Election bannerElection banner
Published:Updated:

``அவசரநிலையைப் பிரகடனப்படுத்தியது முற்றிலும் தவறானது” - ராகுல் காந்தி

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

எந்த ஒரு காலகட்டத்திலும் காங்கிரஸ், இந்தியாவின் நிறுவன அமைப்புகளை கைப்பற்ற நினைத்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால், அதை எங்களால் செய்யவும் முடியாது.

இந்திராகாந்தி அவசரநிலையைப் பிரகடனம் செய்தது தவறுதான் என ராகுல் காந்தி பேசியிருக்கிறார். அமெரிக்காவிலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் கெளஷிக் பாசுவுடன், இணையவழி கருத்தரங்கில் ராகுல் காந்தி உரையாடினார். அப்போது அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அதற்கு பதிலளித்துப் பேசிய அவர், `` அது முற்றிலும் தவறான முடிவுதான். பாட்டியும் ( இந்திரா காந்தி) அதைப் பற்றிப் பலமுறை பேசியிருக்கிறார். ஆனால், அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டபோது நடந்த நிகழ்வுகளுக்கும், தற்போது நடக்கும் நிகழ்வுகளுக்கும் அடிப்படை வேறுபாடு இருக்கிறது” என்றார்.

`` எந்த ஒரு காலகட்டத்திலும் காங்கிரஸ் இந்தியாவின் நிறுவன அமைப்புகளைக் கைப்பற்ற நினைத்தது இல்லை. இன்னும் சொல்லப்போனால், அதை எங்களால் செய்யவும் முடியாது. எங்கள் கட்சியின் அமைப்பு அதை அனுமதிக்காது. நாங்கள் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், எங்களால் செய்ய முடியாது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் செய்வது அடிப்படையிலேயே வேறாக இருக்கிறது. சுதந்திரமாகச் செயல்பட வேண்டிய அரசு நிறுவன அமைப்புகளில், ஆர்.எஸ்.எஸ் தங்களுடைய ஆட்களை நுழைத்து நிரப்புகிறது” என்று குற்றம்சாட்டினார்.

குமரி: `தமிழர்களைப் பிறர் ஆட்சி செய்ய தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்பதே வரலாறு! - ராகுல்

இதற்கு உதாரணமாக மத்தியப் பிரதேச முன்னாள் காங்கிரஸ் முதலமைச்சர் கமல்நாத் உடனான உரையாடலை நினைவுகூர்ந்தார். `` மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் அரசு கவிழ்க்கப்படுவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு, நான் முதலமைச்சர் கமல்நாத்திடம் பேசினேன்.

அவர், `எனது அரசாங்கத்தின் உயர் பதவிகளிலுள்ள அதிகாரிகள் யாரும் நான் சொல்வதைக் கேட்க மாட்டார்கள். அவர்கள் ஆர்.எஸ்.எஸ்-ன் ஆட்கள். நான் எதைச் செய்ய உத்தரவிட்டாலும் அவர்கள் அதைச் செய்ய மாட்டார்கள்’ என்றார். பேசி இரண்டு நாள்களில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. எனவே, ஆர்.எஸ்.எஸ்-ன் செயல்கள் அடிப்படையில் வேறுபட்டவை" என்றார் ராகுல் காந்தி. மேலும், ``நாங்கள் தேர்தலில் பா.ஜ.க-வை தோற்கடித்து ஆட்சிக்கு வந்தாலும், நிறுவன கட்டமைப்பிலுள்ள அவர்களின் ஆட்களை நீக்க மாட்டோம்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு