Published:Updated:

`வசூல் வேட்டை 2.0' - உள்ளாட்சித் தலைவலியை எப்படிச் சமாளிப்பார் எடப்பாடி?

'உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் முடிவுசெய்து தெரிவிக்க வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.

உள்ளாட்சி
உள்ளாட்சி

நவம்பர் 6-ம் தேதி உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எம்.பி., எம்.எல்.ஏ-க்கள், மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்ற நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ''உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் முடிவுசெய்து தெரிவிக்க வேண்டும். கூட்டணி, இடங்கள் பங்கீடு உள்ளிட்டவற்றை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். தேர்தல் பணிகளை உடனடியாகத் தொடங்குங்கள்'' என்று பேசியிருக்கிறார். 'அம்மா வழியில் நடக்கும் அரசு' என அடிக்கடி முழங்கும் இன்றைய அ.தி.மு.க தலைமை, கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா வெளியிட்ட உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலையும் அப்படியே பின்பற்றப்போகிறதா என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது எடப்பாடியின் சமீபத்திய பேச்சு. விரிவான கட்டுரைக்கு க்ளிக் செய்க... http://bit.ly/34QLyAm

ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது தேர்தலை அவசர அவசரமாக நடத்த ஆர்வம் காட்டிய அ.தி.மு.க. அதன் பிறகு தேர்தலைத் தள்ளிப்போடவே முயன்றது. தேர்தல் நடத்தாமல் இருக்க நீதிமன்றங்களில் பல்வேறு சாக்குப்போக்குகளைச் சொல்லிக்கொண்டிருந்தது. இப்போது ஒருவழியாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தப்போகிறார்கள். இதில்தான் இப்போது ஒரு சிக்கல் எழுந்திருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசினார்கள் அ.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள் சிலர்.

ADMK
ADMK

"ஜெயலலிதாவால் பல்வேறு பொறுப்புகளுக்கு நியமிக்கப்பட்டவர்களும், அமைப்புத் தேர்தல்கள்மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அவரால் அங்கீகரிக்கப்பட்ட நிர்வாகிகளும் அவரவர் பொறுப்புகளில் தொடர்ந்து செயல்பட ஒப்புதல் அளித்த பொதுக்குழு தீர்மானம், வேட்பாளர் தேர்வுக்கும் பொருந்துமா என்பதில்தான் சிக்கல் எழுந்துள்ளது. ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் உள்ளவர்களுக்கு மீண்டும் சீட் தரப்படும் என்று எந்த உறுதியும் இப்போது தரப்படவில்லை. அப்படித் தராமல்போனால் பொதுக்குழு தீர்மானத்தை மீறியதாகிவிடும். கொடுத்தால், அது சசிகலாவுக்குச் சாதகமாகிவிடும். ஜெயலலிதா அப்போலோவில் இருந்தபோது வெளியிடப்பட்ட அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டியலில் இருந்த பலரும் சசிகலாவின் ஆதரவாளர்கள். ஜெயலலிதா அப்போலோவில் இருந்ததால், அவரின் பெயரைப் பயன்படுத்தி சசிகலா தரப்பினர் அந்த வேட்பாளர் பட்டியல்களை வெளியிட்டார்கள் என்ற குற்றச்சாட்டும் அப்போது எழுந்தது. அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் மூலமாக சசிகலா தரப்பு, வேட்பாளர் தேர்வில் பெரியளவில் வசூல் வேட்டையாடியதாகவும் சர்ச்சை எழுந்தது.

ஆனால் இப்போது, 'உள்ளாட்சித் தேர்தலில் யார் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை மாவட்டச் செயலாளர்கள் முடிவுசெய்து தெரிவிக்க வேண்டும்' என எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார். இதைவைத்து பார்க்கும்போது, ஜெயலலிதா வெளியிட்ட வேட்பாளர்கள் பட்டியலில் இருக்கும் பலருக்கும் சீட் கிடைக்காது என்பது தெளிவாகத் தெரிகிறது. ஜெயலலிதா பட்டியலில் வெளியேயும் எடப்பாடி பட்டியல் உள்ளேயும் செல்லும் எனத் தெரிகிறது. அதனால், அப்போது சசிகலா தரப்புக்கு பணம் கொடுத்து சீட் வாங்கிய பழைய பார்ட்டிகள் பலரும் 'அய்யோ, சீட்டும் போச்சு... நோட்டும் போச்சு' என்று புலம்பத் தொடங்கியுள்ளனர்'' என்றவர்கள், இதன்மூலம் என்ன நடக்கும் என்பதையும் சொன்னார்கள்.

"புதிய வேட்பாளர் தேர்வு தொடங்கும்போதே பிரச்னை வெடிக்கத் தொடங்கிவிடும். அதுமட்டுமன்றி, 2016-ம் ஆண்டில் எந்தக் கட்சியுடனும் கூட்டுவைக்காமல் அ.தி.மு.க தனித்தே போட்டியிட்டது. இப்போது பா.ஜ.க, பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா எனப் பல்வேறு கட்சிகளும் கூட்டணியில் உள்ளன. இவர்களுக்கு குறைந்தபட்சம் 30-லிருந்து 40 சதவிகித இடங்களைக் கொடுத்தே ஆக வேண்டும். அப்படி கொடுத்தால் அந்த இடங்களுக்கு ஜெயலலிதா அறிவித்த வேட்பாளர் பட்டியலில் இடம்பெற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முடியாது. அதிலும் பிரச்னை கிளம்பும்.

தமிழக உள்ளாட்சிகளில் மொத்தம் உள்ள 1,30,000-க்கும் அதிகமான பதவிகளில், கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களைத் தவிர்த்து 50,000-க்கும் மேற்பட்ட பதவிகளுக்கு அ.தி.மு.க வேட்பாளர்கள் தேர்வுசெய்யப் பட்டிருந்தனர். இவர்களுக்கு சீட் கொடுப்பதற்காக அப்போது எத்தனை கோடி ரூபாய் மொத்தமாய் வசூல்செய்யப் பட்டது எனத் தெரியவில்லை. இவர்களில் அ.ம.மு.க-வுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவே. மற்றவர்கள் அனைவரும் கண்டிப்பாக தங்களுக்குத்தான் சீட் தரவேண்டும் என நிச்சயமாகப் போர்க்கொடித் தூக்குவார்கள். இல்லாதபட்சத்தில், முன்பு தாங்கள் கொடுத்த பணத்தை வட்டியுடன் சேர்த்துத் தர வேண்டும் என்று சண்டை போடுவார்கள். அது கட்சிக்குள் மிகப்பெரிய கலவரத்தை உண்டாக்கும். ஒட்டுமொத்த வெற்றியையும் பாதிக்கும். தவிர, ஜெயலலிதா அப்போலோவில் இருந்த காலத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்காக நடந்த வசூல் வேட்டையைப் போலவே 'வசூல் வேட்டை 2' ஆரம்பமாகும். அதற்கான பேரங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.

ADMK
ADMK

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காகப் பலரும் கட்சிக்கு நிதி வழங்கினார்கள். அத்துடன் விருப்ப மனுவும் அளித்தார்கள். விருப்ப மனுவுக்கு கட்டணமும் வசூலிக்கப்பட்டது. அப்படி வசூலிக்கப்பட்ட தொகை 34 கோடியே 68 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய். இந்தத் தொகையைக் கொடுத்தவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்கள். அப்படி நன்கொடை கொடுத்தவர்களும் உள்ளாட்சித் தேர்தலில் சீட் பிடிக்க போட்டிப் போடுவார்கள். அவர்களையும் சமாளிக்க வேண்டி வரும். அதனால், உள்ளாட்சித் தேர்தல் எடப்பாடிக்கு பெரும் தலைவலிதான்.

- அ.தி.மு.க முகாமில் அன்று நடந்ததையும் இப்போதையும் நடந்துகொண்டிருப்பதையும் ஆழமாக அலசும் ஜூனியர் விகடன் கவர்ஸ்டோரியை முழுமையாக வாசிக்க > உள்ளாட்சி சடுகுடு... ஜெ. பட்டியல் வெளியே - எடப்பாடி பட்டியல் உள்ளே! - பதறும் பழைய பார்ட்டிகள்

https://www.vikatan.com/government-and-politics/policies/local-body-elections-candidates-selection-issue-in-admk

உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க-வின் நிலை?

உள்ளாட்சித் தேர்தல்
உள்ளாட்சித் தேர்தல்

கட்சியின் தலைமை முடிவுசெய்வதற்கு முன்பே மாவட்டச் செயலாளர்கள் பலரும் இப்போதே அ.தி.மு.க தரப்புடன் ரகசியப் பேச்சுவார்த்தையைத் தொடங்கிவிட்டார்கள் என்று தகவல்கள் கசிகின்றன. கூட்டுறவுச் சங்கத் தேர்தலின்போது சிண்டிகேட் போட்டதைப்போல இப்போதும் செய்யப்போகிறார்களாம். இது தலைமைக்குத் தெரியாமல் இல்லை. ஆனால், கண்டிக்கும் நிலையில் இல்லை. அ.தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களுக்குக் கிடைக்கும் 'கவனிப்பை' போலவே தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களுக் கும் ஆளுங்கட்சி தரப்பிலிருந்து 'கவனிப்பு' நடக்கிறதாம். அதனால், உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க தரப்புக்கு நெருக்கடி தராத வகையிலேயே வேட்பாளர்களை களத்தில் இறக்குவார்களாம் தி.மு.க மாவட்டச் செயலாளர்கள். > விரிவாக வாசிக்க > மிஸ்டர் கழுகு: அ.தி.மு.க-வுடன் ரகசிய கூட்டு... தி.மு.க தலைமைக்கு மா.செ-க்கள் வேட்டு! https://www.vikatan.com/government-and-politics/politics/mister-kazhugu-politics-and-current-affairs-nov-13

| அனைத்து விகடன் இதழ்கள் + 2006 முதல் இன்று வரையிலான 325K ப்ளஸ் கட்டுரைகள் > ரூ.200 மதிப்பிலான ஒரு மாத பேக் உங்களுக்காக ரூ.99 மட்டுமே> சப்ஸ்க்ரைப் செய்ய> http://bit.ly/2MuIi5Z |