Published:Updated:

`மனுவை எரித்த கைகள் நிகழ்த்திய சமதர்மப் புரட்சி!' - அம்பேத்கரும் அரசியலமைப்புச் சட்டமும் - பகுதி 3

அம்பேத்கர்
News
அம்பேத்கர்

``அரசியல் சட்டத்தால் என் மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்ற மோசமான நிலை வந்தால், இந்திய அரசியல் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்துவதில் முதல் ஆளாக நான் இருப்பேன்'' என்று உறுதியான குரலில் கர்ஜித்தார் அம்பேத்கர்.

அம்பேத்கரின் 65-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடந்த 6-ம் தேதி, `என் சமூகத்துக்காக இன்னும் விழித்துக் கொண்டிருக்கிறேன்!' என்ற தலைப்பில் சிறப்புக் கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தோம். அதன் மூன்றாம் பகுதி இது.

பழம்பெருமை கொண்ட பாரத நாட்டுக்கு இதிகாசங்கள் தேவைப்பட்டன.

விலங்குகளை, பறவைகளை வேட்டையாடி உண்பதால், `நீசர்கள்' என்று ஒதுக்கி வைக்கப்பட்டு, காடுகளில் வாழ்ந்த வேடுவர்குலத்தில் பிறந்த வால்மீகிதான் ராமாயணம் எழுதுவதற்குத் தேவைப்பட்டார்.

கடலில் வலைவீசி மீன் பிடித்து உண்பதால்... `கரையர்கள், நீசர்கள், கடலாடிகள்' என்று ஒதுக்கி வைக்கப்பட்ட பருவதகுலத்தில் பிறந்த மச்சகந்தியின் மகன் வியாசர், மகாபாரதம் எழுதத் தேவைப்பட்டார்.

இவையெல்லாம் புராண காலம் என்று ஒதுக்கித் தள்ளிவிட முடியாது.

அம்பேத்கர்
அம்பேத்கர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

19-ம் நூற்றாண்டில்கூட, `தொட்டால் தீட்டு... பார்த்தால் தீட்டு' என்று ஒதுக்கி வைக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மகர் இனத்தில் பிறந்த பீமா ராவ் அம்பேத்கர்தான்... இந்து, பௌத்தம், கிறிஸ்துவம், முஸ்லீம், சீக்கியர், பார்சி என்று அனைத்து மதங்களுக்குமான அனைத்துச் சாதிகளுக்குமான அரசியல் சட்டத்தை இயற்றத் தேவைப்பட்டார்.

உலகத்தின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், ஆகச்சிறந்த அரசியல் சாசனத்தை இயற்றி நடைமுறைப்படுத்தியிருக்கிறார் அம்பேத்கர்.

இங்கே எந்தவிதத்தில் எந்த விகிதாசாரத்தில் ஏற்றத்தாழ்வு பார்ப்பது? பிறப்பு, படிப்பு அறிவு இவற்றையெல்லாம் அளவுகோல்களாக வைத்துக்கொண்டு, `மேல்சாதி, உயர்ந்தவர்' என்றெல்லாம் இங்கே உயர்த்திப் பிடிக்கிறார்கள். ஆனால், அம்பேத்கருக்கு நிகரான படிப்பாளி, அறிவாளி இந்தியாவிலேயே காணக்கிடைக்கவில்லை. ஆனால், அம்பேத்கர்... கீழ்சாதி, தாழ்த்தப்பட்டவர்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

``1947 ஆகஸ்ட் 15 அடிமைத் தலையிலிருந்து விடுதலை அடைந்த இந்திய நாட்டின் முதல் பிரதம அமைச்சராகத் தேர்வு செய்யபட்டிருந்த ஜவஹர்லால் நேரு, திடீரென்று ஒருநாள் என்னிடம் சுதந்திர இந்தியாவின் முதல் அமைச்சரவையில் சட்ட அமைச்சராக இருக்கும்படி கேட்டுக்கொண்டார்.

ஆங்கிலேயரிடமிருந்து அதிகாரத்தைப் பெறப்போகிற அந்தநாள் வரை என் திறமையைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்த காங்கிரஸ்காரர்கள், என்னுடன் சமாதானம் செய்துகொள்ளவும், விட்டுக்கொடுக்கவும், பாராட்டவும் தலைப்பட்டார்கள். நானும் பழையதையெல்லாம் மறந்து, திறந்த மனதோடு ஏற்றுக்கொண்டேன். முதல்முறையாக மத்திய அரசில் ஒரு தாழ்த்தப்பட்டவர் அமைச்சர் ஆக்கப்பட்டது, தாழ்த்தப்பட்டவர்களின் சரித்திரத்தில் ஒரு பொன்னாள்.

நேரு
நேரு

எதிரிகளால் இகழப்பட்ட நான், அவர்களாலேயே, `ஆட்சியைச் சிறப்புடன் நடத்தக்கூடியவன்' என்று புகழப்பட்டேன். தீண்டத்தகாத ஒருவன்; வண்டிகளில் இருந்து உதைத்துத் தள்ளப்பட்டவன்; பள்ளியில் ஒதுக்கி உட்கார வைக்கப்பட்டவன்; பேராசிரியராக இருக்கும்போதும் அவமதிக்கப்பட்டவன்; ஹாஸ்டல், ஹோட்டல், முடித்திருத்தகம், கோயில்கள் எனப் பல இடங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டவன்; ஆங்கிலேயருக்கு வால் பிடிப்பவன் என்று இகழப்பட்டவன்; `இரக்கமில்லாத பிசாசு' அல்லது `அரசியல்வாதி' என்று கருதப்பட்டவன்; காந்தியாரை எதிர்த்து வந்தவன்... இன்னும் எவ்வளவு முடியுமோ அவ்வளவும் இகழப்பட்ட ஒருவன், காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக இல்லாத ஒருவன், இன்று தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக ஆனதோடு, இந்தியாவின் பார்வை, நோக்கம், விருப்பம் ஆகியவற்றை விளக்கும் அரசியல் சட்டத்தை அமைக்கும் பணிக்கும் பொறுப்பாளனாக்கப்பட்டேன்.

இந்தியாவின் சரித்திரத்தில் இது மிகப்பெரிய சாதனை என்பதோடு, ஆச்சர்யப்படக்கூடியதுமாகும். இந்தியா, தான் செய்த தீண்டாமைக் கொடுமைக்கு கழுவுவாயாக, சட்டத்தை இயற்ற புதிய மனுவாக என்னைப் பார்த்தது; காலம்காலமாக அவர்ணஸ்தர்களாக்கப்பட்டவர்களில் ஒருவனான என்னை இதற்காகத் தேர்ந்தெடுத்தது; மனுஸ்மிருதியைக் கொளுத்திய என்னிடமே தன்னுடைய சட்டத்தை முடிவுசெய்து கொடுக்கும் பொறுப்பை ஒப்படைத்தது''

- அம்பேத்கரின் வார்த்தைகளில்தான் எத்தனை எத்தனை தீர்க்கம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை அம்பேத்கர், 2 வருடம் 11 மாதம் 18 நாள்கள் இரவு பகலாக உடலாலும் உள்ளத்தாலும் விழித்திருந்து உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஆகச் சிறந்த சட்டத்தை இயற்றி 26.11.1949 அன்று ஒப்படைத்த அரசியல் அமைப்புச் சட்டம், நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது,

அன்றைய குடியரசுத் தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத் ஆற்றிய உரையே, அம்பேத்கரின் இந்தத் தீர்க்கத்துக்கு அத்தாட்சி.

இந்த இருக்கையில் அமர்ந்துகொண்டு நாள்தோறும் அவையின் நடவடிக்கைகளைக் கூர்ந்து கவனித்த நான், ஒன்றை நன்கு உணர்ந்தேன். நலிவுற்ற உடல்நிலையிலும் ஓய்வறியாது பணியாற்றியிருக்கிறார் அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழுத் தலைவரான அம்பேத்கர். எந்த அளவுக்கு ஆர்வம், ஈடுபாட்டுடன் பணியாற்றினாலும், அம்பேத்கரைத் தவிர வேறு யாராலும் அரசியல் சட்டத்தை இந்த அளவுக்கு உறுதியாக எழுதியிருக்க முடியாது. அம்பேத்கரை வரைவுக்குழு தலைவராக நாம் அமர்த்தியது போன்றதொரு சிறந்த முடிவை, இதற்கு முன்பும் எடுத்ததில்லை... இனியும் எடுக்கப்போவதில்லை. தன்னைத் தேர்ந்தெடுத்தது மிகவும் சரியே என்பதை மட்டும் நிரூபித்துக் காட்டவில்லை. அவர் அதற்கும் மேலாக, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட பணியை மிகத் திறம்பட முடித்துள்ளார் அம்பேத்கர்.
என்று மனமாரப் பாராட்டினார் ராஜேந்திர பிரசாத்.

அன்றைய இந்திய தலைவர்களில் ஒருவரான ஹெச்.ஜே. காண்டேகர் பேசியதுதான் பொன்னெழுத்துகளில் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று. ``இந்தியாவை இதுவரை நாசமிக்க மனுதர்மம் ஆண்டது. இனி, நேசமிக்க மகர்தர்மம் ஆளும்" என்று நெற்றியடியாகச் சொன்னார் காண்டேகர்.

அரசியலமைப்புச் சட்டத்தை இயற்றியதில் அம்பேத்கரின் பங்கு மகத்தானது. ஆனால், அதை மறைப்பதற்காக இன்றைக்கும்கூட ஒரு கூட்டம் மறைந்திருந்து செயல்பட்டபடியே இருக்கிறது. அவர்களுக்கெல்லாம் சாட்டையடியாக அன்றைக்கே அமைச்சர் கிருஷ்ணமாச்சாரி அனைத்தையும் தெளிவுற சொல்லிச் சென்றிருக்கிறார். இவரும் அந்தக் குழுவில் இடம்பெற்றிருந்தவர்களில் ஒருவர் என்பதுதான் இங்கே நாம் அடிக்கோடிட்டுத் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.

``அரசியல் சட்டத்தைத் தயாரிக்க 7 அங்கத்தினர்கள் கொண்ட குழு நியமிக்கப்பட்டது. ஒருவர் ராஜினாமா செய்தார். அவருக்குப் பதிலாக வேறொருவர் நியமிக்கப்பட்டார். மற்றொருவர் இறந்தார். அதற்குப் பதிலாக யாரும் நியமிக்கப்படவில்லை. ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். மற்றொருவர் மாகாணங்களைப் பற்றிய செயல்பாடுகளில் மூழ்கியிருந்தார். உடல்நிலை காரணமாக ஓரிருவர் டெல்லியிலிருந்து வெகு தூரத்தில் இருந்தார்கள். அவர்களால் வந்து செயல்பட முடியவில்லை. ஆகமொத்தத்தில் அரசியல் சட்டத்தைத் தயாரிக்கும் முழுபொறுப்பும் அம்பேத்கர் தலையில் விழுந்தது. நல்லபடி பாராட்டக்கூடிய அளவில் இந்தக் காரியத்தை செய்து முடித்த அம்பேத்கருக்கு நாம் நன்றியுடன் இருக்கிறோம்'' என்றார் கிருஷ்ணமாச்சாரி.

மல்லை சத்யா
மல்லை சத்யா

இவை அத்தனையும் கேட்டு புளகாங்கிதமடைந்து, புகழுக்கு அடிமையாகி அம்பேத்கர் அப்படியே சாஷ்டாங்கமாக சரணாகதி அடைந்து விடவில்லை.

``அரசியல் சட்டத்தால் என் மக்களுக்கு எந்தவிதப் பயனும் இல்லை என்ற மோசமான நிலை வந்தால், இந்திய அரசியல் சட்டத்தை தீயிட்டுக் கொளுத்துவதில் முதல் ஆளாக நான் இருப்பேன்'' என்று உறுதியான குரலில் கர்ஜித்தார் அம்பேத்கர்.

ஆனால், எதற்காக... யாருக்காக... எந்த இனத்துக்காகப் பாடுபட்டாரோ, அதே இனமே அவரை முழுமையாக உள்வாங்கிக் கொள்ளவில்லை என்பதுதான் சோகம்.

இன்றைக்கு ஒட்டுமொத்தமாகத் தாழ்த்தப்பட்ட இனத்தவரையும் தாண்டி பெருவாரியானவர்களால் அம்பேத்கர் கொண்டாடப் படுகிறார். ஆனால், தங்களுடைய பரமவைரிகளின் சூழ்ச்சிகளை அறியாமல், அவர்களுடனேயே கைகோத்து செயல்படுகிறார்கள் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த பலரும். இது, அம்பேத்கர் உயிருடன் இருக்கும்போதேகூட நடந்தது... பிரித்தாளும் சூழ்ச்சியாக, ஆதிக்கசாதியினர் விரித்த வலையில் பலரும் வீழ்ந்தனர்.

சாதியை இன்றளவும் உயர்த்திப் பிடிக்கும் பிறசாதி சுயநலமிகளும் அம்பேத்கருக்கு எதிரான அஸ்திரங்களை வீசத் தவறவில்லை. இவையெல்லாம் அவரைச் சோர்ந்துபோகச் செய்தாலும், அவருடைய உறுதியை இறுதிவரை குலைக்க முடியவில்லை.

கடைசிவரை அவருடைய கவலையெல்லாம்..?

(படிப்போம்)

- மல்லை சத்யா