Published:Updated:

`தமிழகத்தில் நாளை சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக மனிதச் சங்கிலி போராட்டம்!'- அரசியல் கட்சிகள் ஆதரவு

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக, நாளை தமிழகம் முழுவதும் மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெறும் என 'தமிழக மக்கள் ஒற்றுமை மேடை' அறிவித்துள்ளது.

மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டம் - என்.ஆர்.சி-க்கு எதிரான போராட்டங்கள், டெல்லி ஷாகின் பாக் தொடங்கி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஓய்வில்லாமல் நடைபெற்றுவருகின்றன. இந்த நிலையில், தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக சி.ஏ.ஏ, என்.ஆர்.சி-க்கு எதிராக நாளை மனிதச்சங்கிலி போராட்டம் நடைபெற இருக்கிறது.

இதுகுறித்து மனிதச்சங்கிலி போராட்ட ஒருங்கிணைப்பாளர் கல்வியாளர் தாவூத் மியாத்கான் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ``மக்களின் குடியுரிமைக்கு அச்சுறுத்தலாக உள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) ஆகியவற்றை எதிர்த்து, ஏற்கெனவே தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பில் குடியரசு தினம் அன்று வீடு வீடாகச் சென்று துண்டறிக்கை விநியோகம் செய்யப்பட்டது.

சி.ஏ.ஏ - என்.ஆர்.சி
சி.ஏ.ஏ - என்.ஆர்.சி

சி.ஏ.ஏ-யை அமல்படுத்தக்கூடாது என்று நாடு முழுவதும் மாணவர்கள், அரசியல் கட்சியினர் உட்பட, பல்வேறு சமூக அமைப்புகள் போராட்டங்களில் ஈடுபட்டுவரும் நிலையில், தேசத் தந்தை காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்ட நாளான நாளை (ஜனவரி 30), இந்த குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மனிதச்சங்கிலி போராட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, காங்கிரஸ், விடுதலைச்சிறுத்தைகள், ம.தி.மு.க, மதச்சார்பற்ற ஜனதாதளம், மனிதநேய மக்கள் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்துள்ளன. இஸ்லாமிய அமைப்புகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. இதில், அனைத்து கட்சித் தலைவர்களும் கலந்துகொள்வார்கள். இந்தப் போராட்டத்தில் ஜாதி, மத பேதமின்றி, தமிழகம் முழுவதும் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும்" என்றார்.

``ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும்!” - சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தியாவின் நிலையும்

இந்தப் போராட்டம் சென்னை, நெல்லை, செங்கோட்டை, நெய்வேலி, ராமநாதபுரம், சிவகங்கை, சேலம், விருதுநகர், நாமக்கல், புதுக்கோட்டை, தேனி, மதுரை, திருப்பூர், திருவாரூர் எனத் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. சென்னையில் திருவொற்றியூரில் தொடங்கி ஸ்டான்லி, குரளகம், அண்ணா சாலை, ஜெமினி, சைதாப்பேட்டை, பல்லாவரம் வழியாக தாம்பரம் வரை சுமார் 37.1 கி.மீ நடைபெறும். மாலை 4.30 -க்கு தொடங்கி, 5.30 வரை நடைபெற இருக்கிறது. போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்து என்.ராம், கல்வியாளர் வசந்திதேவி ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.

தமிழக மக்கள் ஒற்றுமை மேடை
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை

மேலும் செய்தியாளர்கள் சந்திப்பில், காங்கிரஸ் மூத்த தலைவர் பலராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் செயலாளர் அப்துல் சமது, தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் மாநில ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், அதனுடைய சென்னை பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர் குமரேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

- கௌஷிகா இளங்கோவன்.

அடுத்த கட்டுரைக்கு