Election bannerElection banner
Published:Updated:

மகாராஷ்டிரா: `எனக்கு மட்டும் கொரோனா வைரஸ் கிடைத்தால்..!’ - சிவசேனா எம்.எல்.ஏ சர்ச்சைப் பேச்சு

சஞ்சய் கெய்க்வாட்
சஞ்சய் கெய்க்வாட்

`எனக்கு கொரோனா வைரஸ் கிடைத்தால், அதை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வாயில் விடுவேன்’ என்று சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேவருகிறது. கொரோனாவைக் கட்டுப்படுத்த மத்திய அரசு தேவையான தடுப்பூசி மற்றும் மருந்துகளைக் கொடுக்க மறுப்பதாக மகாராஷ்டிரா அரசு குற்றம்சாட்டிவருகிறது. இதற்கு பா.ஜ.க-வும் பதிலடி கொடுத்துவருகிறது. இப்போது கொரோனா நோயாளிகளுக்குச் சிகிச்சையளிக்க ஆக்ஸிஜனுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை தொடர்பாக பேச பிரதமரைத் தொடர்புகொண்டபோது தேர்தல் பணியில் பிஸியாக இருப்பதாகச் சொல்கிறார்கள் என்று மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்திருக்கிறார். மகாராஷ்டிராவில் இன்னும் ஓரிரு நாளில் கொரோனா தினத்தொற்று 70,000 ஆகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேவேந்திர பட்நாவிஸ்
தேவேந்திர பட்நாவிஸ்

இந்தநிலையில், புல்தானா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட், `தன்னிடம் கொரோனா வைரஸ் கிடைத்தால் அதை முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நாவிஸ் வாயில் செலுத்துவேன்’ என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருக்கிறார். இதனால் இரு கட்சித் தொண்டர்களுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. `கெய்க்வாட் மன்னிப்புக் கேட்க வேண்டும்’ என்று பா.ஜ.க தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இது குறித்து கெய்க்வாட் கூறுகையில், `தினமும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை எரியூட்டுவதற்காக மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.

மற்றொரு பக்கம் கொரோனாவுக்குச் சிகிச்சையளிக்கும் மருந்து இல்லாமல் மக்கள் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவரும் கொரோனா விவகாரத்தில் கீழ்த்தரமான அரசியல் செய்துகொண்டிருக்கின்றனர். பா.ஜ.க., மகராஷ்டிராவில் அது போன்ற ஓர் அரசியலைச் செய்துகொண்டிருக்கிறது. தேவேந்திர பட்நாவிஸ்தான் இதற்குக் காரணம். எனவேதான் பட்நாவிஸ் வாயில் கொரோனா வைரஸை விடுவேன் என்று தெரிவித்தேன்.

மக்களின் ஒட்டுமொத்த கோபத்தைத்தான் தெரிவித்தேன். பட்நாவிஸும் அவரது கட்சித் தலைவர்களும் மக்கள் மத்தியில் மாநிலத்திலுள்ள ஆட்சி குறித்துத் தவறான தகவலைப் பரப்பிவருகின்றனர். இதற்காக பட்நாவிஸ் வெட்கப்பட வேண்டும். இந்த விவகாரத்தில் மன்னிப்புக் கேட்கும் பேச்சுக்கே இடமில்லை. பா.ஜ.க-வினர் எனது கொடும்பாவியை எரிக்க முயன்றனர். அதை என் ஆதரவாளர்கள் தடுத்து கொடும்பாவியை அவர்களிடமிருந்து பிடுங்கினர்” என்றார்.

பட்நாவிஸ்
பட்நாவிஸ்

இது குறித்து பா.ஜ.க முன்னாள் அமைச்சர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், ``உடனடியாக கெய்க்வாட்டுக்கு மனநல சிகிச்சை அவசியம். கெய்க்வாட் கட்சிதான் ஆட்சியில் இருக்கிறது. ஆனால் கெய்க்வாட் எதிர்க்கட்சி போன்று நடந்துகொள்வதோடு, பிரச்னைகளுக்கு பா.ஜ.க-தான் காரணம் என்று குறை கூறிக்கொண்டிருக்கிறார்” என்றார். பா.ஜ.க சட்டமேலவை உறுப்பினர் கிரிஷ் வியாஸ் இது குறித்துக் கூறுகையில், ``கெய்வாட்டின் கருத்து அரசின் விரக்தியைக் காட்டுகிறது. தோல்வியை மறைக்க இப்போது அடுத்தவர்கள் மீது குற்றம்சாட்டப் பார்க்கின்றனர்” என்றார்.

இதற்கிடையே மகாராஷ்டிரா மூன்றாவது கொரோனா அலைக்குத் தயாராகி ருவதாக மகாராஷ்டிரா அமைச்சர் ஆதித்ய தாக்கரே தெரிவித்துள்ளார். கொரோனாவைக் கட்டுப்படுத்துவது குறித்து டாக்டர்களுடன் கலந்தோலோசித்த ஆதித்ய தாக்கரே, ``கொரோனா மூன்றாவது அலையில் பரவும் வைரஸ் வீரியமுள்ளதாக இருக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் அதை எதிர்கொள்ள அரசு தயாராகிவருகிறது. இப்போது கொரோனாவிலிருந்து உயிர்களைக் காப்பதுதான் மிகவும் முக்கியம். மாநிலம் முழுவதும் கொரோனா நோயாளிகளுக்குச் சிகிசையளிக்க வென்டிலேட்டர் வசதியுடன் 5 லட்சம் படுக்கைகள் தயார்நிலையில் இருக்கின்றன” என்று தெரிவித்தார். ஆதித்ய தாக்கரேவுக்கும், அவரின் தாயாருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு