Published:Updated:

`எங்கள் முதல்வர் வேட்பாளரை ஏற்கவில்லை எனில் தனித்துப் போட்டியிடட்டும்!' - அன்வர் ராஜா பதிலடி

`பா.ஜ.க தனித்துப் போட்டியிடட்டும்' கடுப்பான அன்வர் ராஜா!
`பா.ஜ.க தனித்துப் போட்டியிடட்டும்' கடுப்பான அன்வர் ராஜா! ( விகடன் )

சட்டமன்றத் தேர்தலில் இம்முறை அ.தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களைப் பெறும் வகையில் பா.ஜ.க நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. இதை வலியுறுத்தும் வகையில் அ.தி.மு.க கூட்டணியில் யார் முதல்வர் என்பதை பா.ஜ.க-தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் தலைவர்கள் ஆங்காங்கே பேசிவருகின்றனர்.

` பா.ஜ.க தலைமைதான் தமிழகத்தின் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்' என மாநில பா.ஜ.க தலைவர் முருகன் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், ``எங்களின் முதல்வர் வேட்பாளரை ஏற்கவில்லையென்றால், சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க தனியாகத்தான் போட்டியிட வேண்டும்'' என அ.தி.மு.க முன்னாள் எம்.பி அன்வர் ராஜா தெரிவித்திருக்கிறார்.

பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
விகடன்

`தமிழக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி தொடரும்’ என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் அரசு விழாவில் அமித் ஷா முன்னிலையில் போட்டி போட்டுக்கொண்டு அறிவித்தனர். இதற்கிடையே சட்டமன்றத் தேர்தலில் இம்முறை அ.தி.மு.க கூட்டணியில் அதிக இடங்களைப் பெறும் வகையில் பா.ஜ.க நெருக்கடிகளைக் கொடுத்துவருகிறது. இதை வலியுறுத்தும் வகையில் அ.தி.மு.க கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர் என்பதை பா.ஜ.க-தான் முடிவு செய்யும் என அக்கட்சியின் தலைவர்கள் ஆங்காங்கே பேசிவருகின்றனர்.

`கூட்டணி தொடரும்; முதல்வர் வேட்பாளரை பா.ஜ.க தேசியத் தலைமை அறிவிக்கும்!’ - எல்.முருகன் அதிரடி

இந்தநிலையில் நேற்று அரியலூரில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன், ''சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க- பா.ஜ.க கூட்டணி தொடரும். ஆனால், முதல்வர் வேட்பாளரை அ.தி.மு.க முடிவு செய்தாலும், பா.ஜ,க-தான் அதை அறிவிக்கும்” என்றும், ``தேர்தலை யாருடைய தலைமையில் சந்திப்பது என்பது குறித்தும் பா.ஜ.க-தான் முடிவெடுக்கும்'' எனவும் தெரிவித்திருக்கிறார்.

அன்வர் ராஜா.
அன்வர் ராஜா.
விகடன்

அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமி என முடிவு செய்யப்பட்டு, அவரும் தனது தேர்தல் பிரசாரத்தை நேற்று தொடங்கினார். இந்தநிலையில், பா.ஜ.க மாநிலத் தலைவர் முருகன் இவ்வாறு தெரிவித்தது அ.தி.மு.க-வினர் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்தநிலையில், ''முருகனின் இந்தக் கருத்து ஏற்புடையதல்ல'' என அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்திருக்கிறார். எல்.முருகனின் கருத்துக்கு பதிலளித்துள்ள அ.தி.மு.க முன்னாள் எம்.பி-யும், அக்கட்சியின் சிறுபான்மைப் பிரிவு மாநிலச் செயலாளருமான அன்வர் ராஜா, ``எங்கள் கட்சி அறிவித்திருக்கும் முதல்வர் வேட்பாளரை ஏற்பவர்கள்தான் அ.தி.மு.க கூட்டணியில் இருக்க முடியும். அப்படி ஏற்கவில்லையென்றால் பா.ஜ.க தனியாகக் களம் காண வேண்டியதுதான்'' என ஆக்ரோஷமாகத் தெரிவித்திருக்கிறார். அன்வர் ராஜாவின் இந்தக் கருத்து அ.தி.மு.க-பா.ஜ.க கட்சி தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு