Published:Updated:

தலைநகரில் தோல்வி எதிரொலி... மாற்றப்படும் சென்னை மா.செ-க்கள்?! - அ.தி.மு.க-வில் அடுத்த அதகளம்?

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம் ( விகடன் )

கட்சியின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் இந்த ஐவர் அணியைக் கலைக்க வேண்டும் என்று தலைமைக் கழகத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டுகின்றன.

நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், இதுவரை இல்லாத வகையில் சென்னை மாநகரச் சட்டமன்றத் தொகுதிகள் அனைத்திலுமே அ.தி.மு.க வாஷ்அவுட் ஆகிவிட்டதால், மாவட்டச் செயலாளர்கள் மீது கட்சித் தலைமை அதிருப்தியில் இருக்கிறதாம். விரைவில் சில மாற்றங்களுக்கான அறிவிப்புகள் வெளியாகும் என்கிறது ராயப்பேட்டை வட்டாரம். இது குறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க சீனியர் ஒருவர், “சென்னையில் இதற்கு முன்புகூட அதிகமான தொகுதிகளை அ.தி.மு.க இழந்துள்ளது. ஆனால், தற்போது ஒட்டுமொத்த சென்னையின் 22 தொகுதிகளிலும் கட்சி தோல்வியைத் தழுவியுள்ளதால், மாவட்டச் செயலாளர்கள்மீது ஒருங்கிணைப்பாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

அதிமுக ஆலோசனைக் கூட்டம்
அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தி.நகர் சத்யா, விருகை ரவி, வெங்கடேஷ் பாபு, பாலகங்கா மற்றும் ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர்தான் அ.தி.மு.க-வின் புதிய ஐவர் அணியாக சென்னையில் செயல்பட்டுவருகிறார்கள். சென்னை மாநகரம் முழுவதுமே கட்சிக்கு இந்த ஐவரணி வைத்ததுதான் சட்டம். இவர்களில் சிலர் தி.மு.க அமைச்சர்கள் செந்தில் பாலாஜி மற்றும் சேக ர்பாபு ஆகியோரிடம் ரகசியப் பேச்சுவார்த்தையும் நடத்திவருகிறார்களாம். அதனால், எந்நேரமும் இவர்கள் தி.மு.க-வுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகளுமுண்டு.

இது போன்ற புகார்கள் தலைமைக்குத் தொடர்ச்சியாக வருவதால், இவர்கள் ஐந்து பேரையும் மாற்றிவிட்டு, வேறு ஐந்து பேரை மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கலாமா என தலைமை யோசித்துவருகிறது. இதைக் கேள்விப்பட்டதுமே அந்தந்த மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஏகத்துக்கும் போட்டி அதிகமாகிவிட்டது. தி.நகர் சத்யாவின் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா ஆர்வமுடன் எதிர்நோக்கிவருகிறார்.

விருகை ரவியின் பதவியை அந்த மாவட்டத்தில் அவருக்கு அடுத்தபடியாக செல்வாக்குடன் இருக்கும் மாவட்டத் துணைச் செயலாளர் எம்.எம்.பாபு எதிர்பார்க்கிறார். வெங்கடேஷ்பாபுவின் பொறுப்புக்கு பகுதிச் செயலாளர் கொளத்தூர் கணேஷ், எம்.ஜி.ஆர் மன்ற மாநிலத் துணைச் செயலாளர் வி.எஸ்.பாபு, கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோரிடையே பலத்த போட்டி நிலவுகிறது.

அதிமுக தலைமை அலுவலகம்
அதிமுக தலைமை அலுவலகம்

ஆர்.எஸ்.ராஜேஷின் இடத்தைப் பிடிக்க எம்.ஜி.ஆர் இளைஞரணி மாநிலத் துணைச் செயலாளர் பி.எஸ்.சிவா மோதுகிறார். பாலகங்கா இடத்துக்கு அம்மா பேரவை மாநில இணைச் செயலாளர் கு.சீனிவாசன் மற்றும் நீலகண்டனுக்கு இடையே போட்டி நடக்கிறது.

கட்சியின் நலனுக்கு எதிராகச் செயல்பட்டுவரும் இந்த ஐவர் அணியைக் கலைக்க வேண்டும் என்று தலைமைக் கழகத்துக்கு ஏகப்பட்ட புகார்கள் வரிசைகட்டுகின்றன. கட்சிக்காக உழைத்த மற்ற சில மாவட்டச் செயலாளர்களும் இவர்கள் ஐந்து பேர் மீது ஒருங்கிணைப்பாளர்களிடம் புகாரளித்திருக்கிறார்கள். விரைவில் மாறுதல் அறிவிப்பு வெளிவரும்” என்றார்.

இதற்கிடையே, சென்னை மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்திலேயே இது குறித்தெல்லாம் விவாதிக்கப்பட்டதாகவும், ஒருசில கட்சி நிர்வாகிகள் மீது அந்தந்த மாவட்டச் செயலாளர்கள் புகார் பட்டியலை வாசித்ததாகவும் கூறப்படுகிறது. சென்னை மாநகரைப் பொறுத்தவரை, சில அதிரடி மாற்றங்களுக்கு தலைமை ரெடியாகிறது. அது மாவட்டச் செயலாளர் மாற்றமா அல்லது நிர்வாகிகள் மாற்றமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

அடுத்த கட்டுரைக்கு