Published:Updated:

``வரி ஏய்ப்பு செய்பவர்களை கடுமையாக கையாளுங்கள்!” - அதிகாரிகளுக்கு நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தல்

செ.கார்த்திகேயன்

தனிநபர்களின் பலரும், பல நிறுவனங்களும் தங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருவதால், வருமான வரி தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வருமான வரி
வருமான வரி

2018-19-ம் நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவதாக இருந்தது. தற்போது அந்த காலக்கெடு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை, அதாவது மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜூன் 30-ம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம் ஜூலை 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. பின் இரண்டாவது முறையாக இந்தக் கெடு ஜூலை 31-ம் தேதி வரை நீண்டது. தற்போது மூன்றாவது முறையாகக் கெடு நீட்டிக்கப்பட்டிருக்கிறது.

வருமான வரி
வருமான வரி

ஏனெனில், தனிநபர்களின் பலரும், பல நிறுவனங்களும் தங்களின் வருமான வரியைத் தாக்கல் செய்வதில் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வருகின்றனர். எனவே, அவர்களின் பிரச்னைகளைப் புரிந்துகொண்ட காரணத்தால் இந்தப் புதிய காலக்கெடுவை நீட்டித்து அறிவித்துள்ளது இந்திய வருமான வரித்துறை. குறிப்பிட்ட பிரிவில் வருமான வரி செலுத்துபவர்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க இணையத்தில் வருமான வரி தாக்கல் செய்யும் இ-ஃபைலிங் வசதி மூலம், நடப்பு நிதி ஆண்டில் வருமான வரி தாக்கல் செய்வதை மிகவும் எளிமையாக்கியுள்ளது வருமான வரித்துறை.

வருமான வரி வரம்புக்குள் வரும் 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் மட்டும், நேரடியாக வருமான வரித்துறை சார்ந்த அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று வரியைச் செலுத்தலாம். மற்றவர்கள் கண்டிப்பாக இ-ஃபைலிங் முறையில்தான் வரி செலுத்த வேண்டும்.

இந்த முறை ஆகஸ்ட்31-ம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் 5,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். அதை மீறினால் 10,000 ரூபாய் வரை அபராதம் செலுத்த வேண்டும். வருமான வரி தாக்கல் செய்பவரின் ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கும் குறைவாக இருக்கும்போது அபராதம் 1,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று டெல்லியில் வருமானவரித் துறை அதிகாரிகள் மத்தியில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ``வரி ஏய்ப்பு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்களைக் கடுமையாகக் கையாளுங்கள். வரி என்பது தண்டனை கிடையாது, நிறைய சம்பாதிப்பவர்கள் நாட்டின் கட்டமைப்பில் உதவுகிறார்கள்.

நிர்மலா சீதாராமன்
நிர்மலா சீதாராமன்

வருமானவரியை முறையாக கட்டுபவர்களுக்குத் தேவையான வசதிகளை செய்துகொடுக்க வேண்டும். வருமான வரித்துறையின் வரம்புக்குள் இருப்போர்களின் எண்ணிக்கையை மோடி விரும்புகிறபடி அதிகரிக்க வேண்டும்” என்றார்.