Election bannerElection banner
Published:Updated:

ம.தி.மு.க., வி.சி.க-வுக்கு எத்தனை தொகுதிகள்?

வைகோ, திருமாவளவன்
வைகோ, திருமாவளவன்

ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து தி.மு.க ஒரு முடிவுக்கு வந்திருக்கிறது.

தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், இந்திய ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட பல கட்சிகள் இடம்பெற்றுள்ளன. சீட் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை முறைப்படி இன்னும் தொடங்காத நிலையில், கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கக்கூடிய எண்ணிக்கை குறித்து, அவ்வப்போது தி.மு.க-வுக்குள்ளேயே அந்தக் கட்சியின் தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்திவந்தனர். சமீபத்தில், அரக்கோணம் தி.மு.க எம்.பி ஜெகத்ரட்சகனுக்குச் சொந்தமான இடத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கக்கூடிய சீட் எண்ணிக்கை குறித்து ஒரு முடிவு எட்டப்பட்டிருக்கிறதாம்.

ஸ்டாலின் - வைகோ
ஸ்டாலின் - வைகோ

இது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க சீனியர் நிர்வாகி ஒருவர், ``ம.தி.மு.க கட்சி போட்டியிட 12 சீட்களை வைகோ எதிர்பார்க்கிறார். சாத்தூர், வாசுதேவநல்லூர், பாளையங்கோட்டை, பட்டுக்கோட்டை, காரைக்குடி, மயிலாடுதுறை, அண்ணா நகர், கிணத்துக்கடவு உள்ளிட்ட தொகுதிகள் அவர் அளித்த லிஸ்ட்டில் இடம்பெற்றுள்ளன. இவைபோக, திருப்பூர், ஈரோடு, திருச்சி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலும் தொகுதிகள் வேண்டுமெனக் கூறியிருக்கிறார். ஆனால், எட்டு தொகுதிகளை மட்டும் ம.தி.மு.க-வுக்கு ஒதுக்குவதென அறிவாலயம் முடிவெடுத்திருக்கிறது.

`மு.க ஸ்டாலின் ஆகிய நான்... 100 நாளில் தீர்வு!’ - புதிய கோணத்தில் தி.மு.க பிரசாரம்

கோவில்பட்டி தொகுதியை ம.தி.மு.க-வுக்கு விட்டுத்தர தி.மு.க தயார்தான். ஆனால், அதை வைகோ விரும்பவில்லை. 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, ஒரு சமூகப் பிரச்னையை ஏற்படுத்தி, கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதற்குக் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதன் தொடர்ச்சியாக, தான் போட்டியிடப்போவதில்லை என்று வைகோவே அதிரடியாக அறிவித்தார். இப்போதும் அந்தப் பிரச்னை நீறுபூத்த நெருப்பாகப் புகைவதால், கோவில்பட்டி தொகுதிக்கு பதிலாக சாத்தூர் தொகுதியை வைகோ கேட்கிறார். வைகோவின் மகன் துரை வையாபுரி, சாத்தூர் அல்லது சென்னையில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம்.

திருமாவளவன்
திருமாவளவன்

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திருவள்ளூர், திருவிடைமருதூர், ஸ்ரீபெரும்புதூர், காட்டுமன்னார்கோவில், செய்யூர், மயிலம், பொன்னேரி, வானூர், பரமக்குடி, மானாமதுரை, வந்தவாசி, அரூர் என 12 தொகுதிகளை எதிர்பார்த்தார். அவர் கட்சிக்கு எட்டு சீட்கள் மட்டுமே ஒதுக்க முடியுமென அறிவாலயம் முடிவெடுத்திருக்கிறது. பிப்ரவரி இறுதிக்குள் கூட்டணி சீட் பங்கீடு பேச்சுவார்த்தை முடிவடைந்து பிரசாரம் சூடுபிடிக்கும்” என்றார்.

தனிச் சின்னம்: இறங்கிவந்த ஸ்டாலின்... விட்டுக்கொடுக்கத் தயாராகும் திருமா... அமைதி காக்கும் வைகோ!

கூட்டணிக் கட்சிகள் அவரவர் விரும்பிய சின்னத்தில் போட்டியிடலாமென தி.மு.க ஏற்கெனவே தெளிவுப்படுத்திவிட்டது. ஆனால், ஒரு சில தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டால் வெற்றி வாய்ப்பு எளிதாக அமையுமென ம.தி.மு.க., வி.சி.க கட்சிகளின் தலைமையிடம் அறிவாலயம் கூறியிருக்கிறதாம். முறைப்படி நடைபெறும் சீட் பங்கீடு பேச்சுவார்த்தையின்போது, போட்டியிடும் சின்னம் தொடர்பாகவும் பேசித் தெளிவுபெறவிருக்கிறார்களாம்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு