Published:Updated:

``பெண் போலீஸாருடன் செல்ஃபி எடுத்தது குற்றம் எனில் என்னையும் தண்டியுங்கள்!” - பிரியங்கா காந்தி

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
பெண் போலீஸாருடன் பிரியங்கா காந்தி
பெண் போலீஸாருடன் பிரியங்கா காந்தி

பெண் போலீஸாருடன் செல்ஃபி எடுத்தது குற்றம் என்றால் என்னையும் தண்டியுங்கள் என்று உத்தரப்பிரதேச அரசுக்கு காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் போலீஸ் காவலில் கைதி ஒருவர் மர்மமான முறையில் இறந்து போனார். அவரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக காங்கிரஸ் செயலாளர் பிரியங்கா காந்தி ஆக்ரா புறப்பட்டு சென்றார். வழக்கம் போல் இம்முறையும் பிரியங்கா காந்தியை அங்கு செல்ல விடாமல் மாநில போலீஸ் தடுத்து நிறுத்தி பிடித்து வைத்திருந்தனர். போலீஸார் பிரியங்காவை பிடித்து வைத்திருந்த போது அவரது பாதுகாப்புக்கு ஏராளமான பெண் போலீஸார் வரவழைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆர்வத்துடன் பிரியங்கா காந்தியுடன் ஓடி வந்து பேசினர். அப்படி பேசிய போது ஒரு செல்ஃபி எடுத்துக்கொள்ளட்டுமா என்று பிரியங்காவிடம் கேட்டதற்கு அவரும் சம்மதம் தெரிவித்தார்.

இதையடுத்து பெண் போலீஸார் அனைவரும் சேர்ந்து பிரியங்கா காந்தியுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இந்த விவகாரம் உயர் அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. உடனே லக்னோ போலீஸ் கமிஷனர் துருவ காந்த் தாக்கூர், பெண் போலீஸார் பிரியங்கா காந்தியுடன் செல்பி எடுத்துக்கொண்டது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டார். போலீஸ் விதிகளை மீறி பெண் போலீஸார் செல்பி எடுத்துக்கொண்டார்களா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி மத்திய மண்டல டிசிபிக்கு கமிஷனர் தாக்கூர் உத்தரவிட்டுள்ளார். இதனால் பெண் போலீஸார் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

உ.பி.பெண் போலீஸாருடன் பிரியங்கா காந்தி
உ.பி.பெண் போலீஸாருடன் பிரியங்கா காந்தி

விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது குறித்து கேள்விப்பட்ட பிரியங்கா காந்தி இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், பெண் போலீஸாருடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றை பகிர்ந்து கொண்டதோடு, ``யோகிஜி இந்த புகைப்படம் உங்களுக்கு மிகவும் கஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதாக அறிகிறேன். அதனால்தான் பெண் போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க விரும்புகிறீர்கள். என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டது குற்றமெனில் என்னையும் தண்டிக்கவேண்டும். விசுவாசமான பெண் போலீஸாரிடன் எதிர்காலத்தை கெடுப்பது முறையாகாது” என்று குறிப்பிட்டு இருந்தார்.

``பிரதமர் மோடி கோழையைப்போலச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்" - பிரியங்கா காந்தி சாடல்!

பிரியங்கா தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆக்ரா புறப்பட்டு சென்று போலீஸ் காவலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினரை பார்த்து ஆறுதல் கூறினார். முன்னதாக அவர் அளித்த பேட்டியில், ``உத்தரப்பிரதேச சட்டமன்ற தேர்தலில் 40 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்படும்” என்று குறிப்பிட்டார். உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. காங்கிரஸ் கட்சி பிரியங்கா காந்தி தலைமையில் தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு