2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது மற்றும் தேர்தலுக்கு தயார்படுத்துவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களைச் சந்தித்து பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முன்னதாக தேர்தல் தொடர்பான முன்வடிவினை வழங்கிய பிரஷாந்த் கிஷோர், கடந்த மூன்று நாள்களில் இரண்டாவது முறையாக அந்தக் கட்சியின் தலைவர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

இன்றைய தினம் சோனியா காந்தியின் மகளும் கட்சியின் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி வத்ரா, மற்றும் மூத்த தலைவர்களான ப.சிதம்பரம், ஜெய்ராம் ரமேஷ், முகுல் வாஸ்னிக், ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், அம்பிகா சோனி ஆகியோருடன் பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தக் கூட்டத்தில், நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள இடங்களில் எந்தெந்த மாநிலங்களில் தனித்துப் போட்டியிட வேண்டும்... எந்தெந்த மாநிலங்களில் கூட்டணி அமைக்க வேண்டும் போன்ற திட்டங்களை பிரசாந்த் கிஷோர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
அதன்படி, உத்தரப்பிரதேசம், பிகார், ஒடிஸாவில் காங்கிரஸ் தனித்துப் போட்டியிட வேண்டும் என்றும், தமிழ்நாடு, மேற்கு வங்கம், மகாராஷ்டிராவில் கூட்டணி அமைக்க வேண்டும் என்றும் பிரசாந்த் கிஷோர் பரிந்துரைத்ததாகக் கூறப்படுகிறது. இதற்கு ராகுல் காந்தி ஒப்புக் கொண்டதாக பிரபல தனியார் செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ தகவல் தெரிவித்துள்ளது.