Published:Updated:

`தாய் மொழிக்குப் பிறகுதான் இந்தி!' - அமித் ஷா விளக்கம்

தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அமித் ஷா தெரிவித்துள்ளார்.

Amit shah
Amit shah

``இந்தியா வெவ்வேறு மொழிகளைக் கொண்ட நாடு. ஒவ்வொரு மொழிக்கும் தனிப்பட்ட முக்கியத்துவம் உள்ளது. ஆனால், நமது நாடு முழுவதற்கும் ஒரே மொழி இருப்பதும் அவசியமாகும். அதுவே உலகளவில் இந்தியாவின் அடையாளமாக இருக்கும். இன்று ஒரு மொழியால் நாட்டை ஒற்றுமையாக்க முடியும் என்றால், அது அதிகம் பேசப்படும் இந்தி மொழியால்தான் முடியும்.

Amit shah
Amit shah

நாட்டின் அனைத்துக் குடிமக்களிடமும் நான் ஒன்று கேட்டுக்கொள்கிறேன். நாம் நமது தாய்மொழியின் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், இந்தியையும் பயன்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி, சர்தார் படேல் ஆகியோரின் ஒரு நாடு, ஒரு மொழிக் கனவை நனவாக்குவோம். அதற்கான உங்கள் பங்களிப்பையும் இந்த இந்தி நாளில் செய்யுங்கள்” என்று இந்தி தினத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

அமித் ஷா இந்தியைத் தூக்கிப் பிடிப்பது ஏன்? - அரசியல் பின்புலக் கணக்குகள்!

வட மாநிலங்களில் சில பகுதியில் அமித் ஷாவின் கருத்துக்கு ஆதரவு எழுந்த நிலையில் தமிழகம், கேரளா உள்ளிட்ட தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது. எப்போதும் இந்தித் திணிப்பை எதிர்த்துவரும் தமிழகம் வழக்கம்போல இந்த முறையும் தனது கடும் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தொடங்கியது. தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் சார்பில் போராட்டமும் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் தனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது என அமித் ஷா விளக்கமளித்துள்ளார். நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர்,``மற்ற மொழி பேசும் மாநிலங்களில் இந்தியைத் திணிக்க வேண்டும் என நினைக்கவில்லை.

Amit shah
Amit shah

நாட்டின் ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும் என நான் கூறவில்லை. எனது கருத்து தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ளது. நானும் இந்தி பேசாத மாநிலத்தில் இருந்தே வந்திருக்கிறேன். தாய்மொழிக்குப் பிறகு இரண்டாவது மொழி ஒன்றை கற்க வேண்டும் என்றால், அது இந்தி மொழியாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றே கூறினேன். சிலர் அரசியல் செய்ய விரும்பினால், அது அவர்களின் விருப்பம்'' என்று அமித் ஷா விளக்கம் கொடுத்துள்ளார்.

`அன்று ஒரு பேச்சு.. இன்று ஒரு பேச்சு..!' - ப.சிதம்பரத்தின் இன்றைய ட்வீட்டும் பழைய வீடியோவும்