Published:Updated:

``யாரையோ திருப்திப்படுத்த நினைக்கிறது புதுச்சேரி அரசு”- 24 மணி நேர கடைகள் திறப்பை எதிர்க்கும் அதிமுக

புதுச்சேரி - அதிமுக

”புதுச்சேரியில் கடந்தகாலங்களில் இரவு 12 மணி வரை சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முடியாததால்தான் 10 மணியுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில்...”

``யாரையோ திருப்திப்படுத்த நினைக்கிறது புதுச்சேரி அரசு”- 24 மணி நேர கடைகள் திறப்பை எதிர்க்கும் அதிமுக

”புதுச்சேரியில் கடந்தகாலங்களில் இரவு 12 மணி வரை சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற முடியாததால்தான் 10 மணியுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்நிலையில்...”

Published:Updated:
புதுச்சேரி - அதிமுக

புதுச்சேரியில் `பத்து பணியாளர்களுக்கும் மேற்பட்டவர்களைக்கொண்ட கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் செயல்படலாம்’ என அந்த மாநில அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அ.தி.மு.க எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. இது குறித்து புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளரும், முன்னாள் சட்டமன்றக் கட்சித் தலைவருமான அன்பழகன் இன்று வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்திய தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்று, புதுச்சேரி மாநிலத்தில் 24 மணி நேரமும் வர்த்தக வியாபார நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளித்திருப்பது தவறான ஒன்றாகும்.

10-க்கும் மேற்பட்டோர் பணிபுரியும் வர்த்தக, வியாபாரக் கடை நிறுவனங்கள், மதுபான ரெஸ்டாரன்ட்டுகள், ஹோட்டல்கள், ஸ்பா, மால்கள், மசாஜ் சென்டர்கள், பப்-பார்கள் நடைபெறும் ஹோட்டல்கள் உள்ளிட்ட எதுவாக இருந்தாலும் இரவு முழுவதும் திறந்திருக்க அனுமதி வழங்கியிருக்கிறது. முதலில் இந்திய தொழில் கூட்டமைப்பு என்றால் என்ன...  அது மத்திய அரசின் தொழில்துறை சார்ந்ததா... மத்திய, மாநில அரசுகளுக்கு சம்பந்தம் இல்லாத ஓர் அங்கமான இந்திய தொழில் கூட்டமைப்பின் கோரிக்கையை நாம் ஏற்கவேண்டிய அவசியம் என்ன... புதிதாக மக்களை பாதிக்கக்கூடிய பொதுவான எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்துவதற்கு முன்பு பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பது என்பது சட்டத்துக்கு உட்பட்டதாகும். இது சம்பந்தமாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டனவா?

முதலில் இரவு நேரம் இது போன்ற கடைகள் திறப்பதற்குச் சட்டம்-ஒழுங்கு காவல்துறையின் அனுமதி கேட்கப்பட்டதா... கடந்தகாலங்களில் இரவு 12 மணி வரை காவல்துறையினரால் சட்டம்-ஒழுங்கைக் காப்பற்ற முடியாததால்தான் 10 மணியுடன் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. இந்த நிலையில் இரவு முழுவதும் கடைகள் திறக்கப்பட்டால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட நம்மிடம் போதுமான காவலர்கள் இருக்கிறார்களா... இப்போது பணிச்சுமையுடன் பணிபுரியும் காவல்துறையினர், வெளி மாநிலத்தவர்களின் சந்தோஷத்துக்காகக் கொண்டுவரப்பட்டிருக்கும் இந்தச் சட்டத்துக்காக துன்பத்துக்கு ஆளாக வேண்டுமா?

தினசரி உருவாகும் குப்பைகளை இரவு நேரத்தில்தான், தூய்மைப் பணியாளர்கள் சுத்தம் செய்துவருகிறார்கள். இரவு முழுவதும் கடைகள் திறந்திருந்தால் அவர்கள் எப்படித் துப்புரவு பணி செய்ய முடியும். இந்த உத்தரவால் நிச்சயம் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவு ஏற்படும். யார் யாரையோ திருப்திப்படுத்த இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. ஆன்மிக பூமியான புதுச்சேரி மாநிலம், இது போன்ற தவறான நிலைபாட்டால் அழிவுப்பாதைக்குச் சென்றுவிடும். எதிர்கால இளைஞர்களின் ஒரு தலைமுறையை நாம் வீணடிப்பதைப் போன்று அமைந்துவிடும். எனவே, முழு இரவு நேரக் கடைகள் திறப்பு சம்பந்தமாக தொழில்துறையின் இந்த உத்தரவை, முதலமைச்சர் அவர்கள் மாநிலத்தின் எதிர்கால நலன் கருதி உடனடியாக ரத்துசெய்ய வேண்டும்” என்று தெரிவித்திருக்கிறார்.