Published:Updated:

சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்?

சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்?
பிரீமியம் ஸ்டோரி
News
சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்?

ரத்தம் பாய்ந்த கல்வான் நதி!

‘பாகிஸ்தான் எல்லையில் பதற்றம்’ என்று செய்தி வந்தாலே ‘உயிர்ப்பலிகள் ஏற்படுமே’ என்று நாமும் பதறிப்போவோம்.

ஆரம்பத்திலிருந்தே அந்த எல்லை அப்படித்தான். ஆனால், இந்திய-சீன எல்லை அப்படி இல்லை. உள்ளுக்குள் புகைந்தாலும், கனத்த மெளனம் நிலவும் மர்ம தேசம் அது. கொடுங்காயங்களோ உயிர்ப் பலிகளோ நேராது. 1975-ல் இந்திய-சீன எல்லையில் நடந்த மோதலில் நான்கு இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய-சீன எல்லையில் ரத்தம் வழிந்தோடுகிறது. இருதரப்பிலும் ஏராளமான உயிரிழப்புகள். கைகலப்பாக தொடங்கியது, கொடூரத் தாக்குதலாக மாற... ஆணிகள் பொருத்திய இரும்புக்குழாய்களாலும் கற்களாலும் இருதரப்பிலும் அடித்துக் கொன்றிருக்கிறார்கள். இந்தியத் தரப்பில் 20 பேர் இறந்துவிட்டனர். ‘இன்னும் பலர் காயங்களுடன் சிகிச்சை பெறுகின்றனர். சில வீரர்களைக் காணவில்லை’ என்று வரும் செய்திகளால் தேசமே கொந்தளித்துப் போயிருக்கிறது.

இந்தியாவும் சீனாவும் உலகின் அதிக மக்கள்தொகைகொண்ட நாடுகள். மிகப்பெரிய ராணுவ பலத்தைக்கொண்டவை. அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் ஆசியாவின் பலம் பொருந்திய தேசங்கள். தேசியவாத உணர்வு கொண்ட தலைவர்களால் ஆளப்படும் இரண்டு தேசங்களும், தங்கள் ராணுவத்தை தேசத்தின் பெருமையாக நினைப்பவை. எனவே, இந்த மோதலை உலகமே கவலையுடன் உற்றுப் பார்க்கிறது.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த எல்லை மோதலின் பின்னணி என்ன?

3,488 கிலோமீட்டர் நீளமுள்ள இந்திய-சீன எல்லை, பல இடங்களில் தெளிவாக வரையறுக்கப் படவில்லை. பிரிட்டிஷ் காலத்திலிருந்தே இந்த எல்லை தொடர்பாக சீனா சர்ச்சை எழுப்பிவருகிறது. ‘இதுதான் எல்லை’ என இரு தரப்பினரும் பரஸ்பரம் புரிந்துகொண்ட கற்பனைக்கோடு ஒன்றையே எல்லையாகக் கருதி வீரர்கள் காவல்புரிகிறார்கள். தாங்கள் வழக்கமாக ரோந்து போகும் எல்லை வரை தினமும் போய்விட்டு வருவதே இங்கு எல்லைக் காவலாகக் கருதப்படுகிறது. சில நேரங்களில் இவர்கள் எல்லை தாண்டுவதும் உண்டு.

குறிப்பாக, லடாக்கில் இது அடிக்கடி நிகழும். நம் இந்திய வரைபடத்தின் காஷ்மீர் பகுதியில் கொண்டைபோல இரண்டு பகுதிகள் இருக்கின்றனவே, அவற்றில் கிழக்குப் பக்கக் கொண்டை ‘அக்சாய் சின்.’ இதை சீனா ஆக்கிரமித்துள்ளது. தற்போதைய நமது லடாக் யூனியன் பிரதேசத்தின் ஒரு பகுதி இது. அக்சாய் சின் பகுதியை ஆக்கிரமித்ததுடன் நிற்காமல், லடாக்கின் பெரும் பகுதிக்கு சீனா சொந்தம் கொண்டாடுகிறது. இதைத் தனது ஜின்ஜியாங் மாகாணத்தின் ஒரு பகுதி என்கிறது சீனா.

யாரும் வசிக்க முடியாத, புல்கூட முளைக்காத, பனி படர்ந்த இமயமலைப் பகுதியே லடாக் எல்லை. தரை மட்டத்திலிருந்து சுமார் 14 ஆயிரம் அடி உயரத்துக்கு மேலிருக்கும் இங்கு, கோடைக் காலத்திலேயே உடலை நடுக்கும் குளிர் நிலவும். கடும் பனிப்பொழிவுக்கு இடையில் இங்கு காவல் புரிவதே சவாலான பணி. நவம்பர் முதல் ஏப்ரல் வரையிலான குளிர்காலத்தில் பெரிதாக இங்கு நடமாட்டம் இருக்காது. ஏப்ரல் இறுதியில் இருதரப்பு காவல் வீரர்களும் பிஸியாகிவிடுவார்கள். சர்ச்சைகள் தொடங்கும் மாதமும் அதுதான்.

சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்?
சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்?

எதனால் ஆரம்பித்தது பிரச்னை?

எல்லையில் கோடைக்காலம் இந்த ஆண்டு இந்தியாவுக்கு இனிதாகத் தொடங்கவில்லை. லடாக் தொடங்கி சிக்கிம் வரை ஐந்து இடங்களில் எல்லை தாண்டி இந்தியப் பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவியது. சில இடங்களில் அவர்கள் கண்காணிப்புக் கூடாரங்களை அமைக்கவும் முயன்றனர். இதற்கு இந்திய ராணுவம் எதிர்ப்பு தெரிவித்தது. இதில் மே மாதம் இரண்டு இடங்களில் கைகலப்புகள் நிகழ்ந்தன.

இரண்டு நாடுகளும் செய்துகொண்ட அமைதி ஒப்பந்தங்களின் அடிப்படையில், எல்லைக் காவல்புரியும் வீரர்கள் துப்பாக்கி எடுத்துச் செல்லக் கூடாது. தங்கள் எல்லைக்குள் ரோந்து செல்லும் வீரர்களை இன்னொரு நாட்டு வீரர்கள் தடுக்கக் கூடாது. எங்கும், எவரையும் சுற்றி வளைக்கக் கூடாது. எல்லை தாண்டக் கூடாது.

இந்த விதிகள் மீறப்படும்போது, அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி, பதற்றத்தைத் தணிக்க வேண்டும். இப்போது ஐந்து முறை பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடைசியாக ஜூன் 6-ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில், ‘எல்லைக்கோட்டை ஒட்டி ஒரு கிலோமீட்டர் பரப்பை ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியாக அறிவித்து, அங்கு இருநாட்டு வீரர்களும் வரக் கூடாது. நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சூழல் இதனால் தவிர்க்கப்படும்’ என முடிவு செய்யப்பட்டது. ஆனால், கல்வான் பள்ளத்தாக்கு மற்றும் பாங்கோங் ஏரிப் பகுதியிலிருந்து சீன ராணுவம் பின்வாங்கவில்லை. இதுவே மோதலுக்கான காரணமாக அமைந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எப்படி நடந்தது மோதல்?

கல்வான் பள்ளத்தாக்குப் பகுதியில், இந்திய எல்லைக்குள் சீன ராணுவம் தற்காலிகக் கூடாரம் ஒன்றை அமைத்திருந்தது. பேச்சுவார்த்தை அடிப்படையில் சீனா அங்கிருந்து வெளியேற வேண்டும் என்பதால், ஜூன் 15-ம் தேதி மாலை அங்கு ரோந்து போன இந்திய அதிகாரிகள், அந்தக் கூடாரத்தை அகற்றினர். இதற்கு சீன ராணுவத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்வான் நதியின் கரைப்பகுதியில், குறுகலான மலை முகட்டில் இந்த மோதல் நடைபெற்றது. சீன ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் சூழ்ந்துகொண்டு தாக்கியதில், தமிழக வீரர் பழனி உட்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இரண்டு மைல் தூரத்திலிருந்த இந்திய ராணுவ முகாமுக்கு இந்தத் தகவல் போனதும், அவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடி வந்தார்கள். இதற்குள் சீன ராணுவத்தினர் பெரும் எண்ணிக்கையில் திரண்டுவிட்டார்கள். இருதரப்பிலும் 600 பேர் வரை சண்டை போட்டனர். மாலை 7:30 மணிக்குத் தொடங்கிய மோதல், நள்ளிரவு வரை நீடித்தது. இரும்புக்குழாய்களாலும் கற்களாலும் தாக்கிக் கொண்டனர். குறுகலான மலை விளிம்பிலிருந்து பலரும் தடுமாறி கல்வான் நதியில் விழுந்தனர். பனி உருகி ஓடும் நதி என்பதால், ஜில்லிட்ட அந்தத் தண்ணீரில் தடுமாறி விழுந்த பலரும் இறந்து விட்டனர்.

‘20 பேர் இறந்துவிட்டார்கள்’ என்று இழப்பு எண்ணிக்கையை இந்தியா வெளிப்படையாகச் சொல்லிவிட்டது. சீனத் தரப்பில் இதைவிட இழப்பு அதிகம் என்று கூறப்படுகிறது. ‘இறந்தவர்களின் எண்ணிக்கையைச் சொல்லி மோதலை வளர்க்க விரும்பவில்லை’ என்று சீனா ரகசியம் காக்கிறது. ஆனால், மறுநாளே திபெத் பகுதியில் போர் ஒத்திகை செய்து, ‘நாங்கள் எதற்கும் தயார்’ என்றும் மிரட்டுகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு யாருக்குச் சொந்தம்?

குலாம் ரசூல் கல்வான் என்பவர் லடாக்கைச் சேர்ந்த மலையேற்ற வீரர். லடாக்கிலிருந்து திபெத்துக்கு பாதை உருவாக்க பிரிட்டிஷ் காலத்தில் முயற்சி நடந்தபோது, அந்தக் குழுவுக்கு வழிகாட்டி அழைத்துச் சென்றவர். இமயமலைப் பனி உருகி, லடாக்கில் ஓடும் நதிக்கு அவர் பெயரையே வைத்தனர் பிரிட்டிஷ் அதிகாரிகள். கல்வான் நதியும் அதன் பள்ளத்தாக்குப் பகுதியும் இந்தியாவுக்குச் சொந்தம் என்பதற்கு இந்த ஒற்றை ஆதாரமே போதுமானது.

கல்வான் பள்ளத்தாக்கை ஒட்டிய மலை முகட்டிலிருந்து பார்த்தால், சியாச்சின் வரையிலான இந்தியப் பகுதியை எளிதாகக் கண்காணிக்க முடியும். இந்தப் புவிசார் முக்கியத்துவத்தாலேயே சீனா இதை அபகரிக்கப் பார்க்கிறது. 1962-ம் ஆண்டு இந்திய-சீன யுத்தமும் இந்தப் பகுதியில்தான் வெடித்தது. அதன் பிறகும் அடிக்கடி சிறு சிறு மோதல்கள் இங்கு எழுந்துள்ளன.

இப்போது இந்தியா, தர்புக் என்ற இடத்திலிருந்து தவுலத் பெக் ஓல்டி விமான இறங்குதளம் வரை 224 கிலோமீட்டர் நீளத்துக்கு இங்கு சாலை அமைக்கிறது. இதனால் இந்திய ராணுவம் மிக விரைவில் எல்லைக்கோட்டுப் பகுதியைச் சென்றடைய முடியும். இதுவரை சீனாவுக்கு மட்டுமே இந்த வசதி இருந்தது. இப்படி இந்தியா வலிமை பெறுவதை சீனா விரும்பவில்லை. அதனால்தான், ‘கல்வான் பள்ளத்தாக்கு எங்களுக்குச் சொந்தம். இங்கு நீங்கள் எல்லை தாண்டி வரக் கூடாது. சாலை போடக் கூடாது’ என்று சீனா பிரச்னை செய்கிறது.

சீன ஆக்ரோஷம்... காரணம் என்ன?

கடந்த 2015-ம் ஆண்டு இதேபோல எல்லை தாண்டி வந்து கூடாரம் அமைத்த சீன ராணுவத்தினர், அவர்களாகவே திரும்பிப் போனார்கள். 2017-ம் ஆண்டு டோக்லாம் பகுதியில் சீனா அத்துமீறி சாலை போட முயன்றபோது, இந்தியா எதிர்ப்பு தெரிவித்து படையைக் குவித்தது. அப்போது பிரிக்ஸ் மாநாடு நடக்கவிருந்தது. கூடவே பிரதமர் மோடியை சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திக்கவிருந்தார். அதனால், சீன ராணுவம் பின்வாங்கியது. இப்படி ஒவ்வொரு முறையும் அரசியல் சூழலே சீனாவை அடக்கி வைத்தது. ஆனால், கொரோனா வெறியாட்டம் போடும் இன்றைய சூழலில், அரசியல் நிர்பந்தங்கள் ஏதும் இல்லை என்பதால் சீனா ஆக்ரோஷம் காட்டுகிறது.

சீனாவுக்கு நம் பதிலடி எப்படி இருக்க வேண்டும்?

கடந்த ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைப் பிரித்து லடாக்கைத் தனி யூனியன் பிரதேசமாக இந்தியா அறிவித்ததை சீனா ரசிக்கவில்லை. ‘சீன ஆக்கிரமிப்பில் இருக்கும் அக்சாய் சின் பகுதியை மீட்போம்’ என அப்போது உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் பேசியதையும் சீனா ரசிக்கவில்லை. மத்திய ஆசிய நாடுகளை சீனாவுடன் இணைக்கும்விதமாக பல சாலைக் கட்டமைப்புகளை சீனா உருவாக்கிவருகிறது. லடாக் எல்லையை இந்தியா வலுப்படுத்துவது அதற்குத் தடையாக இருப்பதாக சீனா கருதுகிறது. இப்போதுகூட 11 சிறப்பு ரயில்களில் தொழிலாளர்கள் சீன எல்லைக்குச் சென்று சாலைக் கட்டுமானப் பணிகளை ஆரம்பிக்க இருந்தனர். (எல்லை வரை ரயில் பாதை இல்லை. சில கி.மீ தூரத்துக்கு முன்பு வரை ரயிலில் சென்று, பின்னர் வாகனங்கள் மூலம் எல்லைக்குச் செல்ல வேண்டும்). முதல் ரயில் கிளம்பிய நேரத்தில் திட்டமிட்டு சீனா இந்த மோதலை நடத்தியது. விளைவு... ஜார்கண்ட் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து தொழிலாளர்கள் அங்கு போவது நின்றுவிட்டது.

எப்படி இருக்க வேண்டும் இந்திய பதிலடி?

திருப்பி அடிப்பது முட்டாள்தனம். வன்முறை எதற்குமே தீர்வாகாது. மோடியும் ஜி ஜின்பிங்கும் இதுவரை 18 முறை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். சீனாவுக்கு அதிகமுறை (ஐந்து முறை) சென்றவர் இந்தியப் பிரதமர் மோடி மட்டுமே. ஆனாலும், அவநம்பிக்கைகள் தொடர்கின்றன.

இப்போது சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி, இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடன் பேசிக்கொண்டிருக்கிறார். ‘ஆக்கிரமித்த இடங்களிலிருந்து சீன ராணுவம் பின்வாங்க வேண்டும்’ என்பதை இந்தியா உறுதியாகச் சொல்ல வேண்டும்.

பாகிஸ்தானை உலக அரங்கில் தனிமைப் படுத்துவது இந்தியாவுக்குச் சுலபம். ஆனால், சீனாவை அப்படிச் செய்துவிட முடியாது. என்றாலும் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் என சீனாவை எதிர்க்கும் நாடுகளுடன் ஒரு கூட்டணியை உருவாக்கி, எச்சரிக்கை சமிக்ஞைகளைத் தந்தபடி அந்த நாட்டை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். ‘ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு’ உள்ளிட்ட சீனாவுடனான கூட்டணிகளிலிருந்து விலக வேண்டும்.

சீனாவிலிருந்து பொருள்களை அதிகம் வாங்கும் நாடுகள் பட்டியலில், ஏழாவது இடத்தில் இருக்கிறது இந்தியா. இதை மாற்ற முடியும். சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதைத் தடுக்க முடியும். சமாதானத்தை விரும்பாதவர்களின் வியாபாரத்தை நாம் ஏன் விரும்ப வேண்டும்?