Published:Updated:

``செத்தாலும் சாவேன், காங்கிரஸில் சேர மாட்டேன் என்று சொன்னேன்” - நிதின் கட்கரி, பாஜக உறவில் விரிசலா?

நிதின் கட்கரி

``கிணற்றில் விழுந்து இறந்தாலும் இறப்பேன், காங்கிரஸ் கட்சியில் மட்டும் சேர மாட்டேன்” என்று முன்னர் ஒருமுறை சொன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

``செத்தாலும் சாவேன், காங்கிரஸில் சேர மாட்டேன் என்று சொன்னேன்” - நிதின் கட்கரி, பாஜக உறவில் விரிசலா?

``கிணற்றில் விழுந்து இறந்தாலும் இறப்பேன், காங்கிரஸ் கட்சியில் மட்டும் சேர மாட்டேன்” என்று முன்னர் ஒருமுறை சொன்னதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்திருக்கிறார்.

Published:Updated:
நிதின் கட்கரி

மத்திய அமைச்சர் நிதின் கட்கரிக்கும், பாஜக தலைமைக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்துவருவதாக சொல்லப்படுகிறது. நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நிதின் கட்கரி அரசியலிலிருந்து விலகுவது குறித்து பரிசீலிப்பதாகத் தெரிவித்திருந்தார். மற்றொரு நிகழ்ச்சியில் நன்கொடையாளர்கள் அரசியல் கட்சிகளை நடத்துகின்றனர் என்றும், நன்கொடையாளர்கள் சொல்வதை அரசியல் கட்சிகள் கேட்கின்றன என்றும் பாஜக-வை மறைமுகமாக விமர்சித்திருந்ததாகச் சொல்லப்படுகிறது. இதனால் சமீபத்தில் பாஜக-வின் உயர்மட்டக்குழுவிலிருந்து நிதின் கட்கரி நீக்கப்பட்டார்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் புதிதாகச் சேர்க்கப்பட்டார். இதையடுத்து நிதின் கட்கரி பேசியதாக ஒரு வீடியோ வெளியானது. அந்த வீடியோ எடிட்டிங் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும், அதில் கட்கரி, பாஜக-வை நேரடியாக விமர்ச்சிப்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. தற்போது ஆர்.எஸ்.எஸ் தலைமையில் சிறிய அளவில் விரிசல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆர்.எஸ்.எஸ் செல்லப்பிள்ளை என்ற அந்தஸ்தை நிதின் கட்கரி இழந்துவிட்டார்.

நிதின் கட்கரி
நிதின் கட்கரி

இதனால் அடுத்த தேர்தலில் நிதின் கட்கரிக்கு சீட் கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாகியிருக்கிறது. நரேந்திர மோடியும், அமித் ஷாவும் அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக-வை வழிநடத்த புதிய இளம் தலைவர்களை உருவாக்கிவருகின்றனர். இதனால் கட்கரி பாஜக-விலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணையப்போகிறார் என்று செய்தி வெளியானது.

இந்த நிலையில் நாக்பூரில் நடந்த தொழிலதிபர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும்போது இது குறித்து கருத்து தெரிவித்திருந்த நிதின் கட்கரி, ``நான் பாஜக-வில் மாணவரணித் தலைவராக இருந்தபோது காங்கிரஸ் நிர்வாகி ஸ்ரீகாந்த் என்னிடம் காங்கிரஸ் கட்சியில் சேரும்படி சொன்னார். நான் நல்லவர் என்றும், ஆனால் தவறான கட்சியில் இருப்பதாகவும் சொன்னார். ஆனால் நான் அவரிடம் கிணற்றில் விழுந்து செத்தாலும் சாவேன். ஆனால் காங்கிரஸ் கட்சியில் சேர மாட்டேன் என்று சொல்லிவிட்டேன். எனக்கு காங்கிரஸ் கொள்கை பிடிக்காது என்று சொன்னேன். தொழில் செய்யும்போது ஒவ்வொருவரும் நல்ல நண்பர்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்தார்.

நிதின் கட்கரி தன்னை பாஜக உயர் மட்டத்திலிருந்து நீக்கப்பட்டது குறித்து இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.