Published:Updated:

`பெரியார் சொன்ன வழியில்தான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்' - வெடிக்கும் வேல்முருகன்!

``பெற்றோர் சம்மதம் இன்றி காதல் திருமணம் செய்பவர்களில் 75 சதவிகிதத்தினரின் வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இல்லை'' என்று புள்ளிவிவரம் சொல்கிறார் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன்.

தமிழ், தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் உரிமைக்குரல் எழுப்பிவருபவர் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் தி.வேல்முருகன்.

தமிழ்த் தேசிய அரசியலை உரக்கப் பேசிவரும் வேல்முருகனின் சமீபத்திய நடவடிக்கைகள் குறித்து அவரிடம் சில கேள்விகளை முன்வைத்தேன்...

``இந்த வருட நீட் தேர்வில், மாநிலப் பாடத்திட்டத்திலிருந்து பெரும்பான்மையான கேள்விகள் கேட்கப்பட்டிருப்பதாகக் கல்வி அமைச்சரே பெருமிதப்படுகிறார். ஆனால், நீங்கள் இன்னும் நீட் தேர்வை எதிர்ப்பது ஏன்?''

``இன்றைய மாநில பாடத்திட்டம் என்பது உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ் என்ற அதிகாரியின் தனிப்பட்ட உழைப்பால் கொண்டுவரப்பட்ட பாடத்திட்ட முறை. இதை எடுத்து வைத்துக்கொண்டு நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் பெற்றோரை வேண்டுமானால், அமைச்சர் சமாதானப்படுத்தலாம். ஆனால், 12 ஆண்டுக்காலம் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்து 1,176 மதிப்பெண் வாங்கியும் மருத்துவர் ஆக முடியாமல் இறந்துபோன அனிதா, இந்த ஆண்டு தற்கொலை செய்து இறந்துபோன மாணவர்கள் குறித்தெல்லாம் யார் கவலைப்படப் போகிறார்கள்?''

தேர்வு எழுதும் மாணவர்கள்
தேர்வு எழுதும் மாணவர்கள்
Representational Image

``மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும்போது, தமிழகத்தில்தான் நீட் தேர்வு தற்கொலை எண்ணிக்கை அதிகம். எனில், தவறு எங்கே இருக்கிறது?''

``எப்போதுமே நாட்டின் மற்ற மாநிலங்களிலிருந்து தென்னிந்தியா விழிப்புணர்வோடு முதலிடத்தில் நிற்கும். குறிப்பாக, தமிழ்நாடுதான் முதன்முதலில் பிரச்னைகளைக் கையிலெடுத்துப் போராடும். இட ஒதுக்கீட்டு சட்டத் திருத்தத்தில் ஆரம்பித்து, பெண்களுக்கான சம உரிமை வரையிலாக பெரியாரின் பகுத்தறிவு வழியில் நின்று போராடிவருபவர்கள் நாம்தானே...''

``சீமானின் ஏகே74 கருத்துக்குத்தான் பதில் சொன்னேன்... தீவிரவாதம் பேசவில்லை!'' - வேல்முருகன்

``பெரியாரியவாதியாக முன்னிறுத்திக்கொள்ளும் வேல்முருகனும்கூட, கடந்த காலங்களில் கற்பு குறித்து பிற்போக்குத்தனமான வாதங்களை முன்னிறுத்தியிருக்கிறீர்களே..?’’

``பெண்களுக்கு சம வாய்ப்பு, சம உரிமை, சம அந்தஸ்து கொடுப்பதென்பது முற்றிலும் வேறுபட்ட விவகாரம். அதற்காக சிலரின் குதர்க்கமான, எடக்கு மடக்கான பேச்சுகளுக்கு பெரியாரிய கருத்துகளின் துணைகொண்டு நாங்கள் ஆதரிக்க வேண்டிய அவசியம் இல்லை!''

பெரியார்
பெரியார்

``அப்படியென்றால், கற்பு என்ற வரைமுறைக்குள் பெண்ணை மட்டும் கட்டிப்போட்டுவைத்திருக்க வேண்டும் என்ற பிற்போக்காளர்களின் கருத்தை நீங்களும் ஏற்றுக்கொள்கிறீர்களா?''

