Published:Updated:

``ரஜினிகாந்த் பா.ஜ.க-வில் இணைய வேண்டும்!” -பொன்.ராதாகிருஷ்ணன் விருப்பம்

``தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களும் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம்” - பொன். ராதாகிருஷ்ணன்

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வந்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ``நாங்குநேரியில் தேர்தல் நடைபெறும் நாளன்று விதிமுறைகளை மீறி தொகுதிக்குள் வசந்தகுமார் நுழைந்தது சட்டப்படி குற்றம். ஏதோ சம்பிரதாயத்துக்காக மட்டுமே போலீஸார் அவர்மீது வழக்குப்பதிவு செய்து ஜாமீனில் விடுதலை செய்துள்ளனர்.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

வசந்தகுமார் எந்தெந்த வாக்குச்சாவடி மையத்திற்குச் சென்றார், எவ்வளவு பணம் விநியோகம் செய்யப்பட்டது என்பதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டிருக்க வேண்டும். இந்த விவகாரத்தில் காவல்துறையும் தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுக்காதது கண்டனத்துக்குரியது. அவரை மீண்டும் கைதுசெய்து விசாரணை மேற்கொள்ள வேண்டும். தோல்வி பயத்தால் காங்கிரஸ் கட்சி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்கினால், அதை நான் வரவேற்கிறேன். ஆனால், அவர் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். தமிழகத்தில் உள்ள எட்டு கோடி மக்களும் பா.ஜ.க-வில் சேர வேண்டும் என்பதுதான் எப்போதும் என்னுடைய விருப்பம். அதுபோல, ரஜினியும் பா.ஜ.க-வில் இணைய வேண்டும். பஞ்சமி நிலம் மட்டுமல்ல அரசு நிலமாக இருந்தாலும் சரி, அதை யார் ஆக்கிரமித்திருந்தாலும் சரி, அதைத் திரும்ப அரசிடம் ஒப்படைக்க வேண்டும். தி.மு க பலமுறை ஆட்சியிலிருந்த கட்சி என்பதால், அவர்கள் ஒன்றும் இதற்கு விதிவிலக்கல்ல.

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

யார் தவறு செய்திருந்தாலும் அவர்கள்மீது விசாரணை நடத்த வேண்டும். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் சம்ஸ்கிருதத்தை மத்திய அரசு திணிக்கவில்லை. விருப்பப்பட்டோர் படிக்கலாம் என்றுதான் கூறியிருக்கிறது. தமிழக முதலமைச்சருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதில் தவறு ஒன்றும் இல்லை. நாங்குநேரி, விக்ரவாண்டி ஆகிய இரு சட்டப்பேரவைத் தேர்தலிலும் பா.ஜ.க கூட்டணி கட்சி மகத்தான வெற்றிபெறும்” என்றார்.