Published:Updated:

மண்ணின் மைந்தர் ஐ.பி-யா? நெல்லை மைந்தர் ஜே.பி-யா? - எழும்பூர் தொகுதி ரவுண்ட்ஸ்!

ஐ.பரந்தாமன் - ஜான் பாண்டியன்
News
ஐ.பரந்தாமன் - ஜான் பாண்டியன்

சென்னையிலிருக்கும் ரிசர்வ் தொகுதிகளில் எழும்பூரும் ஒன்று. தி.மு.க சார்பில் ஐ.பரந்தாமனும், அ.தி.மு.க கூட்டணி சார்பில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் களம்காண்கிறார்கள்.

எழும்பூர் தொகுதியின் தேர்தல் கள நிலவரம் எப்படியிருக்கிறது என்று ரசியல் பார்வையாளர் ஒருவரிடம் பேசினோம். ``சென்னை எழும்பூர் சட்டமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை பூங்கா நகர், பெரம்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், சேப்பாக்கம் ஆகிய தொகுதிகளை எல்லையாகக் கொண்டிருக்கிறது. இதுவரை இங்கு 14 முறை நடந்த தேர்தல்களில் 10 முறை தி.மு.க வென்றிருக்கிறது. காங்கிரஸ் இரண்டு முறையும், தே.மு.தி.க மற்றும் சுயேட்சை தலா ஒருமுறையும் வெற்றிபெற்றுள்ளன. மறைந்த முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி, எழும்பூர் தொகுதியிலிருந்து 1989 முதல் 2006 வரை ஐந்து முறை தி.மு.க சார்பில் எம்.எல்.ஏ-வாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். ஆனால், அ.தி.மு.க இங்கு நேரடியாக வென்றதேயில்லை.

பிரசாரத்தில் பரந்தாமன்
பிரசாரத்தில் பரந்தாமன்

தற்போது இந்தத் தொகுதியில் தி.மு.க சார்பில் அந்தக் கட்சியின் சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் ஐ.பரந்தாமனும், அ.தி.மு.க கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியனும் மோதுகிறார்கள். இவர்களில், ஐ.பரந்தாமனை எடுத்துக்கொண்டால் சென்ற முறை பூந்தமல்லி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தவர். இவரது பூர்வீகமே எழும்பூர் தொகுதி அருகே இருக்கும் புளியந்தோப்பு சுந்தரபுரம்தான் என்பதால் `மண்ணின் மைந்தராக' பார்க்கப்படுகிறார். தி.மு.க-வுக்காகப் பல வழக்குகளை நடத்தியது மட்டுமன்றி, தேர்தல் ஆணையத்திலும் கட்சிக்காகப் பல வேலைகளைச் செய்திருக்கிறார்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

2011-ல் தே.மு.தி.க நல்லதம்பி வெற்றிபெற்றபோதும், சில மாதங்களிலேயே அந்தக் கட்சி அ.தி.மு.க கூட்டணியிலிருந்து வெளியேறியதால் நல்லதம்பியால் தொகுதிக்காக எதையும் செய்ய முடியவில்லை. 2016-ல் தி.மு.க ரவிச்சந்திரன் வெற்றி பெற்றபோதும் எதிர்க்கட்சியாக இருந்ததால் தொகுதியை கவனிக்க முடியவில்லை. ஆனால், அடுத்து தி.மு.க ஆட்சி அமையும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தொகுதிக்குச் செய்ய வேண்டிய விஷயங்களை இப்போதே பட்டியல் போட்டுவைத்திருக்கிறார் பரந்தாமன்.

குடிசைகள், தெருவோரங்களில் வாழ்பவர்கள் இங்கு ஏராளமானோர் இருப்பதால், அவர்களுக்கு நிரந்தர வீடு கட்டித் தருவதாக வாக்குறுதி அளித்துள்ளார். பொதுக்கழிப்பிடம் இல்லை என மக்கள் குறை சொல்வதால், அதையும் செய்து கொடுப்பதாகத் தெரிவித்துள்ளார். மற்றபடி, மாநில அளவிலுள்ள பிரச்னைகளான வேலையின்மை, குடிநீர்ப் பிரச்னை உள்ளிட்டவற்றுக்கும் தீர்வுகாண்பதாகச் சொல்லி வருகிறார் ஐ.பி.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தொகுதிக்குள் தி.மு.க-வுக்கு இருக்கும் மேஜர் பிரச்னை மார்வாடி ஓட்டுகள். வேப்பேரி, புரசைவாக்கம் உள்ளிட்ட இடங்களில் மிகுதியாக மார்வாடிகள் இருக்கிறார்கள். பொதுவாகவே இவர்களில் பலர் பா.ஜ.க ஆதரவு மனநிலையில்தான் இருப்பார்கள். எனினும், மார்வாடிகளின் குடியிருப்பு சங்கங்களின் மீட்டிங்கில் சென்று பேசும்போதுதான் நிலைமையே தலைகீழாக இருப்பது தெரிந்தது. `நாங்கள் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்பே இங்கு வந்துவிட்டோம் அதனால் நாங்கள் தமிழர்கள்தான். கடந்த சில ஆண்டுகளாக தொழில் நடத்துவது சிரமமாக உள்ளது. அதனால், எங்களுக்கு நிம்மதியாகத் தொழில் நடத்த வழிவகை செய்து கொடுத்தால் போதும்' என்று சொல்லி தி.மு.க-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருக்கிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வேறு, சட்டமன்றத் தேர்தல் வேறு என்பதில் மார்வாடிகள் தெளிவாக இருக்கிறார்கள். இவர் கதை இப்படியிருக்க, ஜே.பி என்கிற ஜான் பாண்டியன் கதை எப்படி இருக்கிறது என்பதைப் பார்ப்போம்.

ஜான் பாண்டியன்
ஜான் பாண்டியன்

அ.தி.மு.க-வில் பலர் எழும்பூர் தொகுதியைக் கேட்டனர். எழும்பூர் மற்றும் துறைமுகம் தொகுதிகளுக்கான மா.செ பாலகங்காவும் இரண்டில் ஒன்றை எதிர்பார்த்தார். ஆனால், இரட்டை இலைச் சின்னத்தில் ஜான் பாண்டியனை நிறுத்தியிருக்கிறது அ.தி.மு.க. நெல்லையைப் பூர்வீகமாகக்கொண்ட ஜே.பி., இங்கு 2-வது முறையாகப் போட்டியிடுகிறார். ஏற்கெனவே 2001-ல் தி.மு.க-வில் இருந்த பரிதி இளம்வழுதியை எதிர்த்துப் போட்டியிட்டு சொற்ப வாக்குகளில் தோற்றுப்போனார். 20 ஆண்டுகள் கழித்து ஜே.பி வந்திருக்கும்போதும், தொகுதி மக்கள் பழசை மறக்கவில்லை. அதாவது, 2001-ல் தி.மு.க-வுக்கும், இவரது கட்சியினருக்கும் இடையே பெரிய பிரச்னை வெடித்து, ஜே.பி ஆட்கள் வெட்டுக்குத்து வரை சென்றனர். அது இன்னும் மக்கள் மனதில் வடுவாகவே இருக்கிறது. மேலும், தி.மு.க-வில் உள்ளதுபோல இவருக்குக் கட்சியனர் மற்றும் கூட்டணிக் கட்சியினரின் ஒத்துழைப்பு இல்லை. அ.தி.மு.க-வினர் ஜே.பி-யுடன் பிரசாரத்துக்கும் செல்வதில்லை. நெல்லையிலிருந்து ஜே.பி அழைத்து வந்திருக்கும் இளைஞர் படையே இவரைச் சூழ்ந்திருக்கிறது.

மார்வாடிகள் என்னதான் தி.மு.க-வுக்கு ஆதரவளிப்பதாகச் சொன்னாலும், பா.ஜ.க-வினர் ஜே.பி-க்காக ஓட்டுக் கேட்டுச் சென்றால் மோடி தயவால் வாக்குகள் விழ வாய்ப்புள்ளது. அதுவும் 20 சதவிகிதம் பேர்தான் தேறுவார்கள். இரட்டை இலைச் சின்னமும் ஜே.பி-க்கான ப்ளஸ். இருந்தபோதும், ஜே.பி-க்கான மேஜர் பிரச்னை சாதி! ‘இட ஒதுக்கீடே வேண்டாம், பட்டியலே வேண்டாம் எனப் பட்டியலிலிருந்து வெளியேறத் துடிக்கும் ஜே.பி எதற்கு ரிசர்வ் தொகுதியில் போட்டியிட வேண்டும்?’ என்கிறார்கள் தொகுதிவாசிகள். 'நான் தலித் அல்ல' என்று ஜே.பி சொல்லிவருவது அவருக்கே எதிராகத் திரும்ப வாய்ப்புள்ளது.

ஒரு பக்கம், ஐ.பி மண்ணின் மைந்தர், ஜே.பி நெல்லை மைந்தர். ஐ.பி-க்கு சொந்தக் கட்சி மற்றும் கூட்டணியின் ஒத்துழைப்பு இருக்கிறது; ஜே.பி-க்கு இல்லை. சாதி, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இறுதி நேரத்தில் ஜே.பி ஆட்கள் 2001 ஃபார்முலாவைக் கையில் எடுத்தால் அதைச் சமாளிக்கவும் தி.மு.க தயாராக இருக்கிறது. கூட்டிக் கழித்துப் பார்த்தால், தி.மு.க ஆட்சி அமையும் என்கிற பிம்பம் இருப்பதால் ஐ.பி-க்கு வாக்களித்தால் தொகுதி சிறக்கும் என்ற நம்பிக்கை தொகுதி மக்களிடம் தெரிகிறது. இரட்டை இலைச் சின்னத்தைத் தவிர வேறு எந்தப் பிடிமானமும் ஜே.பி-யிடம் இல்லை!" என்பதோடு முடித்துக்கொண்டார்.

ஐ.பி-யா... ஜே.பி-யா? காத்திருப்போம்.