முடிவை அப்போதே எம்.ஜி.ஆர் ஒப்புக்கொண்டார், கருணாநிதிதான் பொதுக்குழு, செயற்குழுவைக் கூட்டி முடிவெடுக்க வேண்டும் என்று சொன்னார். பின்னாளில் அதைப் பற்றி எதுவும் பேசவில்லை. பின்னர் இந்திரா காந்தியுடன் கூட்டணி வைத்தார். எம்.ஜி.ஆரின் ஆட்சியைக் கலைத்தார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு ஆட்சியைக் கலைத்த பிறகு, இதற்கு மேல் கட்சி இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என எம்.ஜி.ஆர் முடிவெடுத்துவிட்டார்'' என்கிறார் கோவை செல்வராஜ்.

Vikatan

இந்த விஷயம் தொடர்பாக தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கே.எஸ்.ராதாகிருஷ்ணனிடம் பேசினோம்,

``ஆம், அப்படித்தான் முடிவு செய்யப்பட்டது. சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை அறை எண் 1-ல் பிஜு பட்நாயக் தங்கியிருந்தார். முதற்கட்ட பேச்சுவார்த்தையில் கலைஞர் - எம்.ஜி.ஆர் இருவருமே ஒப்புக்கொண்டார்கள். பின்னர், எம்.ஜி.ஆர் பின்வாங்கவே அந்த முயற்சி கைவிடப்பட்டது'' என்றார் அவர்.

கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

எம்.ஜி.ஆருக்கு இணைப்பில் விருப்பமிருந்தபோதும், தி.மு.க - அ.தி.மு.க இணைப்பைத் தடுத்தது பண்ருட்டி ராமச்சந்திரன்தான் என்றும், அவர்தான் எம்.ஜி.ஆரிடம் கட்சிகள் இணைப்பு வேண்டாம் என அறிவுறுத்தினார் என்றும் ஒரு விருது வழங்கும் விழாவில் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.

அதுகுறித்து, விளக்கம் கேட்க பண்ருட்டி ராமச்சந்திரனைத் தொடர்புகொள்ள முயன்றும் தொடர்புகொள்ள முடியவில்லை.

ஒருவேளை பிஜு பட்நாயக்கின் முயற்சி நிறைவேறியிருந்தால், தமிழக அரசியலில் அதற்குப் பிறகு நடந்த பல கேலிக்கூத்துகள் தவிர்க்கப்பட்டிருக்குமோ, என்னவோ?

அடுத்த கட்டுரைக்கு