பீகார் மாநிலம், பாகல்பூர் தொகுதி எம்.எல்.ஏ-வாக இருப்பவர் கோபால் மண்டல். ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த மண்டல், தனது தொகுதிக்குட்பட்ட பதேபூர் என்ற கிராமத்தில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். விழாவில் மண்டலும், அவரது கட்சி தொண்டர்களும் இருக்கையில் அமர்ந்திருந்தனர். நடனமாடும் பெண் ஒருவர் மேடையில் பாடல்களுக்கு ஆடிக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென மேடையிலிருந்து எழுந்த மண்டல், நடன பெண்ணின் கையைப் பிடித்துக்கொண்டு ஆட ஆரம்பித்துவிட்டார். மண்டல் ஆடுவதை பார்த்து அவருடன் அமர்ந்திருந்தவர்களும் ஆட ஆரம்பித்தனர். இதனால் மேடையே அமர்க்களமானது. மண்டல் தன்னிடமிருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி நடனப் பெண் மீது வீசினார். அதோடு நடன பெண்ணுக்கு பறக்கும் முத்தமும் கொடுத்தார். இதனை வீடியோ எடுத்த ஒருவர் அதை சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிட்டார்.

இதனால் கட்சித் தலைமை மண்டல்மீது அதிருப்தியடைந்திருக்கிறது. ஐக்கிய ஜனதா தள மாநிலத் தலைவர் உமேஷ் குஷ்வாஹா இது தொடர்பாக எம்.எல்.ஏ மண்டலிடம் கண்ணியத்துடன் நடந்து கொள்ளும்படி அறிவுறுத்தியிருக்கிறார்.
ஆனால், இது குறித்து மண்டலிடம் கேட்டதற்கு, ``நடனத்தில் எனக்கு அதிக ஆர்வம் இருப்பதால் ஆடினேன். இதற்கு முன்பு ஒரு முறை முதல்வர் நிதிஷ் குமார், `ஏன் பொது இடத்தில் ஆடுகிறாய்?' என்று என்னிடம் கேட்டார். உடனே நான், எங்கு மியூசிக்கை கேட்டாலும் என்னால் என்னைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்று பதிலளித்தேன்" என மண்டல் தெரிவித்திருக்கிறார்.
மண்டல் திருமண நிகழ்ச்சியில் ஆடுவது இது முதல் முறை கிடையாது. கடந்த பிப்ரவரி மாதமும் இதே போன்று திருமண நிகழ்ச்சியில் ஆடினார். அதோடு கடந்த ஆண்டு ரயில் பயணத்தின்போது மண்டல் டவுசர் அணிந்து கொண்டு ரயிலில் நடமாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
