Published:Updated:

கண்டா வரச் சொல்லுங்க... அவங்கள கையோட கூட்டி வாருங்க!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
கண்டா வரச் சொல்லுங்க... அவங்கள கையோட கூட்டி வாருங்க!
கண்டா வரச் சொல்லுங்க... அவங்கள கையோட கூட்டி வாருங்க!

‘நவரச நாயகன்’ என்று சினிமாவில் பெயரெடுத்த நடிகர் கார்த்திக்கையும் அரசியல் ஆசை விட்டுவைக்கவில்லை

பிரீமியம் ஸ்டோரி

திருவிழாக் காலங்களில் மட்டும் பார்க்க முடிகிற சில வித்தைக்காரர்களைப்போல, தேர்தல் திருவிழாக்களுக்கு மட்டும் வெளியே தலைகாட்டும் பல குட்டிக் கட்சிகள் தமிழக அரசியலில் இருக்கின்றன. தேர்தல் முடிந்ததும் அவை இருக்கும் இடமே தெரியாமல் காணாமல் போய்விடுகின்றன. அப்படிப்பட்ட சில கட்சிகளும், அதன் தலைவர்களும் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என ஒரு ரவுண்ட் வந்தோம்...

நாட் ரீச்சபிளில் நவரச நாயகன்!

‘நவரச நாயகன்’ என்று சினிமாவில் பெயரெடுத்த நடிகர் கார்த்திக்கையும் அரசியல் ஆசை விட்டுவைக்கவில்லை. 2006-ம் ஆண்டு ஃபார்வேர்டு பிளாக் கட்சியில் இணைந்த கார்த்திக், 2009-ல் அதிலிருந்து பிரிந்துவந்து ‘நாடாளும் மக்கள் கட்சி’-யைத் தொடங்கினார். அப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்தவர், படுதோல்வியடைந்து மீண்டும் சினிமாவுக்குப் போனார். 2018-ல் திடீர் ஞானோதயம் பிறக்கவே, இல்லாத கட்சியைக் கலைத்துவிட்டு, ‘மனித உரிமை காக்கும் கட்சி’ என்ற புதிய கட்சியைத் தொடங்கினார். 2021 தேர்தலில், அ.தி.மு.க-வை ஆதரிப்பதாக ஒருங்கிணைப்பாளர்களைச் சந்தித்துக் கடிதம் கொடுத்து, போட்டோவுக்கு போஸ் கொடுத்ததோடு சரி, மீண்டும் முடங்கிவிட்டார். அப்போதிருந்து இப்போது வரை மனிதர் நாட் ரீச்சபிள் மோடிலேயேதான் இருக்கிறார்!

கார்த்திக், சரத்குமார், கருணாஸ்
கார்த்திக், சரத்குமார், கருணாஸ்

வெள்ளித்திரையில் கணவர், சின்னத்திரையில் மனைவி... அப்ப கட்சியில?

2007-ல் கட்சி தொடங்கிய நடிகர் சரத்குமார், 2011-ல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க கூட்டணியில் நின்று வென்று எம்.எல்.ஏ ஆனார். 2014 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ஜ.க-வை ஆதரித்ததால், 2016-ல் ஜெயலலிதா கழற்றிவிட்டார். 2021 தேர்தலின்போது மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி அமைத்து 40 தொகுதிகளை அள்ளிச்சென்றார் சரத். ‘போட்டியிட ஆட்கள் இல்லை... இந்தாங்க நீங்களே வெச்சுக்கோங்க” என்று மூன்று தொகுதிகளை கமலிடமே திருப்பிக் கொடுத்ததுதான் அல்டிமேட் காமெடி. எந்தத் தொகுதியிலும் டெபாசிட்கூட பெறாததால், மறுபடியும் படத்தில் நடிக்க சரத் வெள்ளித்திரைக்குச் சென்றுவிட்டார். ‘சித்தி 2’-வில் நடிக்க ராதிகா மீண்டும் சின்னத்திரைக்குச் சென்றுவிட்டார். ‘அப்ப கட்சி?’ என்ற கேள்வியைக் கேட்கக்கூட ஆளில்லை!

‘காஸ்மோபாலிட்டன்’ கிளப் டு சாலிகிராமம்!

எதிர்பாராத சமயத்தில், எக்குத்தப்பாக ‘லக்’ அடித்த ஒருசில நபர்களில் ‘முக்குலத்தோர் புலிப்படை’ கட்சித் தலைவர் கருணாஸும் ஒருவர். சசிகலாவின் ஆசீர்வாதத்தால் மேலே வந்தார், எம்.எல்.ஏ ஆனார். ஐந்து ஆண்டுகள் போடாத ஆட்டம் போட்டார். யாராவது பிரச்னை என்று கருணாஸைப் பார்க்க விரும்பி கால் செய்தால், “காஸ்மோபாலிட்டன் கிளப் வந்துடுங்க...” என்று கூலாகச் சொல்வார். 2021 தேர்தல் நெருங்கியபோது, தி.மு.க - அ.தி.மு.க என இரண்டு கட்சிகளை நோக்கியும் கர்ணம் அடித்துப் பார்த்தார். ஆனாலும், சீட் கிடைக்கவில்லை. இப்போது என்ன செய்வதென்றே தெரியாமல் விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறாராம். இன்று, யாராவது கருணாஸுக்கு போன்போட்டு ‘காஸ்மோபாலிட்டன் கிளப்புக்கு வரட்டுமா?’ என்றால், ‘இல்லையில்லை... சாலிகிராமம் வந்துடுங்க...’ என்கிறாராம். என்ன ஓர் அடக்கம்!

பாதை மறந்த புதிய தமிழகம்!

தமிழக அரசியலில் கால் நூற்றாண்டுக்காலமாகத் தொடர்ந்து இயங்கிவருபவர், ‘புதிய தமிழகம்’ கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. 2011-ல் அ.தி.மு.க தயவில் எம்.எல்.ஏ-வாகி, ஆட்சி முடிவதற்குள்ளாகக் கூட்டணி தாவினார். அன்று முதல் இன்று வரை தொடர் தோல்விதான். சினிமா டைட்டில் பிரச்னை என்றாலே கிருஷ்ணசாமி பெயர் ஞாபகம் வரும் அளவுக்குச் சர்ச்சைகளில் இருந்தார். தேவேந்திர குல வேளாளர் பிரச்னையைக் கிளப்பி, பட்டியல் வெளியேற்றத்தைக் கொளுத்திப்போட்டு மக்களை உசுப்பேற்றினார். எல்லாவற்றையும் விட்டுவிட்டு, இப்போது பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்-ஸுடன் இணைந்து ‘இந்துக்கள் அனைவரும் ஒன்றிணையுங்கள்’ என்று கூவிவருகிறார். ‘தொடங்கிய இடத்தையே மறந்துவிட்டாரே!’ எனக் கட்சியினரே கண்ணீர்விட்டுப் புலம்புகிறார்கள்!

ட்விட்டரில் கட்சி நடத்தும் அர்ஜுன மூர்த்தி!

சிறந்த முறையில் ‘பல்ப்’ வாங்கியவர்களுக்கான போட்டி நடத்தினால், அர்ஜுன மூர்த்தி எதிர்க்க ஆளின்றி வெற்றிபெறுவார். ரஜினிக்காக பா.ஜ.க-வில் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஓடோடி வந்தார். மீடியா முன்பு ரஜினி இவரை அறிமுகப்படுத்திய அடுத்த நொடி பிரபலமானார். சில நாள்களில் ரஜினி ‘பிம்பிளிக்கி பிளாப்பி’யாக ‘இனி எப்போதும் அரசியலே கிடையாது’ என்று அறிவித்துவிட, பா.ஜ.க-விலும் சேர முடியாமல் புழுங்கினார். திடீரென்று, 2021 பிப்வரியில் ‘இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சி’யைத் தொடங்கினார். ஆனால், தேர்தலில் போட்டியிடவில்லை. தற்போது, ட்விட்டரிலேயே கட்சியை நடத்திவருகிறார்!

கிருஷ்ணசாமி, அர்ஜுனமூர்த்தி, மன்சூர் அலிகான்
கிருஷ்ணசாமி, அர்ஜுனமூர்த்தி, மன்சூர் அலிகான்

வீட்டுப் பிரச்னையில் மன்சூர் அலிகான்!

நாம் தமிழர் கட்சியில் அங்கம்வகித்த மன்சூர் அலிகான், அங்கிருந்து வெளியேறி, கடந்த பிப்ரவரி மாதம் ‘தமிழ் தேசியப் புலிகள்’ என்ற பெயரில் புதிய கட்சியைத் தொடங்கினார். முதலில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்து, பிரசாரம் என்ற பெயரில் பல கோமாளித்தனங்களைச் செய்தார். திடீரென போட்டியிடப்போவதில்லை என பல்டியடித்தார். பிறகு, போட்டியிட்டு 428 ஓட்டுகள் பெற்று படுதோல்வியடைந்தார். தற்போது தனது பூர்வீக வீட்டைக் காப்பாற்றவே அவருக்கு நேரம் சரியாக இருக்கிறதாம்!

இவர்கள் மட்டுமின்றி, முன்னாள் எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி தலைமையிலான ‘மனிதநேய ஜனநாயகக் கட்சி’, தனியரசு தலைமையிலான ‘கொங்கு இளைஞர் பேரவை’, ஜான் பாண்டியனின் ‘தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்’, கதிரவன் தலைமையிலான ‘ஃபார்வேர்டு பிளாக்’ என எண்ணற்ற குட்டிக் கட்சிகளும் இந்த வரிசையில் ஏதேதோ செய்தபடி இருக்கத்தான் செய்கின்றன!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு