Published:Updated:

`சின்மயானந்த் மற்றும் செங்காரிடம் பெண்கள் கவனத்துடன் இருங்கள்' - உ.பி-யில் உச்சம் தொட்ட பேனர் வார்!

சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் பேனர் அருகே முளைத்த பேனர்
சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் பேனர் அருகே முளைத்த பேனர்

உத்தரப்பிரதேசத்தில் சி.ஏ.ஏ பேராட்டக்காரர்கள் குறித்த பேனர்கள் அருகே திடீரென, வேறு சில பேனர்கள் முளைத்துள்ளன. அதில், இடம் பெற்றிருந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் முக்கியத் தலைகள். பாலியல் குற்றம் புரிந்தவர்கள். அந்தக் கட்சியால் நீக்கப்பட்டவர்கள்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டத்தின்போது, வன்முறை வெடித்தது. லக்னோ உள்ளிட்ட பல நகரங்களில் நிகழ்ந்த வன்முறையில் 22 பேர் உயிரிழந்தனர். பொதுச் சொத்துகளும் சேதப்படுத்தப்பட்டன. ``பொதுச்சொத்துகளைச் சேதப்படுத்துபவர்களிடத்திலிருந்து நஷ்டஈடு வசூலிக்கப்படும்'' என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அறிவித்திருந்தார். பல முஸ்லிம் அமைப்புகள் தாங்களே முன்வந்து நஷ்டஈடு அளித்தன. இதற்கிடையே, பொதுச் சொத்துகளை சேதப்படுத்திவர்களின் புகைப்படம், விலாசம் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய பேனர்கள் திடீரென்று லக்னோவில் பல இடங்களில் வைக்கப்பட்டன. `நஷ்ட ஈடு செலுத்தவில்லையென்றால், உங்கள் சொத்துகள் பறிக்கப்படும்' என்றும் அந்த பேனர் எச்சரித்தது.

சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம்
சி.ஏ.ஏ வுக்கு எதிரான போராட்டம்

இதனால், பொதுமக்களிடத்தில் அதிர்ச்சி ஏற்பட்டது. லக்னோ மாவட்ட நிர்வாகம் தரப்பில் வைக்கப்பட்ட இந்த பேனரில் 57 பேரின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன. உத்தரப்பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தச் சம்பவம் குறித்து அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கு பதிவுசெய்தது. அந்த வழக்கு குறித்த தீர்ப்பில், `சொந்த மக்களை மாநில அரசு அவமதித்துள்ளது. தனிநபர் சுதந்திரத்தில் மாநில அரசு தலையிடுகிறது. உடனடியாக பேனர்களை அகற்றி விட வேண்டும்'' என்று உ.பி அரசுக்கு அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத உத்தரப்பிரதேச அரசு தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. பேனர்களை அகற்றவும் மறுத்துவிட்டது யோகி ஆதித்யநாத் அரசு.

இதற்கிடையே, உத்தரப்பிரதேசத்தில் சி.ஏ.ஏ பேராட்டக்காரர்கள் குறித்து வைக்கப்பட்டிருந்த பேனர்கள் அருகே திடீரென்று வேறு சில பேனர்கள் முளைத்துள்ளன. அவற்றில் பாலியல் வழக்கில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைபட்டுக் கிடக்கும் உன்னாவ் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ குல்தீப் செங்கார் மற்றும் சட்டக் கல்லூரி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் சிறை சென்ற முன்னாள் மத்திய இணை அமைச்சரும் சாமியாருமான சின்மயானந்த் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன.

`இவர்கள் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள். இவர்களிடத்தில் பெண்களே கவனத்துடன் இருங்கள்' என்ற வாசகமும் பேனர்களில் இடம் பெற்றுள்ளது. இந்த இருவரும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதால், அந்தக் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர்கள். சமாஜ்வாடி கட்சித் தலைவர் சிங் என்பவர் இந்த பேனர்களை வைத்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்துடன் செங்கார்
யோகி ஆதித்யநாத்துடன் செங்கார்

இது குறித்து சிங் கூறுகையில் ``குற்றவாளிகளுக்கு தனிநபர் சுதந்திரம் இல்லையென்று பா.ஜ.க நினைக்கிறது. பாரதிய ஜனதா கட்சி காட்டிய வழியை மட்டுமே நானும் தேர்வு செய்து சின்மயானந்த், செங்கார் போன்ற குற்றவாளிகளின் புகைப்படங்களை பேனராக வைத்துள்ளேன்'' என்று சொல்கிறார். இதில், கூத்து என்னவென்றால் சிங் வைத்த பேனர்களையெல்லாம் உடனடியாக, லக்னோ போலீஸார் அகற்றிவிட்டனர் என்பதுதான். அதே வேளையில், அலகாபாத் நீதிமன்றத்தின் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட போலீஸ் அதிகாரிகள் சி.ஏ.ஏ போராட்டக்காரர்கள் பேனர்களை அகற்றவில்லை. இந்த பேனர்களை திங்கள்கிழமைக்குள் அகற்ற வேண்டுமென்று அலகாபாத் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

சி.ஏ.ஏ போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தாராபுரியும் கைது செய்யப்பட்டார். நீதிமன்றத்தில் தாராபுரி வன்முறையில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், ஆதாரங்களைச் சமர்ப்பிக்க போலீஸால் முடியவில்லை. இதனால், நீதிமன்றம் தாராபுரிக்கு ஜாமீன் அளித்தது. தாராபுரியின் புகைப்படமும் பேனரில் இடம் பெற்றுள்ளது. இது குறித்து தாராபுரி கூறுகையில், ``அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமாக உத்தரப்பிரதேச அரசு செயல்படுகிறது. அரசின் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவேன்'' என்று எச்சரித்துள்ளார்.

ரஜினியின் `புது புரட்சி'... தலைவர்கள் எழுச்சியூட்டுபவர்களா...  காத்திருப்பவர்களா?

உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் உத்தரவின் பேரிலேயே இதுபோன்ற பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. இவரின் பிடிவாதம் காரணமாகவே, அலகாபாத் நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் உத்தரப்பிரதேச அரசு மேல் முறையீடு செய்துள்ளது.

எந்தச் சட்டத்தின் அடிப்படையில் மக்களின் தனிநபர் சார்ந்த தகவல்களை பேனர்களில் இடம்பெறச் செய்தீர்கள்
உச்சநீதிமன்றம் கேள்வி

உத்தரப்பிரதேச அரசின் மேல் முறையீடு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இரு நடுவர்கள் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ``மக்களை அவமதிக்கும் வகையில் பேனரை வைக்கும் உரிமையை உங்களுக்குக் கொடுத்தது யார்... எந்தச் சட்டத்தின் அடிப்படையில் தனிநபர் தகவல்கள் பேனர்களில் இடம் பெற்றது'' என்று நீதிபதிகள் உத்தரப்பிரதேச அரசைக் கடுமையாகச் சாடினார்கள்.

மேலும், ``வழக்கு விசாரணையை மார்ச் 16-ம் தேதிக்கு ஒத்தி வைக்கிறோம். அப்போது, இன்னும் பெரிய அமர்வு (அதாவது கூடுதல் நீதிபதிகள்) வழக்கை விசாரிக்கும்'' என்று தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கைப் பொறுத்தவரை, உச்சநீதிமன்றத்திலும் யோகி ஆதித்யநாத் அரசு வாங்கிக் கட்டும் என்றே அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு