Published:Updated:

அதிமுக பிரமுகர்மீது தாக்குதல்: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட நிர்வாகிகள்!

மறுநாள் காலை தனது வீட்டிலிருந்து காரில் வெளியில் கிளம்பிய வழக்கறிஞர் சுரேஷ்குமாரை, சிலர் வழிமறித்து தாக்கியதாக சொல்லப்படுகிறது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்த அதிமுக பிரமுகரும், பிரபல வழக்கறிஞருமான சுரேஷ்குமார்மீது அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தினார்கள். இது தொடர்பாக ஆறு பேர் மீது காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், அவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை எனக் கொந்தளித்த அந்தப் பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அதிமுக-வினர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

காவல் நிலையம் முற்றுகை
காவல் நிலையம் முற்றுகை

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள பள்ளங்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வழக்கறிஞர் சுரேஷ்குமார். அ.தி.மு.க வழக்கறிஞர் அணியின் திருவாரூர் மாவட்ட இணைச் செயலாளராகப் பதவி வகித்துவரும் இவர், 2021- சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க சார்பில் திருத்துறைப்பூண்டி தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். பள்ளங்கோவில் பகுதியிலுள்ள புறம்போக்கு இடத்தில் அந்தப் பகுதியைச் சேர்ந்த சிலர், சட்டவிரோதமாக போர்வெல் அமைத்து, தண்ணீர் எடுத்து லாரிகளில் விற்பனை செய்துவருவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. சட்டவிரோதமாகத் தண்ணீர் கொண்டு வரப்பட்ட லாரியை வழக்கறிஞர் சுரேஷ்குமாரும், அந்தப் பகுதியைச் சேர்ந்த அதிமுக-வினர் சிலரும் சிறைப்பிடித்து லாரி முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அங்கு விரைந்த திருத்துறைப்பூண்டி நகர காவல்துறை துணை கண்காணிப்பாளர் சோமசுந்தரம், ஆய்வாளர் கழனியப்பன், உதவி ஆய்வாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்டோர், சுரேஷ்குமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருக்கிறார்கள். பிறகு வழக்கறிஞர் சுரேஷ்குமார் உள்ளிட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றிருக்கிறார்கள்.

இந்தநிலையில், மறுநாள் காலை தனது வீட்டிலிருந்து காரில் கிளம்பிய வழக்கறிஞர் சுரேஷ்குமாரை, சிலர் வழிமறித்துத் தாக்கியதாகச் சொல்லப்படுகிறது. தன்னைத் தாக்கியவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கோரி, திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அதைத் தொடர்ந்து, தயாளன், உமா உள்ளிட்ட ஆறு பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

வேலூர்: அதிமுக நிர்வாகி அலுவலகம் எரிப்பு; ரூ.200 கோடி ஆவணம் சாம்பல்! - நில விவகாரம் காரணமா?!
சுரேஷ்குமார்
சுரேஷ்குமார்

ஆனால் அவர்களில் ஒருவர்கூட கைதுசெய்யப்படவில்லை என அதிமுக-வினர் குற்றம்சாட்டுகிறார்கள். வழக்கறிஞர் சுரேஷ்குமார் மீதான தாக்குதலைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரியும் அ.தி.மு.க-வைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் செல்லபாண்டியன், வெற்றிச்செல்வன், திருத்துறைப்பூண்டி அ.தி.மு.க நகரச் செயலாளர் சண்முகசுந்தரம், திருத்துறைப்பூண்டி நகர பொருளாளர் ராஜா, வடக்கு ஒன்றியச் செயலாளர் பாலகிருஷ்ணன், தெற்கு ஒன்றியச் செயலாளர் சிங்காரவேலு, ஒன்றியப் பொருளாளர் குமார், ஜெயலலிதா பேரவை ஒன்றியச் செயலாளர் சீராளன் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் திருத்துறைப்பூண்டி காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். சுரேஷ்குமார் மீது தாக்குதல் நடத்தியவர்களைக் கைதுசெய்ய வலியுறுத்தி, செப்டம்பர் 23-ந் தேதி திருத்துறைப்பூண்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக-வினர் ஆயத்தமாகிவருகிறார்கள்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு