Published:Updated:

கூலித் தொழிலாளர் மரணம்: ’இது தொடரக் கூடாது’ முதல்வருக்கு எம்எல்ஏ-வின் உருக்கமான வேண்டுகோள்

திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் இது போன்ற சேதமடைந்த நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. பருவமழை காரணமாக இந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் இருக்கிறது.

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயக் கூலித் தொழிலாளர் மரணமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தச் சம்பவம் குறித்து தமிழக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, திருத்துறைப்பூண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து உருக்கமான கோரிக்கை ஒன்றை முன்வைத்திருக்கிறார்.

இறந்து போன   மாரிமுத்து
இறந்து போன மாரிமுத்து

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகிலுள்ள குலமாணிக்கம் தென்பாதி கிராமத்தில் வசித்துவந்த வயோதிகத் தம்பதியர் மாரிமுத்து - சுந்தரம்பாள். 70 வயதான மாரிமுத்து விவசாயக் கூலி வேலைக்குச் சென்று தன் குடும்பத்தைக் காப்பாற்றிவந்திருக்கிறார். இவரும், இவரின் மனைவி சுந்தரம்பாளும் தங்களது கூரை வீட்டில் இரவு தூங்கிக்கொண்டிருந்தனர்.

இவர்களுக்குப் பக்கத்து வீட்டில் வசித்துவந்தவர் அருமைக்கண்ணு. தொடர் கனமழையால் அருமைக்கண்ணு வீட்டின் மண்சுவர் இடிந்து மாரிமுத்துவின் குடிசை வீட்டின்மீது விழுந்திருக்கிறது. இதனால் மாரிமுத்து வீட்டின் மண் சுவரும் இடிந்து விழுந்தது. இதனால் இடிபாடுகளுக்குள் மாரிமுத்துவும் இவரின் மனைவி சுந்தரம்பாளும் சிக்கிக்கொண்டு மிகவும் ஆபத்தான நிலையில் உயிருக்குப் போராடியிருக்கிறார்கள்.

கரூர்: தொடரும் கந்துவட்டிக் கொடுமை?! - கொடூரமாகத் தாக்கப்பட்ட கூலித் தொழிலாளி
மாரிமுத்து எம்.எல்.ஏ
மாரிமுத்து எம்.எல்.ஏ

அக்கம் பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், இடிபாடுகளை அகற்றி, படுகாயமடைந்த நிலையில் கிடந்த இருவரையும் மீட்டு, உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருக்கிறார்கள். ஆனால், மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே மாரிமுத்து இறந்துவிட்டார். சுந்தரம்பாளுக்கு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.

 திருத்துறைப்பூண்டி
திருத்துறைப்பூண்டி

இந்தத் துயரச் சம்பவத்தை அறிந்த திருத்துறைப்பூண்டித் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுந்தரம்பாளை சந்தித்து ஆறுதல் கூறியதோடு, இறந்துபோன கூலித் தொழிலாளரான மாரிமுத்துவின் இடிந்த வீட்டை பார்வையிட்டார். இது தொடர்பாகத் தமிழக முதலமைச்சர் மு,க.ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள எம்.எல்.ஏ மாரிமுத்து ``வீடு இடிந்து விழுந்து இறந்த கூலித் தொழிலாளி மாரிமுத்துவின் குடும்பத்துக்கு முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவரும் சுந்தரம்பாளின் மருத்துவச் செலவு முழுவதையும் அரசு ஏற்க வேண்டும். இறந்துபோன கூலித் தொழிலாளர் மாரிமுத்துவின் குடும்பத்துக்கு அரசு வீடு கட்டும் திட்டத்தின்கீழ் உடனடியாக புதிய வீடு வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ எனத் தெரிவித்ததோடு. ``திருத்துறைப்பூண்டி தொகுதி முழுவதும் இது போன்ற சேதமடைந்த நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. பருவமழை காரணமாக இந்த வீடுகள் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் இருக்கிறது. தமிழக அரசு இதில் உரிய கவனம் செலுத்தி, கணக்கெடுப்பு நடத்தி, புதிதாக கான்கிரீட் வீடுகளைக் கட்டித்தர உடனடியாக நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்" எனத் தெரிவித்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு