Published:Updated:

`அரசு நிலத்தை ஆக்கிரமித்து மணல் எடுத்த தி.மு.க நிர்வாகி கைது!' ஒரத்தநாடு டி.எஸ்.பி அதிரடி!

கைதுசெய்யப்பட்ட தி.மு.க நிர்வாகி
கைதுசெய்யப்பட்ட தி.மு.க நிர்வாகி

அரசு நிலத்தை ஆக்கிரமித்து, விதிக்குப் புறம்பாக தன்னுடைய சொந்தப் பயன்பாட்டுக்காக தி.மு.க நிர்வாகியான நாதன் செல்வராஜ், 20 லோடு மணல் எடுத்திருக்கிறார். இது தொடர்பாக நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரத்தநாடு பகுதியில், அரசுக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்த தி.மு.க நிர்வாகி உட்பட நான்கு பேரைக் போலீஸார் கைதுசெய்தனர். மேலும் மணல் எடுக்க பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர் ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளனர். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள்
கைது செய்யப்பட்டவர்கள்

தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கண்ணத்தங்குடி, மேலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாதன் செல்வராஜ் தி.மு.க-வில் ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினராக இருக்கிறர். இவர் தனக்குச் சொந்தமான விவசாயம் நிலம் அருகேயுள்ள மூரியன் குட்டை எனப்படும் குளத்துக்குச் சொந்தமான அரசு புறம்போக்கு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வைத்திருந்ததாகச் சொல்லப்படுகிறது.

அத்துடன் அந்த இடத்தில் ஜே.சி.பி மூலம் மணல் எடுத்து டிராக்டர் மூலம் கொண்டு செல்வதாக ஒரத்தநாடு டி.எஸ்.பி சுனிலுக்கு புகார் சென்றுள்ளது. இதையடுத்து டி.எஸ்.பி சுனில் நேரில் சென்று ``அரசு இடத்தில் மணல் எடுக்க உரிய அனுமதி பெற்றிருக்கிறீர்களா?’’ எனக் கேட்டுள்ளார். அதற்கு நாதன் செல்வராஜ், "இடம் என்னுடையது. நான் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை" என வாக்குவாதம் செய்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து டி.எஸ்.பி சுனில், தாசில்தார் சீமானுக்குத் தகவல் கொடுத்தார். பின்னர் சீமான், வி.ஏ.ஓ சுபாஷினி, சர்வேயர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குறிப்பிட்ட இடத்தை அளந்தனர். இதில் நாதன் செல்வராஜ் அரசு இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மணல் எடுத்தது தெரியவந்தது. இதையடுத்து நாதன் செல்வராஜ், டிராக்டர் உரிமையாளர் கண்ணத்தங்குடி கீழையூரைச் சேர்ந்த ராஜாங்கம், ஆண்டி நத்தம் காட்டைச் சேர்ந்த டிராக்டர் டிரைவர் பிரபு, பூவாத்தூர் மேலத் தெருவை சேர்ந்த ஜே.சி.பி டிரைவர் ராமசந்திரன், ஜே.சி.பி உரிமையாளர் கண்ணுக்குடியைச் சேர்ந்த அப்பாத்துரை ஆகிய ஐந்து பேர் மீதும் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.

இதில் அப்பாத்துரை தலைமறைவான நிலையில் மற்ற நான்கு பேரையும் போலீஸார் கைதுசெய்து தஞ்சை சிறையில் அடைத்தனர். அப்பாத்துரை தி.மு.க-வில் ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினராக இருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மணல் எடுக்கப் பயன்படுத்திய ஜே.சி.பி இயந்திரம், டிராக்டர், டிப்பர் ஆகியவற்றையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.

டி.எஸ்.பி சுனில்
டி.எஸ்.பி சுனில்
``இனி தி.மு.க Vs பா.ஜ.க-தான்...'' வேகமெடுக்கும் அண்ணாமலை; அ.தி.மு.க-வைப் பின்னுக்குத் தள்ள முடியுமா?

இந்தச் சம்பவம் குறித்து தகவலறிந்த சிலரிடம் பேசினோம். "நாதன் செல்வராஜ் அரசுக்குச் சொந்தமான இடத்தில் மீன்குட்டை அமைப்பதற்காக ஜே.சி.பி இயந்திரம் மூலம் மணல் எடுத்து டிராக்டர் மூலம் வெளியே கொண்டு சென்றார். இது தொடர்பாக புகார் வந்ததையடுத்து டி.எஸ்.பி விசாரணை மேற்கொண்டார். அது தன்னுடைய நிலம் என நாதன் செல்வராஜ் கூறியுள்ளார். மேற்கொண்டு நடைபெற்ற விசாரணையில் அந்தக் குறிப்பிட்ட இடம் அரசுக்குச் சொந்தமானது என்பது உறுதி செய்யப்பட்ட பிறகு அவர்கள்மீது வழக்கு பதிவு செய்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நாதன் செல்வராஜ், அப்பாத்துரை ஆகியோர் தி.மு.க-வில் முக்கியப் பொறுப்பில் உள்ளவர்கள். ராஜாங்கம் அ.தி.மு.க-வில் இருக்கிறார். இவர் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கத்தின் ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அரசு இடத்தில் மணல் எடுத்த நாதன் செல்வராஜைக் காப்பாற்ற மாவட்ட பொறுப்பில் உள்ள தி.மு.க-வினர் மெனக்கெட்டுள்ளனர்.

ஆனால் அதை ஏற்காத டி.எஸ்.பி சுனில், "என் கண் முன்னாடி தப்பு செஞ்சுருக்காங்க. அவங்களை எப்படி விடுவது" எனக் கேட்டு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்திருக்கிறார். மேலும் டி.எஸ்.பி சுனில் சட்டத்துக்குப் புறம்பாக டாஸ்மாக் பார் நடத்துவதையும் தடுத்து வருகிறார். இதைத் தொடர்ந்து ஒரத்தநாடு தி.மு.க நிர்வாகிகள் சிலர் டி.எஸ்.பி சுனிலை மாற்றச் சொல்லி எம்.எல்.ஏ-க்கள், மாவட்ட பொறுப்பில் உள்ள முக்கியப் பொறுப்பாளர்களிடம் அழுத்தம் கொடுத்துவருவதாகவும் சொல்லப்படுகிறது. முக்கிய நிர்வாகி ஒருவரும் இதற்காக மேலிடத்தில் பேசியிருப்பதாகச் சொல்கிறார்கள்’’ என்றனர்.

டி.எஸ்.பி சுனிலிடம் பேசினோம். "அரசு இடத்தை ஆக்கிரமித்து, விதிக்குப் புறம்பாக தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்காக நாதன் செல்வராஜ் இருபது லோடு மணல் எடுத்திருக்கிறார். இது தொடர்பாக நான்கு பேரைக் கைதுசெய்திருக்கிறோம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு