Published:Updated:

தனிமைப்படுத்திக் கொண்ட நயினார் நாகேந்திரன்! - முதல்வரின் நெல்லை விசிட் காரணமா?

நயினார் நாகேந்திரன்
நயினார் நாகேந்திரன்

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது நயினார் நாகேந்திரன் போக்குவரத்துத்துறை, தொழில்துறை போன்ற முக்கியமான துறைகளின் அமைச்சராக இருந்தவர். தற்போது பாரதிய ஜனதா கட்சியில் தனக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். 

எம்.ஜி.ஆர் காலத்து அரசியல்வாதிகளில் ஒருவர், நயினார் நாகேந்திரன். அ.தி.மு.க-வில் அடிப்படை உறுப்பினராகச் சேர்ந்த அவர் படிப்படியாக முன்னேறி பல உயர்ந்த பொறுப்புகளை வகித்தவர். அத்துடன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்தவர்.

Vikatan

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது முக்கிய அமைச்சரவைப் பொறுப்புகள் அவருக்கு வழங்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் கட்சி நடவடிக்கைகளில் தீவிரம் காட்டாமல் ஒதுங்கியிருந்த அவர், பாரதிய ஜனதாவில் சேர்ந்தார்.

பா.ஜ-வில் நயினார் நாகேந்திரனுக்கு மாநிலத் துணைத் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டதுடன், கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்புக் கொடுக்கப்பட்டது. தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் பொறுப்பு தனக்குக் கிடைக்கும் என அவர் நம்பியிருந்தார். ஆனால், அவரது விருப்பம் நிறைவேறவில்லை. 

நயினார் நாகேந்திரனுடன் மாநிலத் தலைவர் முருகன்
நயினார் நாகேந்திரனுடன் மாநிலத் தலைவர் முருகன்

அதனால், அதிருப்தி அடைந்த நயினார் நாகேந்திரன், தி.மு.க பக்கம் சாய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகப் பேச்சு எழுந்துள்ளது. இந்தத் தகவல் தெரிய வந்ததும் சில வாரங்களுக்கு முன்பு, மாநிலத் தலைவர் முருகன் அவரை நேரில் சந்தித்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் எந்த முடிவும் எட்டப்படவில்லை எனத் தெரிகிறது.

நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களிடம் இதுகுறித்து பேசியபோது,``தமிழகம் முழுவதும் அறிமுகமான தலைவர்களில் ஒருவராக இருக்கும் நயினார் நாகேந்திரன் பா.ஜ.க-வில் அதிருப்தியில் இருப்பதால் அவரை மீண்டும் அ.தி.மு.க-வில் சேர்க்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வம் காட்டுகிறார். அதற்காகக் கட்சியின் மூத்த நிர்வாகிகள் அவருடன் பேசி வருகிறார்கள். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி
முதல்வர் எடப்பாடி பழனிசாமி

வரும் 7-ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி நெல்லைக்கு வரும்போது அவரைக் கட்சியில் சேர்க்கப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. தான் அ.தி.மு.க-வில் கோலோச்சிய காலத்தில், கட்சியில் தனக்கு ஜூனியராக இருந்தவர்களின் தலைமையின் கீழ் செயல்பட நயினார் நாகேந்திரன் விரும்பவில்லை.

நெல்லைக்கு வருகை தரும் முதல்வரைச் சந்திக்குமாறு நயினார் நாகேந்திரனுக்குத் தொடர்ந்து அழைப்பு வருகிறது. அந்த நெருக்கடியைத் தவிர்ப்பதற்காகவே தனக்கு லேசான கொரோனா அறிகுறி இருப்பதுபோல உள்ளதால் தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார்” என்கிறார்கள். 

நயினார் நாகேந்திரன் ட்வீட்
நயினார் நாகேந்திரன் ட்வீட்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அவரைச் சமாதானப்படுத்தும் முயற்சியில் பாரதிய ஜனதாவும் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

அடுத்த கட்டுரைக்கு