Published:Updated:

சென்னை: `21 வயது வர்ஷா முதல் 94 வயது காமாட்சி பாட்டி வரை!’ -கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளர்கள்

சென்னை - சுயேச்சை வேட்பாளர்கள்

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒருசில சுயேச்சை வேட்பாளர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்கள்.

சென்னை: `21 வயது வர்ஷா முதல் 94 வயது காமாட்சி பாட்டி வரை!’ -கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளர்கள்

நடைபெற இருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் ஒருசில சுயேச்சை வேட்பாளர்கள் கவனம் ஈர்த்து வருகிறார்கள்.

Published:Updated:
சென்னை - சுயேச்சை வேட்பாளர்கள்

தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்திருக்க வேண்டிய உள்ளாட்சித் தேர்தல் மூன்று கட்டங்களாக நடக்கிறது. ஏற்கெனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் 28 மாவட்டங்களுக்கு ஒரு முறையும், பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் மறுமுறையும் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் தொடர்ச்சியாக வரும் பிப்ரவரி 19-ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தி.மு.க கூட்டணி, அ.தி.மு.க., பா.ஜ.க., ம.நீ.ம., நாம் தமிழர், அ.ம.மு.க என 8 முனைப் போட்டிக்கு மத்தியில், ஒருசில சுயேச்சை வேட்பாளர்கள் மக்களிடம் ஈர்ப்பினை ஏற்படுத்தி வருகிறார்கள். சென்னை மாநகராட்சியில் போட்டியிடும் அப்படியான வித்தியாமான, கவனம் ஈர்க்கும் சுயேச்சை வேட்பாளராகள் குறித்துப் பார்ப்போம்.

"ரோல் மாடல் வார்டினை உருவாக்குவதே லட்சியம்"
வர்ஷா
வர்ஷா
சீனிவாசுலு

முதலில் சென்னை அண்ணாநகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, மண்டலம் எட்டில், வார்டு 107-ல் போட்டியிடும் 21 வயதான வர்ஷா என்ற மாணவி பற்றிக் கேள்விப்பட்டு அவரின் பிரசாரங்களைக் காண நேரில் சென்றோம்.

'Vote for Varsha - Globe சின்னம்' என்று பொறிக்கப்பட்ட மஞ்சள் வண்ண டி-சர்ட்டைப் மாட்டிக்கொண்டு, கைகளில் கிளவுஸ், முகத்தில் மாஸ்க் போட்டுக்கொண்டு, குளோப் எனப்படும் உலக உருண்டை சின்னத்தைக் கையில் ஏந்தியபடி பெண்கள், ஆண்கள் என 10-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தெருத்தெருவாகப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

'வாக்கு வர்ஷாக்கு.. வெற்றி மக்களுக்கு' என்று தலைப்பிட்டத் துண்டுப் பிரசுரங்களை டான்ஸ் ஆடிக்கொண்டே மக்களிடம் விநியோகித்தனர். 'தரமான சாலைகள் அமைத்து, தெருக்களை சுத்தமாகப் பராமரிக்க, குடிநீர் மேலாண்மை, கழிவுநீர் சாலைகளில் வெளியாவதைத் தடுக்க - உடனடியாக சரி செய்ய, மழைநீர் மேலாண்மை  மூலம் நிலத்தடி நீர் உயர திட்டங்கள் வகுக்க மற்றும் மரங்களை நட - நேர்மையான வெளிப்படையான நிர்வாகத்திற்கு வாக்களிப்பீர் பி.ஜி (பட்டமேற்படிப்பு) மாணவருக்கு' என்று சில பல வாக்குறுதிகளையும் வர்ஷா கொடுத்துள்ளார்.

வர்ஷா வாக்குறுதிகள்
வர்ஷா வாக்குறுதிகள்
சீனிவாசுலு

ஏன் இந்தத் திடீர் அரசியல் ஆசை? என வர்ஷாவிடம் கேட்டோம். ``நான் தற்போது டாட்டா இன்ஸ்டியூட்டில் எம்.ஏ நீர் கொள்கை மற்றும் நிர்வாகம் பட்டமேற்படிப்பைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்பு பி.ஏ சமூகவியல் பாத்திருக்கிறேன். சமூகம் சார்ந்த நிர்வாகத்தைக் கட்டமைப்பது பற்றியது தான் அந்தப் படிப்பு. அப்போதே சமூகத்துக்குத் தொண்டு ஆற்ற வேண்டும் என நினைத்தேன். ஆனால், அதற்கான வயது, எலிஜிபிலிட்டி இல்லாததால் அப்போது விட்டுவிட்டேன். தற்போது, தகுந்த வயது, எலிஜிபிலிட்டி இருப்பதால் சமூகத்துக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் களமிறங்கி இருக்கிறேன்.

நண்பர்களுடன் வர்ஷா
நண்பர்களுடன் வர்ஷா
சீனிவாசுலு

நான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுகிறேன், வாலன்ட்டியர்கள் தேவை என சிலரிடம் கேட்டபோது, 'ஏன் இந்த விபரீத விளையாட்டு?' என்று கேட்டனர். ஆனால், குடும்பத்தில் எந்த எதிர்ப்பும் இல்லை. மாறாக, உற்சாகப்படுத்தினார்கள். அதுதான் எனக்கான பூஸ்ட்! குடும்பம் கொடுத்த சப்போர்டில்தான் போட்டியிடுகிறேன். என்னை பற்றிப் புரிந்துகொண்ட எனது பள்ளி மற்றும் கல்லூரி நண்பர்கள் என்னுடன் பணியாற்றி வருகிறார்கள். குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு பெரியவர்களும் துணைக்கு வருகிறார்கள். பலவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்திருக்கிறேன். முக்கியமாக, நான் பெற்றி பெற்றால் 107-வது வார்டினை சென்னையின் RMW-ஆக, அதாவது ரோல்மாடல் வார்டாக மாற்றுவதே எனது லட்சியம்!" என்றார் தெளிவாக.

"வாட்ஸப் பிரசாரமே போதும்!"

அடுத்ததாக, பார்த்திபன் என்ற சமூக ஆர்வலர் தி.நகர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட, 10-வது மண்டலம், 140-வது வார்டில் போட்டியிடுகிறார். பல வி.ஐ.பி-க்கள் மீது வழக்குப்போட்டு, ஆட்டம் காண வைத்தது தான் பார்த்திபனின் பிளஸ் பாயின்ட்.

பார்த்திபன்
பார்த்திபன்

அதாவது, தற்போதைய மக்கள் நல்வாழ்த்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் குடியிருந்த கிண்டி லேபர் காலனி இல்லம் அமைந்துள்ள சிட்கோ நிலத்தை, போலி ஆவணங்கள் கொண்டு அபகரித்து விட்டதாக வழக்கு போட்டு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-வாக இருந்தபோது திக்குமுக்காட வைத்தார் பார்த்திபன். அதேபோல், 2019 பிப்ரவரி 4-ம் தேதி, சென்னை மாநகராட்சிக்குள் அன்-ஆத்தரைஸ்ட்டாகக் காட்டப்பட்டிருக்கும் கட்டடங்களை, ரெகுலரைஸ் செய்து கொள்வதற்கான அரசாணை எண் 80-ஐ அமல்படுத்த பார்த்திபன் எடுத்த முயற்சியே காரணம். 2018-ல் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை அரசு நினைவில்லமாக அறிவிக்கக்கோரி முதன்முதலில் வழக்குப் போட்டவரும் பார்த்திபன்தான். மேலும், டி.டி.வி.தினகரன் ஃபெரா கேஸில் 31 கோடி ரூபாய் ஃபைன் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, அது நடந்து வருகிறது. இப்படியான சமூகம் சார்ந்த விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார் பார்த்திபன்.

பார்த்திபனிடம் பேசுகையில், "கரண்டி சின்னத்தில் போட்டியிடுகிறேன். அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் பாஸ்கரன் ஏற்கெனவே இங்கு கவுன்சிலராக இருந்தவர். திருவல்லிக்கேணி கூட்டுறவு வங்கியில் 50,000 ரூபாய் கடன் வாங்கி கட்டாமல் எஸ்கேப் ஆனவரை, நான் தான் கட்ட வைத்தேன். அவர் உட்பட மற்ற வேட்பாளர்களுக்கு வார்டில் நல்ல பெயர் இல்லை. அதனால், வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. 140-வது வார்டில் மட்டும் 42,000 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் ஆணையம் முதலில் வேட்பாளருடன் மூவர் தான் செல்ல வேண்டும் என்றது. பின்னர், 10 பேர் செல்லலாம் என்றனர். ஆனால், கொரோனா முழுமையாக ஒழியாத வேளையில் கூட்டத்தோடு சென்று ஏன் நோய்வாய்ப் பட வேண்டும்? என்பதால் பிரசாரத்துக்கு நேரடியாகச் செல்வதில்லை. ஒவ்வொரு தெருவிலும் நான்கைந்து நபர்களின் வாட்ஸப் எண்களைப் பெற்று, அதிலேயே எனது பிரசாரத்தை செய்து வருகிறேன். அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு குரூப்பில் ஷேர் செய்யப்படுகிறது.

பார்த்திபன் வாக்குறுதிகள்
பார்த்திபன் வாக்குறுதிகள்

'கட்டுமானத்துக்கான அனுமதி, குடிநீர், கழிவுநீர் இணைப்பு எல்லாமே லஞ்சமின்றி மேற்கொள்ள உதவுவேன், வியாபாரிகள் சங்கம், அரசியல்வாதிகள் மூலம் எந்த ஒரு தொந்தரவும் இருக்காது' என்பது போன்ற வாக்குறுதிகளை பிட் நோட்டீஸாக சிலரைக் கொண்டு வீடுவீடாகக் கொடுத்து வருகிறேன்" என்றார்.

"பாரடைஸ் சிட்டியை உருவாக்குவதே நோக்கம்!"

அடுத்து, அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, 84-வது வார்டில் போட்டியிடும் செல்லப்பாண்டியன் குறித்து கேள்வியுற்று அவரை சந்திக்கச் சென்றோம். மதுவுக்கு எதிராகப் பேசாத அரசியல் தலைவர்களே இல்லை எனலாம். மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வெகுகாலமாக விடுக்கப்பட்டு வருகிறது. மதுவுக்கு எதிராகப் போராடுபவர்கள் இயக்கமாக ஒன்றிணைந்த வரலாறும் உண்டு. ஆனால், மதுபிரியர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு பெரிய இயக்கமும் இல்லை என்கிற ஏக்கத்தை நிறைவு செய்தது செல்லப்பாண்டியன் மட்டுமே. தமிழ்நாடு மது குடிப்போர் விழிப்புணர்வு சங்கம் என்ற பெயரில் சங்கத்தை நடத்தி வருகிறார்.

செல்லப்பாண்டியன் கொசு வலையுடன் பிரசாரம்
செல்லப்பாண்டியன் கொசு வலையுடன் பிரசாரம்
ஜெரோம்

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கெட்டப்பில் பிரசாரம் செய்துவரும் செல்லப்பாண்டியனிடம் பேசினோம். "கொசுத் தொல்லை அதிகமாகிவிட்டது, அடிக்கடி சாக்கடை அடைத்துக்கொள்கிறது, இதுதான் சென்னையின் ஒவ்வொரு வார்டுகளின் பிரச்னை. அதனை சரி செய்வதற்கே கவுன்சிலர் பதவி. ஆனால், பலரும் அதனை வைத்து சம்பாதிக்கவே எண்ணுகிறார்கள். உண்மையான நோக்கத்தை வெளிக்காட்டவே பலவிதமான பிரசாரங்கள் செய்கிறேன்.

தூய்மைப் பணியாளர் தோற்றத்தில் செல்லப்பாண்டியன்
தூய்மைப் பணியாளர் தோற்றத்தில் செல்லப்பாண்டியன்
ஜெரோம்

மாநகராட்சி தூய்மைப் பணியாளர் உடையணிந்து சாக்கடை கிளீன் செய்தேன். உடல் முழுவதும் கொசு வலையைப் போர்த்திக்கொண்டு பிரசாரம் செய்கிறேன். பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்தக் கூடாது, மஞ்சப் பைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன். அதன்படி எனது சின்னமே மஞ்சப்பை தான்.

செல்லப்பாண்டியன்
செல்லப்பாண்டியன்
ஜெரோம்

மது குடிப்பவர்கள் கண்ட இடத்தில் மது பாட்டில்களையும், யூஸ் அண்ட் த்ரோ கிளாஸ்களையும் ஆங்காங்கே போட்டுவிடுகின்றனர். கொரோனா காலத்தில் இதுபோன்ற சுகாதார சீர்கேடுகளால்தான் நோய் பரவுகிறது. அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகத்தான் நான் போட்டியிடுகிறேன்.

மது  குடிப்பவர்களுக்கு என தனியாக பாரடைஸ் சிட்டியை உருவாக்க வேண்டும் என்பது பல நாள் கோரிக்கை. அப்படி ஒரு இடம் ஒக்கப்பட்டால் ஊருக்குள் யாருக்கும் எந்தப் பிரச்னையும் இல்லை. அதனால், கவுன்சிலர் ஆகிவிட்டால் வெளிநாடுகளில் கேஸினோ கப்பல் போல சென்னை கடலை ஒட்டி பாரடைஸ் சிட்டியை உருவாக்க பாடுபடுவேன்!" என்றார்.

பிரசாரத்தில் செல்லப்பாண்டியன்
பிரசாரத்தில் செல்லப்பாண்டியன்
94 வயதில் போட்டியிடும் பாட்டி!

சென்னை மாநகராட்சி வேளச்சேரி தொகுதிக்குட்பட்ட, 174-வது வார்டில் சுயேச்சையாகக் களமிறங்கி இருக்கிறார் 94 வயதான காமாட்சி சுப்ரமணியன் என்ற பாட்டி. இவருக்கு அரிக்கேன் விளக்கு சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேட்புமனுத் தாக்கல் செய்ததோடு சரி, வயது மூப்பின் காரணமாக பேசவும், நடக்கும் முடியாமல் சிரமப்படுவதால், நேரடிப் பிரசாரத்துக்குச் செல்லவில்லை காமாட்சி பாட்டி.

காமாட்சி பாட்டி
காமாட்சி பாட்டி
சீனிவாசுலு

காமாட்சி பாட்டியிடம் பேசுவதற்காக அவரைத் தொடர்புகொண்டோம். ஆனால், பேசுவதற்கு அவரால் முடியவில்லை. அதனால், அவர் சார்பாகப் பேசியவர்கள், “லோக்களில் காமாட்சி பாட்டி என்றால் நன்கு பிரபலம். 94 வயதில் நாமெல்லாம் இருப்போமோ, இருந்தாலும் நடப்போமா என்று சொல்ல முடியாது. ஆனால், காமாட்சி பாட்டி இந்த வயதிலும் தனது வேலையைத் தானே செய்யக்கூடியவர். அவர் நேரில் பிரசாரம் செய்தால் ஜெயிப்பதற்கு வாய்ப்புள்ளது" என்றனர்.

உள்ளாட்சி தேர்தல்களில் சுயேச்சை வேட்பாளர்கள் எப்போதும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இம்முறையும் அது நடக்குமா என்பதை தேர்தல் முடிவுகள் நமக்கு சொல்லும்!