Published:Updated:

ராஜஸ்தான்: `தகுதி நீக்கம் செய்யப்பட்டால்?' - அரசியல் எதிர்காலம் குறித்து சச்சின் பைலட்

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

``ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை நான் ஏன் வீழ்த்த விரும்புகிறேன்... தலைமையை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்கிறார் சச்சின் பைலட்.

ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்குள் நிலவிவந்த குழப்பங்கள் தீவிர கட்டத்தை அடைந்துள்ளது எனலாம். அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் மற்றும் முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையேயான பனிப்போர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெடித்தது. இதனையடுத்து, சச்சின் பைலட் மற்றும் அவரது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் டெல்லிக்குச் சென்று முகாமிட்டனர். இவர்கள் இடையே உள்ள மோதலைப் பயன்படுத்தி பா.ஜ.க-வானது காங்கிரஸ் ஆட்சியை மகாராஷ்டிராவில் பயன்படுத்திய முறையைப் பயன்படுத்தி கவிழ்க்க முயல்வதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்காகக் குதிரை பேரம் நடந்ததாகவும் தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

இதுதொடர்பான வழக்குகள் ஒருபுறம் சென்றுகொண்டிருக்க, மறுபுறம் சச்சின் பைலட் உள்ளிட்ட 19 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்களைத் தகுதிநீக்கம் செய்வது தொடர்பான வழக்கும் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்
அசோக் கெலாட் மற்றும் சச்சின் பைலட்

முதல்வர் அசோக் கெலாட் சமீபத்தில் நடத்திய காங்கிரஸ் கட்சிக் கூட்டங்களில் 19 சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்ளாமல் கட்சிக்கு எதிராகச் செயல்பட்டதால் சச்சின் பைலட் உள்ளிட்ட உறுப்பினர்களை தகுதிநீக்கம் செய்ய முடியும் எனக் கட்சி தெரிவித்து வருகிறது. இதுதொடர்பாக சச்சின் பைலட் அவரது ஆதரவாளர்களிடம், ``நீதிமன்றத்தில் நடந்துவரும் போரில் நான் வெற்றிபெற்றால், காங்கிரஸ் கட்சிக்குள் எனது உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடுவேன்” என்று கூறியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், ``நான் தகுதிநீக்கம் செய்யப்பட்டால், அரசியலில் என் பணி முடிந்துவிட்டது” என சச்சின் பைலட் உணர்வதாகவும் அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை வீழ்த்த பா.ஜ.க-வுடன் இணைந்து சச்சின் பைலட் செயல்படுவதாகவும் பா.ஜ.க-வில் அவர் சேர இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.

ராஜஸ்தான்:`சச்சின் பைலட் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மாயம்!’ - தீவிர தேடுதலில் அதிகாரிகள்

முன்னதாக இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பைலட், ``ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சியை நான் ஏன் வீழ்த்த விரும்புகிறேன்? தலைமையை மாற்ற வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்” என்று தெரிவித்தார். பா.ஜ.க-வில் இணையவில்லை என்றும் தெளிவுபடுத்தினார். டெல்லி சென்று சச்சின் பைலட் முகாமிட்டபோது தனக்கு ஆதரவாக 30 சட்டமன்ற உறுப்பினர்கள் இருப்பதாக பைலட் தெரிவித்தார். இதனால், கெலாட் தலைமையிலான ஆட்சி கவிழும் வாய்ப்பு இருப்பதாக விவாதங்கள் எழுந்தன. காங்கிரஸ் ஆட்சியில் தலைமை பொறுப்பில் இருந்து அசோக் கெலாட்டை மாற்ற வேண்டும் என்பது அவருடைய வெளிப்படையான கோரிக்கையாக இருந்தது. கெலாட் தன்னுடைய பலத்தை நிரூபிக்கும் வகையில் செயல்பட்டார். இதனையடுத்து, சச்சின் பைலட் தனது ஆதரவாளர்களை மானேசரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்தார். கெலாட் தனது ஆதரவாளர்களை ஜெய்ப்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

சச்சின் பைலட்
சச்சின் பைலட்

சச்சின் பைலட், அசோக் கெலாட் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வந்தனர். இடையே, பா.ஜ.க-வும் அசோக் கெலாட் தரப்பை விமர்சித்து வருகிறது. காங்கிரஸின் தலைமை இந்தப் பிரச்னைகளில் தலையிட்டு பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறப்பட்டு வருகிறது. சச்சின் பைலட்டை தங்களது கட்சியில் இருந்து அனுப்ப காங்கிரஸ் தலைமை விரும்பவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. துணை முதல்வர் பதவியில் இருந்து சச்சின் பைலட் நீக்கப்படுவதற்கு முன்பு சுமார் 3 மணிநேரம் பிரியங்காவுடன் போனில் பேசியுள்ளார். ``அடுத்த ஒரு வருடத்துக்கு என்னை ராஜஸ்தானின் முதல்வராக அறிவிக்க வேண்டும். அதுவும் பொது வெளியில் அனைவர் முன்னிலையிலும் இந்த அறிவிப்பு வெளியாக வேண்டும். அப்படி நடந்தால் மட்டுமே நான் சோனியா காந்தியையும் ராகுல் காந்தியையும் நேரில் சந்திப்பேன்” எனத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கேட்டு அதிருப்தியடைந்த தலைமை உடனடியாக அனைத்துப் பதவிகளிலிருந்தும் பைலட்டை விடுவித்து உத்தரவிட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராஜஸ்தான்: `என்னைப் பதவியில் இருந்து நீக்க அசோக் கெலாட் யார்?’ - ஓயாத உள்கட்சி மோதல்
அடுத்த கட்டுரைக்கு