Published:Updated:

தி.மு.க-வுக்கு எதிரான பிம்பம்... சீமானை முன்வைத்து `கணக்கு'ப் போடும் பா.ஜ.க!

கல்யாண சுந்தரம்
கல்யாண சுந்தரம்

கல்யாணசுந்தரத்தால், தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது; அவை ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது

"நாம் தமிழர் கட்சியிலிருந்து விலகிய கல்யாணசுந்தரத்தையும் மத்திய உளவுத்துறை கண்காணிக்கிறதாமே..?" என்று கழுகாரிடம் கேட்டோம்.

"ஆமாம். கல்யாண சுந்தரம் பேசிய பழைய வீடியோக்களில் சர்ச்சைக்குரிய பேச்சுகளைத் தேட ஆரம்பித்திருக்கிறது உளவுத்துறை. ஏதாவது சிக்கினால் அதைவைத்து கல்யாணசுந்தரத்தை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் முடக்கவும் திட்டமிட்டிருக்கிறதாம்."

"அவர்மீது ஏனிந்த காட்டம்?"

"தமிழ்த் தேசிய அரசியலில் சீமான் மட்டுமே பெரிய பிம்பமாக இருக்க வேண்டும் என்று பா.ஜ.க கணக்குப் போடுகிறது. ஈழம், காவிரி பிரச்னைகளை உணர்ச்சிபூர்வமாகப் பேசி, மக்கள் மத்தியில் தி.மு.க-வுக்கு எதிரான பிம்பத்தை சீமான் ஏற்படுத்தும் அளவுக்கு வேறு யாராலும் முடியவில்லை என டெல்லி கருதுகிறதாம்.

அடுத்த மாதம் கட்சி தொடங்கும் கல்யாணசுந்தரம், தனி ஆவர்த்தனம் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கல்யாணசுந்தரத்தால், தி.மு.க எதிர்ப்பு ஓட்டுகள் சிதறிவிடக் கூடாது; அவை ஒருமுகப்படுத்தப்பட வேண்டும் என்று பா.ஜ.க நினைக்கிறது. இதனால்தான் அவரை முடக்கும் வேலையை உளவுத்துறை மூலமாக ஆரம்பித்திருக்கிறார்களாம்."

"ஓஹோ... 'ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு சதி நடந்திருக்கிறது. என்னை பலியாக்கிவிட்டனர்' என முன்னாள் தலைமைச் செயலாளர் ராமமோகன் ராவ் கொந்தளித்திருக்கிறாரே..?"

ஆறுமுகசாமி
ஆறுமுகசாமி

"ஜெயலலிதா மரணத்தின்போது ராமமோகன் ராவ்தான் தலைமைச் செயலாளராக இருந்தார். இதனால், நிறைய விஷயங்கள் அவருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், அதை முன்வைத்து மேற்கண்ட குற்றச்சாட்டை அவர் சொல்லியிருக்கலாம். இந்த விஷயத்தில் அவர் வெளிப்படையாகப் பேசினால், பல விவகாரங்கள் வெளியே வரும் என்கிறார்கள்!"

"தி.மு.க தலைவர் ஸ்டாலினிடமிருந்தும், 'ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தை அரசுத் தரப்பில் இழுத்தடிக்கிறார்கள்' என்று அறிக்கை வந்திருக்கிறதே, இதற்கும் அதற்கும் ஏதேனும் தொடர்பிருக்கிறதா?"

"இல்லை, பெண்கள் ஓட்டை குறிவைக்கிறார் ஸ்டாலின். விசாரணை ஆணையத்தின் பதவிக்காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. ஒன்பதாவது முறையாக மேலும் நான்கு மாதங்களுக்கு நீட்டிப்பு கேட்டிருக்கிறார் ஆறுமுகசாமி. இந்த விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்னும் சாட்சி சொல்லவில்லை. 'ஜெயலலிதா ஆதரவு மனநிலையிலிருக்கும் பெண்களின் ஓட்டுகளைக் குறிவைத்துத்தான், இந்தப் பிரச்னையை ஸ்டாலின் எழுப்பியிருக்கிறார்' என்கிறது தி.மு.க வட்டாரம். ஒருவேளை ஆணையத்தின் அறிக்கை இந்த ஆண்டு இறுதிக்குள் வெளிவந்தால், 'தி.மு.க அழுத்தம் கொடுத்ததால்தான் அறிக்கை வந்தது' எனக் கூறிக்கொள்ளலாம் அல்லவா!"

> "மாலத்தீவுக்கு வாரிசு பிரமுகர் ஒருவர் டூர் அடித்ததில்தான் வில்லங்கம் முளைத்திருக்கிறது..." என்று கழுகார் பகிர்ந்த விரிவான தகவல்களை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்க க்ளிக் செய்க... https://bit.ly/3m7pKcm > மிஸ்டர் கழுகு: தனி விமானம்... ஐந்து பெண்கள்... இன்பச் சுற்றுலா... 'பயங்கரவாத' விசாரணை வளையத்தில் வாரிசு! https://bit.ly/3m7pKcm

சிறப்புச் சலுகைகள்:

> ஆனந்த விகடன் தொடங்கி பசுமை விகடன் வரை விகடன் இதழ்கள் அனைத்தையும் டிஜிட்டலில் சுடச்சுட வாசித்து பயன்பெறுவதுடன், 15 ஆண்டு கால பொக்கிஷங்களிலும் வலம்வர... ரூ.1499 மதிப்பிலான 1 வருட டிஜிட்டல் சந்தாவை ரூ.999-க்குப் பெற இங்கே க்ளிக் செய்க > https://bit.ly/3h3Rdth

> விகடன் App-ஐ டவுன்லோடு செய்து ரெஜிஸ்டர் செய்தால், ரூ.149 மதிப்புள்ள ஒரு மாத Vikatan Digital Pack-ஐ முற்றிலும் இலவசமாகப் பெறலாம். விகடன் ஆப் டவுன்லோடு செய்து, இந்தச் சலுகையைப் பெற https://bit.ly/2VRp3JV

அடுத்த கட்டுரைக்கு