Election bannerElection banner
Published:Updated:

கமல் `பிக் பாஸ்’-ல் ஸ்கோர் செய்ததை, ரஜினி `மேன் Vs வைல்டு’-ல் எடுப்பாரா? சின்னத்திரை `அரசியல்'

`பிக்பாஸ்’  கமல் / `மேன் Vs வைல்டு’ ரஜினி
`பிக்பாஸ்’ கமல் / `மேன் Vs வைல்டு’ ரஜினி

கமலின் கொள்கையும் பாணியும் வேறாக இருந்தாலும், கமலின் பாதையில்தான் ரஜினியும் பயணிக்க முடிவுசெய்திருக்கிறார் போலிருக்கிறது. கல்லையும் முள்ளையும் கடந்து, கமல் பயணித்த பாதையில் கவனமுடன் அடியெடுத்துவைத்து, அதிரடியாக இலக்கைத் தொடவேண்டுமென்பது ரஜினியின் திட்டம்.

``மறுபடியும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது!’’ என்று தொலைக்காட்சியில்தான் முதல்முதலாக ரஜினி அரசியல் பேசினார். வீட்டுக்கு வீடு தொலைக்காட்சி இல்லாத 1995ல், ரஜினி இதைப் பேசியபோது அவரைப் பார்க்கவும் கேட்கவும் வீதியெல்லாம் வெள்ளமாய்த் திரண்டிருந்தது மக்கள் கூட்டம். ஷோ ரூம்களின் முன்பாக சாலையோரங்களிலும், ஓரளவுக்கு வசதி படைத்தவர்களின் வீடுகளிலும் திரளாகக் கூடியிருந்த மக்கள், ரஜினியின் பேச்சை அப்படியே நம்பினர். அடுத்து வந்த தேர்தலில் ஜெயலலிதா தோற்றார். தி.மு.க ஆட்சியைப் பிடித்தது.

அதற்குப் பின், ஜெயலலிதா மூன்று முறை ஆட்சியைப் பிடித்து முதல்வரானார். ஆனால், அன்று அரசியல் பேச்சைத் தொடங்கிய ரஜினி, இன்று வரை அரசியலைப் பேசிக்கொண்டே இருக்கிறார். களத்திற்கு வந்தபாடில்லை. `நான் எப்போ வருவேன் எப்பிடி வருவேன்னு தெரியாது. ஆனா, வரவேண்டிய நேரத்துல வருவேன்’ என்று ரஜினி `முத்து’ படத்தில் டயலாக் பேசியதும் அதே 1995-ம் ஆண்டில்தான்.

செவாலியே விழாவில் ஜெயலலிதா, ரஜினி...
செவாலியே விழாவில் ஜெயலலிதா, ரஜினி...
Vikatan

அரசியலுக்கு வருவதாக ரஜினி டயலாக் பேசி, கால் நுாற்றாண்டு காலம் கடந்தோடிவிட்டது. ஆனால், அரசியலைப் பற்றி பேசாமலே இருந்த கமல், திடீரென அரசியலுக்கு வந்துவிட்டார். அரசியல் கட்சி தொடங்குவதற்கு முன்பாக அவர் செய்த ஆயத்தங்களில் முக்கியமானது, வெகுஜன ஊடகமாக உள்ள தொலைக்காட்சியில் தோன்றி, தன் பிரபல்யத்தை இன்னும் இரட்டிப்பாக்கிக் கொண்டதுதான்.

கமலின் நடிப்பு பிடித்தவர்கள், பிடிக்காதவர்களைத் தாண்டி, கோடிக்கணக்கான தமிழர்களின் வீடுகளுக்குள்ளும் மனங்களுக்குள்ளும் இடம்பிடிப்பதற்கு, அவருக்கு `பிக் பாஸ்’ பெரிதும் கைகொடுத்தது. படித்த, நடுத்தர மக்கள், அறிவு ஜீவிகள் மட்டுமே ரசிக்கும் கலைஞனாக இருந்த கமலுக்கு, ஏ,பி,சி,டி என அனைத்து சென்டர்களிலும் `அப்ளாஸ்’களையும் ஆதரவையும் பெற்றுத்தந்தது அந்த நிகழ்ச்சி.

