Published:Updated:

அரசுப் பணி ஓய்வுக்குப் பின் சமூகப் பணியில் ஈடுபட்ட பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மரணம்!

'மண்டல் கமிஷன் நிறைவேறாது' என்ற நிலை இருந்ததை மாற்றி, வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். அதன் பின்னணியில் அந்த நேரத்திற்கான சமூகக் கடமையை உணர்ந்து பணியாற்றியவர் பி.எஸ்.கிருஷ்னன்.

P.S.KRISHNAN
P.S.KRISHNAN ( PC: forward press )

இந்தியா போன்ற பல மொழிகள், பல மதங்கள், எண்ணற்ற ஜாதிகள் கொண்ட ஒரு நாட்டில் பணியாற்றும் ஓர் அரசு அதிகாரிக்கு, சமூக நீதி பார்வையும் மிக அவசியம். இந்த நடைமுறை உண்மையை எல்லோருக்கும் உரக்கச் சொல்லும் விதமாக வாழ்ந்து காட்டியவர் பி.எஸ்.கிருஷ்ணன். தனக்கு அளிக்கப்பட்ட எந்தப் பணியென்றாலும் அதில் எளிய மக்களின் வாழ்க்கையை உணர்ந்து அவர்களின் பிரதிநிதியாகக் கருதியே அவற்றை மேற்கொண்டவர். அதனால்தான், அரசுப் பணி முடிந்தும், அவரால் எவ்வித தொய்வுமின்றி, அம்மக்களுக்கான குரலாக ஒலித்துக்கொண்டே இயங்க முடிந்தது.

P.S.KRISHNAN
P.S.KRISHNAN

1932 ஆம் ஆண்டில் கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்த பி.எஸ்.கிருஷ்ணன், மகாராஜா அறிவியல் கல்லூரியில் (தற்போது அது, யுனிவர்சிடி கல்லூரி) படித்தார். தனது 24 வது வயதில் ஐ.ஏ.எஸ் அதிகாரியானார். இந்தியாவின் பல இடங்களில் பல்வேறு பணிகளில் பொறுப்பு வகித்தார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு தொடர்பாக மண்டல் கமிஷன் அறிக்கையைச் செயல்முறைப்படுத்துவதில் ஏராளமான சிக்கல்கள் இருந்தன. நாட்டின் முக்கியக் கட்சிகளே அதற்கு தடையாக நின்றன. பல்வேறு விதமான போராட்டங்கள் நடந்தன. தமிழகத்தில் மண்டல் கமிஷனுக்கு ஆதரவான குரல்களே ஒலித்தன. 1990ம் ஆண்டு, இந்தியாவின் பிரதமராக வி.பி.சிங் பதவியிலிருந்தபோது, பி.எஸ்.கிருஷ்ணன் மத்திய அரசின் செயலாளராகப் பணியாற்றினார்.

'மண்டல் கமிஷன் நிறைவேறாது' என்ற நிலை இருந்ததை மாற்றி, வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தினார். அதன் பின்னணியில் அந்த நேரத்திற்கான சமூகக் கடமையை உணர்ந்து பணியாற்றியவர் பி.எஸ்.கிருஷ்னன். இன்றளவும் அவரின் மிக முக்கியப் பணியாகக் குறிப்பிடப்படுவது இது. மேலும், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டதிலும் இவரின் பங்களிப்பு மிக அதிகம். சென்ற ஆண்டில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்துவதாக நீதிமன்றம் கூறி, சில விஷயங்களைத் தளர்த்தியது.

அதுகுறித்து பி.எஸ்.கிருஷ்ணன் அளித்த நேர்காணல் ஒன்றில், நீதிமன்றத்தின் முடிவு தமக்கு வருத்தமளிப்பதாகவும், பட்டியலின, பழங்குடி மக்களுக்கு இருக்கும் ஒரேயொரு பாதுகாப்பையும் பலவீனப்படுத்திவிடும் எனவும் கவலையுடன் தெரிவித்திருந்தார். மேலும், இந்தத் தளர்வுகள் மூலம், வன்கொடுமைச் சட்டத்தின் மூலம் வழக்குத் தொடுப்பவர்கள் மிரட்டப்படுவது அதிகரிக்கலாம் என்று அச்சத்தையும் வெளிப்படுத்தியிருந்தார். இவரைப் போல பலரின் கருத்துகள் நாடு முழுவதும் பெரும் உரையாடலை ஏற்படுத்தின. உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுத் தாக்கல் செய்ததில் முந்தைய உத்தரவுகள் திரும்பப் பெறப்பட்டன.

1990 ல் அரசுப் பணியிலிருந்து ஓய்வுபெற்றாலும், மத்திய அரசின் கொள்கை உருவாக்கப் பணி உள்ளிட்ட பொறுப்புகளில் பங்கேற்றார்.

  வி.பி.சிங்
வி.பி.சிங்

சென்ற ஆண்டில், பல்கலைக்கழக மானியக் குழு, ஆராய்ச்சி மாணவர்கள் (பி.ஹெச்.டி மற்றும் எம்.பில்) எண்ணிக்கையை 1000 இடங்களிலிருந்து 194 ஆகக் குறைத்தது. இதற்கு எதிராக, அத்திட்டம் தொடங்கப்பட்டதன் வரலாறு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அடுக்கி, 'இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான ஒன்று' எனக் கருத்து தெரிவித்திருந்தார். இப்படியாக, தம் வாழ்நாளின் எப்போதும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்னைகளுக்கான தீர்வு நோக்கியே பயணித்திருக்கிறார்.

நீதிபதி கிருஷ்ணய்யர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். இவர் எழுதிய 'Social Exclusion and Justice in India' எனும் நூல் பரவலாகக் கவனம் பெற்று, ஓர் உரையாடலை நிகழ்த்தச் செய்தது.

அரசுப் பணி ஓய்வுக்குப் பின் சமூகப் பணியில் ஈடுபட்ட பி.எஸ்.கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். மரணம்!

உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பி.எஸ்.கிருஷ்ணன், சிகிச்சை பலனின்றி நேற்று (10 / 11 / 2019) மரணமடைந்தார். அவரின் மரணம், சமூக நீதியை நிலைநாட்ட உழைப்பவர்களுக்குப் பேரிழப்பே!

``தேர்தல் ஆணையத்தை `நான் ஆணையிட்டால்’ என செயல்பட வைத்தவர் டி.என்.சேஷன்!’’- டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி