Published:Updated:

சூடுபிடிக்கும் ஐ.ஏ.எஸ் இடமாற்ற சர்ச்சைகள்... பவர்ஃபுல் பதவியா, டம்மி பதவியா?

தலைமைச்செயலகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தலைமைச்செயலகம்

ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைச் செயலாளராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்றெல்லாம் தேர்தல் முடிவுகளின்போது பேச்சுகள் அடிப்பட்டன

ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் இடமாற்றங்களும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றன. பவர்ஃபுல் பதவிகளைப் பிடிக்க அதிகாரிகள் பலரும் காய்நகர்த்திவந்த நிலையில் மே 25-ம் தேதி 21 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்துள்ளது தமிழக அரசு. இதில் கடந்த ஆட்சியில் தி.மு.க கட்சியால் விமர்சிக்கப்பட்ட சிலருக்கும் இப்போது பவர்ஃபுல் பதவிகளை அளித்திருப்பதுதான் தலைமைச் செயலக வட்டாரத்தில் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இறையன்பு - உதயச்சந்திரன்
இறையன்பு - உதயச்சந்திரன்

நம்மிடம் பேசிய மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் 2011-2020 வரை நடைபெற்ற உதவிப் பேராசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் தேர்வுகளில் குளறுபடி நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. ‘தேர்வுகளில் வெளிப்படைத் தன்மை இல்லை’ என்று அதிருப்தி தெரிவித்த மாநில தகவல் ஆணையம், அந்தக் காலகட்டங்களில் தேர்வு வாரியத் தலைவர் பொறுப்பில் இருந்த சுர்ஜித் சவுத்ரி, விபூ நாயர், ககர்லா உஷா, ஜெகநாதன், சீனிவாசன், நந்தகுமார், ஜெயந்தி, வெங்கடேஷ், லதா ஆகிய ஒன்பது ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்குக் கட்டாய ஓய்வு வழங்கப் பரிந்துரைத்தது. ஆனால், இவர்களில் நான்கு பேருக்கு தி.மு.க அரசு முக்கிய பதவிகளை வழங்கியிருக்கிறது. பொதுத்துறைச் செயலாளராக ஜெகநாதன், பள்ளிக்கல்வித்துறை கமிஷனராக நந்தகுமார், நில நிர்வாகத்துறை கமிஷனராக விபுநாயர், பள்ளிக்கல்வித்துறைச் செயலாளராக காகர்லா உஷா ஆகியோர் நியமிக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இவர்கள் நியமனங்கள்கூடப் பரவாயில்லை... கடந்த ஆட்சியில் வீட்டு வசதித்துறைச் செயலாளர், சி.எம்.டி.ஏ உறுப்பினர் செயலர், சென்னை மாநகராட்சி கமிஷனர் எனப் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்தவர் கார்த்திகேயன். முன்னாள் துணைமுதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு நெருக்கமாக இருந்தவர். பத்து ஸ்மார்ட் சிட்டிகளின் மின்னனு நிர்வாகம் தொடர்பான டெண்டரில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கு ஆதரவாக கார்த்திகேயன் செயல்படுவதாகவும், இந்த டெண்டர் முறைகேடு குறித்து சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் என்றும் 2018 செப்டம்பர் மாதம் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அந்தக் கார்த்திகேயனுக்குத் தான் பவர்ஃபுல்லான நெடுஞ்சாலைத்துறைச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அந்த ஆச்சர்யம் விலகுவதற்குள், தற்போது அதைவிட பவர்ஃபுல்லான உயர்கல்வித் துறைச் செயலாளர் பொறுப்பு அளிக்கப் பட்டிருக்கிறது. உயர்கல்வித்துறையிலிருந்த தீரஜ் குமாருக்கு இப்போது நெடுஞ்சாலைத் துறை அளிக்கப்படிருக்கிறது.

ஊரக மேம்பாடு மற்றும் பஞ்சாயத்துராஜ் துறைச் செயலாளராக இருந்த ஹன்ஸ்ராஜ் வர்மா தலைமைச் செயலாளராக நியமிக்கப்படுவார் என்றெல்லாம் தேர்தல் முடிவுகளின்போது பேச்சுகள் அடிப்பட்டன. அவர் தி.மு.க தலைமையுடன் நல்ல தொடர்பிலிருப்பதாகவும் கூறப்பட்டது. அவரை தற்போது தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத் தலைவராக நியமித் துள்ளனர். இது டம்மியான பதவி என்று வெளியே கூறப்பட்டாலும், கொரோனாப் பேரிடர் சரியானவுடன் தொழில் முதலீட் டாளர் மாநாடு நடக்கவி ருப்பதால், தனக்கு இந்தப் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பதாக ஹன்ஸ்ராஜ் வர்மா தரப்பு கூறுகிறது.

ஹன்ஸ்ராஜ் வர்மா - விக்ரம் கபூர் - கார்த்திகேயன் -  பீலா ராஜேஷ்
ஹன்ஸ்ராஜ் வர்மா - விக்ரம் கபூர் - கார்த்திகேயன் - பீலா ராஜேஷ்

தலைமைச் செயலாளர் பதவிக்கு அடிபட்ட மற்றொரு பெயர் விக்ரம் கபூர். சுற்றுலா மற்றும் அறநிலையத்துறைச் செயலாளராக இருந்தவரை தற்போது, திட்டம் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளராக நியமித்துள்ளனர். இதையடுத்து, விக்ரம் கபூர், விடுமுறை போட்டுவிட்டு டெல்லிக்குக் கிளம்பிவிட்டார். அவர் மத்திய அரசுப்பணிக்கு ஜம்ப் ஆகிவிடும் முயற்சியில் இருப்பதாகவும் தெரிகிறது.

அதேபோல, சுகாதாரத்துறைச் செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், கொரோனா முதல் அலையின்போது சில சர்ச்சைகளில் சிக்கியதால் வணிக வரித்துறை மற்றும் பத்திரப்பதிவுத்துறைச் செயலாளராக மாற்றப்பட்டார். தி.மு.க ஆட்சி அமைத்தவுடன், மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுடன் பீலா ராஜேஷும் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்தார். ஆனாலும், அவரை தற்போது கைத்தறித்துறையின் கமிஷனராக டம்மியாக்கியுள்ளனர். ஆனாலும் தன்னுடைய மேலிடத் தொடர்புகள் மூலமாக மீண்டும் முக்கியத் துறை ஒன்றைப் பெற்றுவிடும் முயற்சியில் பீலா இறங்கியிருக்கிறார். குன்னூர் இன்ட்கோ சர்வ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக இருந்த சுப்ரியா ஷாகு, சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை முதன்மைச் செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவர் தொழிற்துறைச் செயலாளர் முருகானந்தத்தின் மனைவியாவார். முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான உதயச்சந்திரனும் முருகானந்தமும் இணைந்தே முக்கிய முடிவுகளை எடுக்கும் நிலையில், வனத்துறை முதன்மைச் செயலாளர் பதவி சுப்ரியா ஷாகுவுக்குக் கிடைத்திருக்கிறது” என்றனர் விரிவாக.

சூடுபிடிக்கும் ஐ.ஏ.எஸ் இடமாற்ற சர்ச்சைகள்... பவர்ஃபுல் பதவியா, டம்மி பதவியா?

தி.மு.க ஆதரவு ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரிடம் பேசினோம். “ஐ.ஏ.எஸ் பதவி என்பது நிர்வாகம் தொடர்புடையது. எந்தத் துறையில் அரசு நியமித்தாலும் அங்குள்ள நிர்வாகத்தை கவனிக்க வேண்டியதுதான் அவர்கள் பொறுப்பு. அப்படியிருக்க, பவர்ஃபுல் பதவி, சாதாரண பதவி என்றெல்லாம் பாகுபாடு பார்ப்பது சரியல்ல. ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்றபோது, அதற்கு முந்தைய தி.மு.க ஆட்சியில் இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை எப்படியெல்லாம் தூக்கியடித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். அதுபோல ஏதும் நடக்கவில்லையே’’ என்றார்.

இதற்கிடையே, மே 27-ம் தேதியும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக சுப்ரமணியன் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபற்றிப் பேசிய ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர், “கடந்த ஆட்சியின்போது விழுப்புரம் ஆட்சியராக இருந்த சுப்ரமணியன், அன்றைய அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கும் அவரின் அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கும் உறுதுணையாக இருந்தவர். அதற்காகவே அவர் கலெக்டர் பதவியிலிருந்து இடமாற்றம் செய்யப்பட்டபோது புவியியல் மற்றும் சுரங்கத்துறை கமிஷனராக நியமிக்கப்பட்டார். ஏற்கெனவே பவர்ஃபுல் பதவியிலிருந்தவரை தற்போது மற்றொரு பவர்ஃபுல் பதவியான டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் பதவிக்கு நியமித்திருப்பது ஆச்சர்யமாக இருக்கிறது” என்கிறார்கள். அதேபோல கடந்த ஆட்சியில் கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளின் முதன்மைச் செயலாளராக இருந்த கோபாலுக்கு, சமீபத்தில் வேளாண்மைத் துறைச் செயலாளர் பதவியைக் கூடுதலாகக் கொடுத்தார்கள். இதுகுறித்து சர்ச்சை எழுந்தவுடன், அவரை ஊரக வளர்ச்சித்துறைக்கு மாற்றினார்கள். இடையில் என்ன நடந்தது என்று தெரியவில்லை, மே 27-ம் தேதி அவருக்குக் கூடுதலாக அவர் ஏற்கெனவே வகித்துவந்த கால்நடை, மீன்வளம், பால்வளம் ஆகிய துறைகளின் முதன்மைச் செயலாளர் பதவியைக் கொடுத்திருக்கிறார்கள்.

சுப்ரியா ஷாகு - கோபால் - சுப்ரமணியன்
சுப்ரியா ஷாகு - கோபால் - சுப்ரமணியன்

இதற்கிடையே கடந்த ஆட்சியில் மதுரை கலெக்டராக இருந்த வினய், சத்துணவு ஊழியர்கள் நியமனத்தில் ஆட்சியாளர்களுடன் முரண்பட்டதால், சேலம் மாவட்ட பட்டுப்புழு வளர்ப்புத் துறை இயக்குநராக டம்மி பதவிக்குத் தூக்கியடிக்கப்பட்டார். சென்னை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட பதவிகளில் சிறப்பாகச் செயல்பட்ட பி.மகேஸ்வரி மனித உரிமை கமிஷனராக இருக்கிறார். இவர்களைத் தவிர கடந்த ஆட்சியில் பழிவாங்கப்பட்ட வேறு சிலரும் தற்போது புதிய பதவிகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.

அடுத்த சில நாள்களில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தலைமைச் செயலாளர் இறையன்பு கூட்டவிருக்கிறார். அந்தக் கூட்டத்திற்கு முன்பு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மாறுதல்கள் அனைத்தும் அறிவிக்கப்படலாம் என்கிறது தலைமைச் செயலக வட்டாரம்.

****

சூடுபிடிக்கும் ஐ.ஏ.எஸ் இடமாற்ற சர்ச்சைகள்... பவர்ஃபுல் பதவியா, டம்மி பதவியா?

இந்த ஐ.ஏ.எஸ் பணியிட மாற்றத்தில் கார்த்திகேயனுக்கு முக்கியப் பொறுப்பு கொடுத்தது குறித்து ‘அறப்போர் இயக்கத்தின்’ ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தனது சமூக வலைத்தளத்தில் கடும் விமர்சனத்தை முன்வைத்திருந்தார். அவரிடம் பேசினோம். “முதலில் நெடுஞ்சாலைத்துறைச் செயலாளராக கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டதே அதிர்ச்சியளித்தது. அதற்குள் இப்போது உயர்கல்வித் துறையில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கெனவே, சாலை மற்றும் வடிகால்வாய் தொடர்பான டெண்டரிலும், ஸ்மார்ட் சிட்டி தொடர்பான டெண்டரிலும் இதே கார்த்திகேயன் முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகச் சொல்லி, ஸ்டாலினே அறிக்கை வெளியிட்டிருந்தார். ஆனால், இன்று அதே கார்த்திகேயனை முக்கியத் துறையில் அமர்த்தியிருக்கிறார் ஸ்டாலின். இனி, இவருக்கு எதிராக லஞ்ச ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் எப்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யும்? மற்ற துறைகளைவிட உயர்கல்வித்துறையில் நடக்கும் ஊழல்களை வெளிக்கொண்டு வருவது மிகவும் கஷ்டம். அரசின் இந்த நியமனங்கள் அதிர்ச்சியளிக்கின்றன” என்றார்.