Published:Updated:

தீபா - தீபக், ஜெயலலிதாவின் ஆயிரம் கோடி சொத்துக்கு வாரிசானது எப்படி... சட்டம் சொல்வது என்ன?

தீபா - தீபக்
தீபா - தீபக்

ஜெயலலிதா இறந்த பின் அரசியல் களேபரங்கள் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒரு முடிவுக்கு வந்தன. ஆனால், ஆஸ்தி சண்டைகள் மூன்று ஆண்டுகள் கடந்து தற்போதுதான் முடிவுக்கு வந்திருக்கின்றன.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆணி வேர், முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா மறைந்தபோது, அரசியலுக்கும், ஆஸ்திக்கும் வாரிசுகள் யாரையும் பெயரிட்டு குறிப்பிடவில்லை. விளைவு, போயஸ் தோட்டம், செயின்ட் ஜார்ஜ் கோட்டை, கூவத்தூர் என பற்றி எறிந்த பதற்றம், ஒரேயொரு நீதிமன்றத் தீர்ப்பில் பரப்பன அக்ரஹாரம் சிறையில் அடங்கிப்போனது. ஒட்டுமொத்த அரசியல் களேபரங்களும் 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் முடிவுக்கு வந்தாலும், ஆஸ்தி சண்டைகள் மூன்று ஆண்டுகள் கடந்து தற்போதுதான் முடிவுக்கு வந்திருக்கின்றன.

ஜெயலலிதா இறந்தபோது, அவரது வாரிசாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டவர்தான் ஜெ.தீபா. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமன் மகள். ஜெயலலிதாவின் சாயல் கொண்ட அவருக்கு ஆரம்பத்தில் நிறைய ஆதரவு இருந்துவந்தாலும். அரசியலில் வெகு சீக்கிரமே அவர் பின்னுக்குத் தள்ளப்பட்டார்.

ஜெ.தீபா
ஜெ.தீபா

ஜெயலலிதா மறைவுக்குப் பின், தமிழக அரசு ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் என அறிவித்தது. இதற்காக, அவசரச் சட்டமும் இயற்றப்பட்டது. ஆனால், வேதா இல்லத்தை நினைவிடமாக மாற்ற தீபா, தீபக் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதுகுறித்து தீபா 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், ``போயஸ் கார்டன் இல்லம் எங்களுக்குச் சொந்தமானது. என் பாட்டி வாங்கியது. என் அத்தையின் சொத்து அது. அ.தி.மு.க-வுக்கும் போயஸ் இல்லத்துக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளும் சட்டரீதியாக மீட்க அனைத்து முயற்சிகளும் என்னால் மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருந்தார்.

ஜெயலலிதாவின் அனைத்து சொத்துகளின் மொத்த மதிப்பு 2016-ம் ஆண்டு கணக்கிடப்பட்டு ரூ.913 கோடி என அறிவிக்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க வாரிசுகள் என்ற அடிப்படையில் தங்களை நிர்வாகிகளாக நியமிக்க வேண்டும் என ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, அவரின் சகோதரர் தீபக் ஆகியோர் வழக்கு தொடர்ந்தார்கள். இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், கடந்த வாரம் உயர் நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ் வெளியிட்ட தீர்ப்பில், தீபா மற்றும் தீபக்கை ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அறிவித்தனர்.

 வெ.ஜீவகிரிதரன்,
உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.
வெ.ஜீவகிரிதரன், உயர்நீதிமன்ற வழக்கறிஞர்.

இந்த தீர்ப்பின் பின்னணியில் இருக்கும் சட்டம் என்ன? சொத்தின் வாரிசுகள் குறித்து இந்து வாரிசுரிமை சட்டம் சொல்வது என்ன? உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஜீவகிரிதரனிடம் பேசினோம்,

``தன் சொத்துகள் குறித்து உயில் சாசனம் எதுவும் எழுதி வைக்காமல் இறந்து போகும் இந்து சமயத்தைச் சார்ந்த பெண் ஒருவரின் சொத்துகளுக்கு யார் வாரிசு என்பதை இந்து வாரிசுரிமைச் சட்டப் பிரிவு 15 தெளிவாக வரையறை செய்துள்ளது. அதன்படி, ஜெயலலிதாவின் சொத்துகளுக்கான வாரிசாக தீபா மற்றும் தீபக் இருவரும் சட்டப் பிரிவு 15 (1) (d)-ன் படி தகுதி பெறுகிறார்கள்.

வாரிசுரிமை படிநிலைப்படி முதல் உரிமை கணவன், குழந்தைகள், பேரக்குழந்தைகளுக்கு உண்டு. இவர்கள் யாரும் இல்லாத நிலையில் இரண்டாவதாக கணவனுடைய வாரிசுகளுக்கு உரிமை கிடைக்கும். முதலிரண்டு படிநிலைகளிலும் யாரும் இல்லாத பட்சத்தில் மூன்றாவது நிலையில் அப்பெண்ணின் தாயும், தந்தையும் அந்த உரிமையைப் பெறுவார்கள். இந்த மூன்று படிநிலைகளிலும் யாரும் இல்லாதபோது நான்காம் படிநிலை அப்பெண்ணின் தந்தையின் வாரிசுகள் அவ்வுரிமையைப் பெறுகிறார்கள்.

சென்னை தவிர மற்ற மாவட்டங்களில் கட்டுக்குள் கொரோனா... முதல்வர் சொல்வது உண்மைதானா?

ஜெயலலிதா அவர்களுக்கு கணவன், குழந்தைகள் இல்லாததால் முதல் மற்றும் இரண்டாம் படிநிலைகளில் வாரிசு யாரும் இல்லை. அவருடைய பெற்றோர் உயிருடன் இல்லாததால் மூன்றாம் படிநிலையிலும் யாரும் இல்லை. அதனாலேயே நான்காம் படிநிலையான தந்தையின் வாரிசுகள் என்ற வகையில் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் பிள்ளைகளான தீபாவும், தீபக்கும் சட்டபூர்வமாக வாரிசுகளாகிறார்கள்."

இந்த வழக்கின் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்வது குறித்து, தமிழக அரசின் சார்பாக எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் வெளியிடவில்லை. இந்த நிலையில், ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது நல வழக்கு தொடர்ந்திருக்கிறார் டிராபிக் ராமசாமி. நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவருக்கு நினைவிடம் கட்ட மக்கள் பணத்தை செலவழிக்கக் கூடாது என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்து வாரிசுரிமை சட்டப்பிரிவு 115
இந்து வாரிசுரிமை சட்டப்பிரிவு 115

சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்தார். கொடநாடு உள்ளிட்ட இந்த சொத்துகளின் ஒப்பந்தம், 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் முடிந்துவிட்டதால் அந்த சொத்துகள் யாவும் தனக்கே சொந்தம் என சசிகலா ஒருபுறம் உரிமை கோருகிறார். ஆகவே, ஜெயலலிதாவின் சொத்துகளைப் பற்றியான சர்ச்சைகளை பொறுத்தவரை, இந்தத் தீர்ப்பு முடிவல்ல, தற்காலிகமே..!

அடுத்த கட்டுரைக்கு