Published:Updated:

மீண்டும் துணை முதல்வராகும் அஜித் பவார்? - நிர்வாகிகளிடம் முணுமுணுத்த சரத்பவார்

சரத் - அஜித் பவார்
சரத் - அஜித் பவார்

மகாராஷ்டிராவின் அமைச்சரவை விரிவாக்கத்தில் மீண்டும் அஜித் பவாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகாராஷ்டிராவில் சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு, அங்கு எந்தக் கட்சியும் ஆட்சியமைக்க முடியாமல் திணறி, பின்னர் ஒருவழியாக சிவசேனாவின் உத்தவ் தாக்கரே முதல்வரானார். சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணிக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும்போதே என்.சி.பி-யின் அஜித் பவார் உதவியுடன் நான்கு நாள்கள் மகாராஷ்டிராவை ஆட்சி செய்தது பா.ஜ.க. பின்னர் இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி, அதில் சிவசேனா வெற்றி பெற்று தற்போது உத்தவ் தாக்கரே மகாராஷ்டிராவின் முதல்வராக உள்ளார்.

உத்தவ் - பவார்
உத்தவ் - பவார்

சரத்பவாரை மீறி அவரின் அண்ணன் மகன் அஜித் பவார், பா.ஜ.க-வுக்கு ஆதரவு அளித்த விஷயம் கூட்டணியில் உள்ள மூன்று கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பின்னர் தான் எப்போதும் தேசியவாத காங்கிரஸைச் சேர்ந்தவன் என அஜித் பவார் கூறிவந்தார். தன் சட்டமன்றத் தலைவர் பதவியை வைத்துதான் அஜித் பவார் அவ்வாறு செய்ததாகக் கூறப்பட்டு அந்தப் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது. ஆனால், இதுவரை அஜித்பவார் மீது கட்சி ரீதியில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

`ட்ரோஜன் குதிரை’ அஜித் பவார்…அமித் ஷாவை உடைத்த சரத் பவாரின் அரசியல்!

இந்நிலையில் முதல்வர் உத்தவ் தாக்கரே விரைவில் மகாராஷ்டிரா அமைச்சரவையை விரிவுபடுத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் துணை முதல்வராக மீண்டும் அஜித் பவாரே நியமிக்கப்படவுள்ளார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று மகாராஷ்டிரா சட்டமன்றத்தில், என்.சி.பி தலைவர் சரத்பவார் இந்த விஷயம் தொடர்பாகத் தன் கட்சி மூத்த நிர்வாகிகளுடன் முணுமுணுத்ததாகக் கூறப்படுகிறது.

சரத் பவார்
சரத் பவார்

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சரத்பவாரிடம், `சிவசேனாவைச் சேர்ந்த தலைவர் சஞ்சய் ராவத் தான் வெளியிட்டுள்ள அறிக்கையில், `அஜித் பவார்தான் அடுத்த துணை முதல்வர்’ என்று குறிப்பிட்டிருந்தாரே அதைப் பற்றிய உங்கள் கருத்து’ எனக் கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு, ``சஞ்சய் ராவத்தின் அறிக்கையை நானும் படித்தேன். ஆனால், நான்தான் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர், அதனால் கட்சிக்கும் ஆட்சிக்கும் என்ன செய்ய வேண்டும், யாருக்குப் பதவி வழங்க வேண்டும் போன்றவை எனக்குத் தெரியும்” எனப் பதில் அளித்துள்ளார்.

மேலும், ``நாங்கள் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறோம். இதில் யாருக்கு எத்தனை அமைச்சர் பதவிகள் வழங்க வேண்டும் என்பதை முன்னரே தீர்மானித்துவிட்டோம். அமைச்சரவை விரிவாக்கத்துக்காக அறிவிப்பை விரைவில் முதல்வர் வெளியிடுவார்.

சரத் பவார்
சரத் பவார்

இந்த அரசாங்கம் உருவாகி 15 நாள்கள் மட்டுமே ஆகிறது அதனால் எங்கள் மீது எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துவது சரியில்லை. சிவசேனா தலைவர் மனோகர் ஜோஷி மகாராஷ்டிரா முதல்வராக இருந்தபோது நான்தான் எதிர்க்கட்சியில் இருந்தேன். அப்போது ஒரு வருடத்துக்கு அவரது ஆட்சியைப் பற்றி விமர்சிக்க மாட்டேன் என நான் அவருக்கு உறுதியளித்திருந்தேன்” எனப் பேசியுள்ளார்.

அடுத்த கட்டுரைக்கு