``பெரியார் 1,000 நல்ல கருத்துகளைச் சொல்லியிருக்கிறார். அவற்றில் 900 கருத்துகள் நல்லவையென்றால் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள். மீதி 100 கருத்துகள் ஏற்புடையவை இல்லையென்றால் ஒதுக்கித் தள்ளிவிடுங்கள் என்றுதான் சொல்கிறேன். தன்னுடைய பரபரப்புக்காக தமிழ்நாட்டுப் பெண்களை உளவியல்ரீதியாக கேவலப்படுத்துகிற, கொச்சைப்படுத்துகிற பேச்சைத்தான் நான் எதிர்க்கிறேன்.''

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

`` `நாடகக் காதல்களை திருமாவளவனோ, தி.மு.க-வோ ஆதரித்தால், அவர்களையும் நான் எதிர்ப்பேன்’ என்றும் பேசியிருக்கிறீர்களே..?''

``நாடகக் காதல் என்ற வார்த்தையை நான் எங்கேயும் பயன்படுத்தியதே இல்லை. 'பெற்று வளர்த்து ஆளாக்கிய பெற்றோர் சம்மதத்துடன் பெண்கள் திருமணம் செய்துகொள்வதே நல்லது. அப்படிப்பட்ட திருமணங்கள்தான் நீண்டகாலத்துக்கும் நிலைக்கும்' என்ற கருத்தைத்தான் நான் சொல்லிவருகிறேன்.

தன்னுடைய சுய தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத ஓர் இளைஞன், காதல் என்ற பெயரில் ஒரு பெண்ணைக் கூட்டிச் சென்று கொஞ்சநாள் வாழ்ந்துவிட்டு, வறுமையால் தற்கொலை பண்ணிக்கொள்வதோ அல்லது இவன் அந்தப் பெண்ணைக் கொல்வதோ, அந்தப் பெண் வீட்டை விட்டு ஓடிப்போவதோ... இதெல்லாம் ஒரு வாழ்க்கை முறையா?''

ஸ்டாலின் - திருமாவளவன்
ஸ்டாலின் - திருமாவளவன்

``தனிப்பட்ட மனிதத் தவறுகளை முன்னிறுத்தி, ஒட்டுமொத்தமாக காதலையே எதிர்க்கும் பிற்போக்காளர்களுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்?’’

``நாங்கள் என்ன சொல்கிறோமென்றால், `இளம் வயதில் முதிர்ச்சியின்மை காரணமாக அவசரப்பட்டு பெற்றோரைத் தூக்கி எறிந்துவிட்டு திருமணம் செய்துகொள்ளாதீர்கள்’ என்கிறோம். `காதலியுங்கள், வேலையை உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள். கூடவே சமாதானமாகப் பேசி பெற்றோரின் சம்மதத்தையும் பெற்று திருமணம் செய்துகொள்ளுங்கள்’ என்றுதான் சொல்கிறோம். இப்படிப்பட்ட திருமணங்களைத்தான் நானும் நடத்திவைத்துவருகிறேன்.''

ஹத்ராஸ் சம்பவம்: `அதிகாலை 2:30 மணிக்கு தகனம் ஏன்?' - உச்ச நீதிமன்றத்தில் உ.பி அரசு விளக்கம்

``பெண்கள் பாதிக்கப்பட்டுவிடுவார்கள் என்ற அக்கறையின் பெயரில், மறுபடியும் பெண்களை வீட்டுக்குள்ளேயே அடைத்துவைக்கும் முயற்சியைத்தானே நீங்களும் செய்கிறீர்கள்?''

``முற்போக்கு என்ற பெயரில் மேடையில் ஏறிப் பேசுவதற்கும், டி.வி-யில் விவாதிப்பதற்கும் வேண்டுமானால் இது நன்றாக இருக்கலாம். ஆனால், கள யதார்த்தம் என்பது வேறு... தமிழக வாழ்வியல் சூழலில் உரிய பக்குவம், முதிர்ச்சி இல்லாத காரணத்தால்தான் பல ஆயிரம் குடும்பங்களில் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுகிறது. என்னுடைய அரசியல் வாழ்க்கையில் இது போன்ற எத்தனையோ ஆயிரம் வழக்குகளைப் பார்த்துவிட்டேன். உரிய வயது, பக்குவமின்றி திருமணம் செய்துகொள்ளக்கூடியவர்களில் 75 விழுக்காட்டினரின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இல்லை!''

தி.வேல்முருகன்
தி.வேல்முருகன்

``பட்டியல் சமூக ஆண், ஆதிக்க சாதிப் பெண்ணைக் காதலித்தால் அது தவறு. ஆனால், பட்டியலினப் பெண், ஆதிக்க சாதி ஆணைக் காதலித்தால் தவறு இல்லை... சரியா?''

``அப்படியில்லை. உதாரணமாக, வன்னியர் சமூகத்திலுள்ள பணக்கார ஆண், நலிந்த நிலையிலுள்ள வன்னியர் பெண்ணைக் காதலித்தால், இந்தச் சமூகம் ஏற்றுக்கொள்வதில்லை. இதேபோல், பட்டியலினத்து வீட்டைச் சேர்ந்த பெண்ணை, அவர்களைவிடவும் ஒடுக்கப்பட்டவர்களாகச் சொல்லப்படும் இனத்தைச் சேர்ந்த ஆண் காதலித்தால், அதை அனுமதிக்காமல் அடிதடி பிரச்னையாகிறது. ஆக, இதையெல்லாம் மாற்றுவதற்கு படிப்படியாகத்தான் போராட வேண்டும்!''

``50 சதவிகித பார்வையாளர்கள் மட்டுமே!''- தியேட்டர் திறப்பு வழிமுறைகள் என்ன?!

``பெரியார் வழியில் நின்று களமாடும் உங்களைப் போன்ற தலைவர்கள்தானே அதைச் செய்ய வேண்டும்?’’

``எனக்கும் மகள்கள் இருக்கிறார்கள். என்னுடைய மகள்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த வேண்டும் என்ற அக்கறையிலும் அனுபவத்திலும்தான் நான் என் கருத்தைச் சொல்கிறேன். மற்றபடி, காதலுக்கு நான் எதிரி கிடையாது. அதேசமயம், கள யதார்த்தம் உணர்ந்து நான் அரசியல் பயில்கிறேன். 100 விழுக்காடு நான் பெரியாரிஸ்ட், பெரியார் சொன்ன அதேவழியில்தான் போவேன் என்று பிடிவாதம் பிடிக்க மாட்டேன்.''

பெரியார் - கி.வீரமணி
பெரியார் - கி.வீரமணி

பெரியாரை நான் போற்றுகிறேன். ஆனால், நான் நூற்றுக்கு நூறு சதவிகிதம் பெரியாரிஸ்ட் இல்லை. நான் தமிழ்த் தேசியம் பேசுகிறவன். பெரியாரிஸ்ட் என்று சொல்லக்கூடியவர்கள், செய்கின்ற, வெகுமக்களின் மனதைப் புண்படுத்துகிற, அவர்களது நம்பிக்கைகளைக் காயப்படுத்துகிற விடயங்களில் நான் மாறுபட்டு நிற்கிறேன்.

உதாரணமாக திராவிடர் கழக மேடைகளில் நடைபெறும் 'தாலி அகற்றும் போராட்ட'ங்களில் எனக்கு உடன்பாடில்லை. ஏனெனில், அதே தி.க., அதே கி.வீரமணி, தன் இயக்கத்திலுள்ள எத்தனையோ தோழர்களுக்கு தாலி எடுத்துக் கொடுத்து திருமணம் நடத்தியிருக்கிறாரே... ஆக, யாரோ ஒருவர் வந்து சொன்னார் என்பதற்காக, பெரியார் வழிவந்த அவ்வளவு பெரிய இயக்கம் 10 பேரைக் கூட்டிவந்து மேடையில் நிறுத்தி தாலியைக் கழற்றி வீசுவது, தாலியை அறுப்பது.... இதெல்லாம் வேண்டாம். இது பெரும்பான்மை மக்களின் ஆண்டாண்டுகால நம்பிக்கை... அதில் கை வைக்க வேண்டாமே என்பது என் பார்வை!''

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு