Published:Updated:

பட்டுக்கோட்டை: வைத்திலிங்கம் வழக்கு; விசாரித்த போலீஸ்; தலைமறைவான அதிமுக பிரமுகர்?! - நடந்தது என்ன?

கல்யாண ஓடை துரை.செந்தில்
கல்யாண ஓடை துரை.செந்தில்

அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் மதுக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்த துரை.செந்தில். இவரின் மனைவி அமுதா செந்தில் மதுக்கூர் ஒன்றிய சேர்மனாக இருக்கிறார்.

பட்டுக்கோட்டை அருகே அ.தி.மு.க பிரமுகர் ஒருவரை விசாரணை என்ற பெயரில் அழைத்து போலீஸ் கைதுசெய்ததாகவும், அவர் தன் ஆதரவாளர்களைத் திரளவைத்து சலசலப்பை ஏற்படுத்தி, தப்பித்து தலைமறைவாகிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தநிலையில், கடந்த வருடம் நடைபெற்ற அரசு நிகழ்ச்சி ஒன்றில் அ.தி.மு.க துணை ஒருங்கிணைப்பாளரான வைத்திலிங்கத்தை ஒருவர் தகாத வார்த்தைகளால் திட்டினார். அந்த வழக்குக்காகவே தலைமறைவான அ.தி.மு.க பிரமுகரைக் கைதுசெய்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வைத்திலிங்கத்துடன் செந்தில்
வைத்திலிங்கத்துடன் செந்தில்

அ.தி.மு.க-வில் தஞ்சாவூர் தெற்கு மாவட்டத்தில் மதுக்கூர் கிழக்கு ஒன்றியச் செயலாளராக இருப்பவர் கல்யாண ஓடை கிராமத்தைச் சேர்ந்த துரை.செந்தில். இவருடைய மனைவி அமுதா செந்தில் மதுக்கூர் ஒன்றிய சேர்மனாக இருக்கிறார். துரை.செந்தில் செல்வாக்குள்ள நபராகத் திகழ்வதால், அவர் மனைவி தொடர்ந்து மூன்றாவது முறையாக மதுக்கூர் ஒன்றிய சேர்மனாக இருந்துவருவது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் மதுக்கூர் போலீஸார் நேற்று செந்திலை விசாரணை என்ற பெயரில் வரவழைத்துக் கைதுசெய்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து மூன்று மணி நேரத்துக்கு மேலாக போலீஸ் ஸ்டேஷனிலேயே உட்காரவைத்திருக்கிறார்கள். இதையறிந்த செந்தில் ஆதரவாளர்களான 500-க்கும் மேற்பட்டவர்கள் போலீஸ் ஸ்டேஷன் முன் திரண்டனர். அப்போது ஒருவர் தீக்குளிக்க முயன்றார். இந்தநிலையில் ஸ்டேஷனைவிட்டு வெளியே வந்த செந்தில், காரில் புறப்பட்டுச் சென்றுவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து செந்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, ``போலீஸார் பொய் வழக்கு பதிவு செய்து என்னைக் கைதுசெய்யப் பார்த்தனர். இது தொடர்பாக நான் போலீஸிடம் கேட்டதற்கு முறையான பதில் இல்லை. இந்தத் தகவல் எனது ஆதரவாளர்களுக்குத் தெரிந்து ஸ்டேஷன் முன்பு திரண்டதுடன் தீக்குளிக்கவும் முயன்றனர்.

வைத்திலிங்கம் கார் முன்பு செந்தில்
வைத்திலிங்கம் கார் முன்பு செந்தில்

இதையடுத்தே போலீஸ் என்னை விடுவித்தனர். பட்டுக்கோட்டை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷ் பொய் வழக்கு பதிந்து என்னை மிரட்டுகிறார்" எனத் தெரிவித்தார். அதன் பிறகு செந்தில் எங்கே போனார், எங்கிருக்கிறார் என யாருக்கும் தெரியவில்லை. அவருடைய வீட்டின் முன் மூன்றுக்கும் மேற்பட்ட போலீஸ் நிறுத்தப்பட்டுள்ளனர். செந்திலைத் தேடி யார் வந்து எங்கே செந்தில் எனக் கேட்டாலும், ``உங்களுக்குத் தெரிஞ்சா சொல்லுங்க. நாங்க அவருக்காகத்தான் இங்கே வெயிட் பண்றோம்" என போலீஸ் கூறுகின்றனர். இந்தநிலையில் செந்திலுக்கு ஆதரவாக போலீஸ் ஸ்டேஷன் முன்பு திரண்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து 15 பேரைக் கைதுசெய்திருக்கிறது போலீஸ். மேலும் தலைமறைவாகியுள்ள செந்திலையும் தேடிவருகிறது. இந்தச் சம்பவம் தஞ்சை தெற்கு மாவட்ட அ.தி.மு.க-வில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து தகவலறிந்தவர்கள் சிலரிடம் பேசினோம். ``மதுக்கூர் போலீஸார் விசாரணை ஒன்றுக்காக ஸ்டேஷன் வரைக்கும் வருமாறு சொல்லி செந்திலை அழைத்துள்ளனர். அங்கு `கொலை வழக்கு ஒன்றில் நீங்கள் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தகவல் வந்துள்ளது’ எனக் கூறி நீண்ட நேரம் உட்காரவைத்துள்ளனர். கோபமடைந்த செந்தில், `நான் வந்து மூன்று மணி நேரத்துக்கு மேல ஆகுது. என்னை ஏன் இங்கே இருக்கவெச்சிருக்கீங்க’ என்று கேட்டுவிட்டு வெளியே வந்து யாரோ ஒருவருக்கு போன் செய்தார்.

அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்
அ.தி.மு.க ஆட்சியில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில்

அதன் பிறகு அவருடைய ஆதரவாளர்கள் ஸ்டேஷன் முன்பு திரண்டனர். அவர்கள் `காரணம் இல்லாமல் விசாரணை என்ற பெயரில் அழைத்து ஏன் அவரை உள்ளேவெச்சிருக்கீங்க... அரசியல் உள்நோக்கத்துடன் போலீஸ் இதைச் செய்கிறது’ எனக் கூறி கோஷமிட்டனர். மதுக்கூர் பகுதியில் சமீபத்தில் மர்மமான சம்பவங்கள் சில நடைபெற்றுவருகின்றன. செந்திலின் மனைவியான சேர்மன் அமுதா கடந்த வாரம் மதுக்கூரில் கூல்டிரிங்ஸ் வாங்குவதற்காக காரை நிறுத்தியிருக்கிறார்.

அப்போது அமுதா வந்த காரை மர்ம நபர்கள் சிலர் வேறு ஒரு காரிலிருந்து நோட்டமிட்டதாகத் தெரிகிறது. அப்போது அந்த வழியாக மஃப்டியில் வந்த போலீஸ் அந்த கும்பலை வளைத்ததாகக் கூறப்படுகிறது. செந்தில் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் பேசப்பட்டுவந்தது. இதைத் தொடர்ந்து செந்திலை போலீஸ் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். அதன் பிறகு என்ன நடக்கிறது, எதற்காக போலீஸ் அவரைக் கைதுசெய்தனர், அவர் ஏன் தலைமறைவாகிவிட்டார் என எதுவும் புரியவில்லை’’ என்றனர்.

நடந்தது என்ன என்பதைத் தெரிந்துகொள்ள பட்டுக்கோட்டை டி.எஸ்.பி புகழேந்தி கணேஷிடம் பேசினோம். ``பழைய வழக்கு ஒன்றில் செந்திலைக் கைதுசெய்தோம். ஆனால் அவர் கலவரம் உண்டாக்குவதுபோல் டிராமா செய்து தப்பித்துவிட்டார். இது தொடர்பாக 15 பேரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். தலைமறைவான செந்திலைத் தேடிக்கொண்டிருக்கிறோம்" என்றார். இந்தச் சம்பவத்தில் தலைமறைவாக இருப்பதாகச் சொல்லப்படும் துரை.செந்திலைத் தொடர்புகொள்ள முயன்றோம். அவரது அலைபேசி எண் 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது.

அடுத்த கட்டுரைக்கு