ரஜினி - கமல்
ரஜினி - கமல்

நாடாளுமன்றத் தேர்தலில் நகர்ப்புறங்களில் கணிசமான அளவு வாக்குகளை மக்கள் நீதி மய்யம் வாங்கியதற்கு, அந்த நிகழ்ச்சி ஏற்படுத்திய தாக்கமும் அதைத்தொடர்ந்து கமல் மேற்கொண்ட பயணங்களும் மிக முக்கியக் காரணம். அதை அவரால் அடுத்த கட்டத்துக்குக் கொண்டுசெல்ல முடியாததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. அரசியலில் ஒரு முட்டுச்சந்தில் கமல் நின்று கொண்டிருக்கிறார்.

கமலின் கொள்கையும் பாணியும் வேறாக இருந்தாலும், கமலின் பாதையில்தான் ரஜினியும் பயணிக்க முடிவுசெய்திருக்கிறார் போலிருக்கிறது. கல்லையும் முள்ளையும் கடந்து கமல் பயணித்த பாதையில், கவனமுடன் அடியெடுத்துவைத்து, அதிரடியாக இலக்கைத் தொடவேண்டுமென்பது ரஜினியின் திட்டம். அதற்கு, காட்சி ஊடகம் என்கிற வெகுஜன ஊடகத்தையும் பயன்படுத்த வேண்டுமென்று நினைக்கிறார், ரஜினி. ஆனால், கமலைப் போன்று ரஜினியால் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தொடர்ச்சியாகப் பங்கேற்க முடியாது. அது அவரின் அரசியல், சமூக அறிவை வெளியுலகத்திற்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவிடும். அது, அவருடைய இமேஜையும் சினிமா மார்க்கெட்டையும் பதம் பார்க்கும் அபாயமுண்டு.

ரஜினி - ஜெயலலிதா- கமல்
ரஜினி - ஜெயலலிதா- கமல்

அதனால்தான், பேச்சுக்கு அதிக வேலையில்லாத, தன் மீதான மக்களின் எதிர்பார்ப்பைப் போலவே ஒரு சாகசமான நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் முடிவு செய்திருக்கிறார். டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாகும் `மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சி, 150-க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள மக்கள் வெகுவாக ரசிக்கும் நிகழ்ச்சி என்பதோடு, இந்தியாவிலும் அதற்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்தியாவின் முக்கியமான பல்வேறு மொழிகளிலும் இந்நிகழ்ச்சியை கோடிக்கணக்கான மக்கள் விரும்பிப் பார்க்கின்றனர். இவற்றையெல்லாம்விட, இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றதில் அவருக்கு இன்னுமோர் பெருமையும் கிடைத்திருக்கிறது.

இந்தியாவில், மோடிக்கு அடுத்ததாக இந்நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலம் ரஜினிதான். அந்த வகையில் இந்நிகழ்ச்சி, தேசிய அளவில் ரஜினியின் செல்வாக்கைக் கூட்ட உதவும். ரஜினியைப் பிற மாநிலங்களிலும் பி.ஜே.பி-க்கு பிரசார பீரங்கியாகப் பயன்படுத்துவதற்கு இது பேருதவியாக இருக்கும். அதைக் கணக்கிட்டே, மோடிக்கு அடுத்ததாக ரஜினியை வைத்து இந்த நிகழ்ச்சியை எடுக்க பி.ஜே.பி தலைமை மறைமுக ஏற்பாடு செய்ததாகவும் தகவல்கள் கசிகின்றன.

மோடி இடம்பெற்ற `மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்தது, உத்தரப்பிரதேசத்தின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில். ஆனால், புலிகள் காப்பகங்களில் படப்பிடிப்பை நடத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் இதற்கு ஒப்புதல் தந்ததே, பி.ஜே.பி தலைமையின் ஆதரவில்தான் என்ற பேச்சும் நிலவுகிறது.

`பிக்பாஸ்' கமல்
`பிக்பாஸ்' கமல்
பெரியார் தொடர்பான ரஜினியின் பேச்சுக்குப் பின், அவருக்குச் சாதகமாக பல விஷயங்கள் நடக்கின்றன. அவர் மீதான வருமானவரித் துறையின் வழக்குகள் வாபஸ் பெறப்பட்டிருக்கின்றன. புலிகள் காப்பகத்தில் முதல் முறையாக படப்பிடிப்பு நடத்த அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் ரஜினியால் பி.ஜே.பி வளையத்தை விட்டு வெளியே போகவே முடியாது என்றும் அரசியல் விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.

ஆனால், இந்நிகழ்ச்சியில் ரஜினி பங்கேற்க முன் வந்ததற்கு வெவ்வேறு விதமான கணக்குகளும் இருக்கின்றன.

துக்ளக் விழாவில் பெரியாரைப் பற்றி பேசி, கடுமையான எதிர்வினைகளை ரஜினி சந்தித்தார். தன்னுடைய பேச்சுக்கு `மன்னிப்பு கேட்க முடியாது!’ என்று சொல்லி, தன் நிலைப்பாட்டையும் ரஜினி விளக்கினார். பா.ஜ.க ஆதரவாளர் என்ற அழுத்தமான முத்திரை ரஜினி மீது விழுந்திருக்கும் நிலையில், அரசியல் சார்ந்த எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்காமல் வன சாகச நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றிருப்பது, தன் மீதான சாயங்களிலிருந்து தப்பிப்பதற்கான ஓர் எளிய முயற்சி என்றும் பார்க்கப்படுகிறது.

தர்பார்
தர்பார்
``அதிரடியான பேட்டி, அடுத்தது சாகசப்பயணம் என்று அரசியலுக்கு வருவதற்கு அவர் ஆயத்தமாகிவிட்டார். 2020-ம் ஆண்டில் அவருடைய ஒவ்வொரு செயலும் பேச்சும் இன்னும் பல அதிர்வுகளை உண்டாக்கும்."
ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி

அடுத்த காரணம், ரஜினியின் உடல்நிலை பற்றி சமூக ஊடகங்களில் கடுமையான விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. தாறுமாறாக மீம்ஸ்களும் வெளியிடப்படுகின்றன. `தர்பார்' படம் வெளியான நாளில், `முதல் ஷோ ரசிகர் மன்ற ஷோதான். கேன்டின் டீயில சுகர் போடாதீங்க!’ என்றும், `சுகர் மாத்திரை வாங்க வச்சிருந்த காசுல தர்பாருக்கு டிக்கெட் எடுத்துட்டேன். இந்த மாசம் மாத்திரைக்கு என்ன பண்றதுன்னே தெரியலை’ என்றும் அவருடைய ரசிகர்களைக் கிண்டலடிப்பதன்மூலம் அவர் வயதையும் கிண்டலடிக்கும் வகையில் மீம்ஸ்களை வெளியிட்டனர்.

அதேபோல, `ரஜினிக்கு வயதாகிவிட்டது. இனிமேல் அவர் அரசியலுக்கு வரவே மாட்டார்’ என்கிற ரீதியில் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும், அரசியல் விமர்சகர்களும் கருத்துகளைப் பரப்பிவருகின்றனர். தனிப்பட்ட முறையிலும், கொள்கைரீதியாகவும் ரஜினிக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளையும் விமர்சனங்களையும் திசை திருப்புவதற்கு, `மேன் வெர்சஸ் வைல்டு’ நிகழ்ச்சியை எங்கள் தலைவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பது ரஜினி ரசிகர்களின் நம்பிக்கையாக உள்ளது.

'பிக் பாஸ்' கமல்
'பிக் பாஸ்' கமல்
Hotstar
பந்திப்பூரில் ரஜினியுடன் மேன் வெர்சஸ் வைல்டு... காட்டுக்குள் என்ன நடந்தது?!

இதுபற்றி நம்மிடம் பேசிய ரஜினி ரசிகர் மன்றத்தின் நிர்வாகி ஒருவர், ``கமல் போன்று மேடையில் ஒரு விஷயத்தை விரிவாகப் பேசுவது அல்லது மற்ற தலைவர்களைப் போல தரவுகளுடம் தர்க்கம் செய்வது ரஜினிக்கு சாத்தியமானதில்லை. கேள்வி கேட்டால் சரியோ, தவறோ சட்டென்று தன் மனத்தில் பட்டதைச் சொல்லிவிடுவார். பெரியார் விஷயத்தில் அவர் செய்ததும் அப்படித்தான். சினிமாவிலும்கூட, மற்றவர்கள் வசனம் பேசித் திருத்தினால், எங்கள் தலைவர் அடித்தே திருத்துவார். அவருடைய பாணியே அதிரடிதான். அதனால்தான், தொலைக்காட்சியில் வரும் அதிரடி சாகச நிகழ்ச்சியில் பங்கேற்க அவர் ஒப்புக் கொண்டிருக்கிறார். அதிரடியான பேட்டி, அடுத்தது சாகசப்பயணம் என்று அரசியலுக்கு வருவதற்கு அவர் ஆயத்தமாகிவிட்டார். 2020-ம் ஆண்டில், அவருடைய ஒவ்வொரு செயலும் பேச்சும் இன்னும் பல அதிர்வுகளை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கிறோம்’’ என்றார்.

`பிக் பாஸ்’ வீட்டுக்குள் இருந்து தன் அரசியல் பயணத்துக்கான அடித்தளத்தைப் போட்டார் கமல்; புலிகள் வாழும் காட்டுக்குள் சாகசப்பயணம் மேற்கொண்டு, தன் துணிச்சலையும் உடல், மன பலத்தையும் வெளிப்படுத்தியிருக்கிறார் ரஜினி. இருவருமே அரசியல் தொலைநோக்குடன்தான் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

அதையும் தாண்டி இன்னொரு விஷயமும் புலப்படுகிறது...

கமல் - ரஜினி
கமல் - ரஜினி
`மோடியைத் தொடர்ந்து ரஜினி..!' - பந்திப்பூர் காட்டில் பியர் கிரில்ஸுடன் `Man vs Wild'

மணிக்கணக்கில் மேக்கப் போட்டு, `பிறர் வாடப் பல செயல்கள் செய்து’ என்று பாரதி கவிதையும் பாடி, பாட்டுப்பாடி, ஆட்டமாடி... என சினிமாவில் மெனக்கெடலுக்கு உதாரணமாக கமல் இருந்தாலும், தன் ஒரே ‘பஞ்ச்’ டயலாக்கிலும், ஸ்டைலிலும் பாக்ஸ் ஆபீஸை ஹிட் ஆக்குவதுதான் ரஜினியின் பாணி. அதேபோல வருடக்கணக்கில் `பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கமல் மெனக்கெட்டு எடுத்த ஸ்கோரை, ஆறு மணி நேரப் படப்பிடிப்பில் `மேன் வெர்சஸ் வைல்டு’ என்ற ஒரே நிகழ்ச்சியின் மூலமாக ரஜினி முறியடித்துவிடுவார் என்பதுதான் பலரது கணிப்பாக இருக்கிறது. அது நிறைவேறவும் நிறைய வாய்ப்பிருக்கிறது.

ஏனென்றால், நல்லவரோ கெட்டவரோ அவர் கமல்... அறிவாளியோ ஆன்மிகவாதியோ... அவர் ரஜினி!

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு