Published:Updated:

தொகுதியில் கல்லூரி வேண்டும்! தொடரும் போஸ்டர் சண்டை; என்ன சொல்கிறார் எம்.எல்.ஏ?!

நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாகச் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறேன். சட்டமன்றத்தில் எனது வேலையைச் செய்தேன். ஆனால், செயல்படுத்தவேண்டிய இடத்திலிருந்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் கடந்த 2021 தேர்தலின்போதே, தொகுதிக்குள் சட்டக் கல்லூரி, விவசாயக் கல்லூரி கொண்டுவர வேண்டும் எனப் பொதுமக்களிடம் வலுவான கோரிக்கை எழுந்தது. அப்போது, பிரசாரத்துக்குச் சென்ற தற்போதைய சிவகங்கை சட்டமன்றத் தொகுதி எம்.எல்.ஏ செந்தில்நாதனிடம் தொகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். காரைக்குடியில் சட்டக் கல்லூரியும், திருப்பத்தூர் சுற்றுவட்டாரத்தில் கானாடுகாத்தான் அருகே விவசாயக் கல்லூரியும் அமைக்கவிருப்பதாக இருந்தது. இது தொடர்பான போஸ்டர் சண்டை விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த இளைஞர் அமைப்பு ஏ.ஐ.ஒய்.எஃப்பும், தொழில்சார் அமைப்பான ஏ.ஐ.டி.யூ.சி அமைப்பும் இணைந்து சிவகங்கை பகுதி முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டின.

போஸ்டர் சண்டை
போஸ்டர் சண்டை
`அதே கடை, அதே டெய்லர், அதே வாடகை!’ - திமுக Vs அதிமுக-வின் போஸ்டர் வார் அன்றும் இன்றும்

அதில், `மாவட்டத் தலைநகர் சிவகங்கையில் அமையவேண்டிய சட்டக் கல்லூரியைக் காரைக்குடிக்குத் தாரை வார்த்துக்கொடுத்த, சட்டமன்றத்தில் குரல் கொடுக்காமல் மௌனம் காத்து சிவகங்கை மக்களுக்குத் துரோகம் செய்யும் சட்டமன்ற உறுப்பினர் செந்தில்நாதனை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர். இந்த நோட்டீஸுக்கு எதிராக அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. அதில் `(வன்மையாகக் கண்டிக்கிறோம்.) மாவட்ட தலைநகர் சிவகங்கையில் சட்டக் கல்லூரியும் வேளாண்மைக் கல்லூரியும் அமைக்க வேண்டும் என்று சட்டமன்றத்தில் சிவகங்கை சட்டமன்ற உறுப்பினர் திரு பி.ஆர்.செந்தில்நாதன் அவர்கள் வலியுறுத்திய பிறகும், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஒரு கல்லூரியைக்கூட சிவகங்கை தொகுதிக்கு ஒதுக்கீடு செய்யாமல் புறக்கணித்த உங்கள் கூட்டணி தி.மு.க அரசைக் கண்டிக்கத் துப்பில்லாமல், குரல் கொடுத்த சட்டமன்ற உறுப்பினர்மீது அவதூறு செய்யும் ஏ.ஐ.யூ.எஃப் மற்றும் ஏ.ஐ.டி.யூ.சி-யை வன்மையாகக் கண்டிக்கிறோம்’ என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், தற்போதைய சிவகங்கை எம்.பி கார்த்திக் சிதம்பரம் திமுக தலைமைக்குக் கொடுத்த நெருக்கடியால்தான் காரைக்குடியை மையமாகவைத்து இந்தக் கல்லூரிகள் அறிவிப்பு வெளியிட்டதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையேதான் அ.ம.மு.க சார்பில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. அதில், `தமிழக அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்..! தமிழக அரசுக்குத் துணைபோகும் சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினரை வன்மையாகக் கண்டிக்கிறோம். அரசு வேளாண் கல்லூரி காரைக்குடிக்கே... சட்டக் கல்லூரி காரைக்குடிக்கே... சிவகங்கை மாவட்ட தலைநகரும் காரைக்குடிக்கேவா? புறக்கணிக்காதே... புறக்கணிக்காதே, கொண்டுவா... கொண்டு வா... இந்த இரண்டையும் சிவகங்கைக்குக் கொண்டுவா...’ என்று ஒட்டப்பட்டிருக்கிறது.

இப்படி சிவகங்கைத் தொகுதிக்குள் தொழில் சார்ந்த கல்லூரிகள் அமையாததற்கு அந்தப் பகுதி மக்களிடையேயும் கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

செந்தில்நாதன்
செந்தில்நாதன்

இது பற்றி சிவகங்கை எம்.எல்.ஏ செந்தில்நாதனிடம் கேட்டபோது,

``சட்டமன்றத்தில் எனது தொகுதியான சிவகங்கையில் சட்டக் கல்லூரியும், வேளாண் கல்லூரியும் அமைக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததோடு கோரிக்கையும் வைத்தேன். அதோடு, மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்ஸிங், பார்மஸி படிப்புகளும் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் வைத்தேன். காரைக்குடியை மையமாகவைத்து இரண்டு கல்லூரிகளும் அமைக்க அறிவிப்பு வெளியிட்டுவிட்டனர். சிவகங்கை தொகுதிக்குள் கொண்டுவராதது எனக்கும், என் தொகுதி மக்களுக்கும் மிகப்பெரிய வருத்தம். நான் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாகச் சொல்லவேண்டிய இடத்தில் இருக்கிறேன். சட்டமன்றத்தில் எனது வேலையைச் செய்தேன். ஆனால், செயல்படுத்தவேண்டிய இடத்திலிருந்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள்" என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு