Published:Updated:

ரஜினி: அரசியல் பாதை

ரஜினி
பிரீமியம் ஸ்டோரி
News
ரஜினி

1992 - 2020

1992

முதல்வர் ஜெயலலிதாவுக்குத் திரைத்துறையினர் நடத்திய பாராட்டுவிழாவில். ``நேற்று பஸ் கண்டக்டர், இன்று சூப்பர் ஸ்டார், நாளை என்னவோ... அதே நேரத்தில், ஆண்டவா எந்தச் சூழ்நிலையிலும் என்னை அரசியலில் விட்டுடாதேன்னு வேண்டிக்கிறேன். ஏன்னா அரசியலுக்கு வந்தா நிம்மதி போயிடும்’’ என்றார்.

1992

போயஸ் கார்டனில், ஜெயலலிதாவின் வருகைக்காக ரஜினியின் கார் தடுத்து நிறுத்தப்பட்டதாகச் செய்திகள் வெளியான நிலையில், `அண்ணாமலை’ படத்தில், ``எம்பாட்டுக்கு என் வேலைய செஞ்சுக்கிட்டு சிவனேன்னு நான் ஒரு வழில போய்க்கிட்டிருக்கேன். என்னை வம்புக்கிழுக்காதீங்க. வம்புக்கிழுத்தா சொன்னதையும் செய்வேன்... சொல்லாததையும் செய்வேன்” என்று பேசினார்.

1995

சிவாஜிக்கு `செவாலியே’ விருது வழங்கும் விழாவில் ``நீங்க திறந்துவெச்சீங்களே ஃபிலிம் சிட்டி… அப்பவே சிவாஜி சாரைக் கௌரவிச்சிருக்கணும். நீங்க செய்யலை. அவரை மதிக்கலை. அந்த விழா மேடையில் அவரை உட்காரவெச்சு, கௌரவம் பண்ணியிருக்கணும். அது தப்பு! தப்பு பண்றது மனித இயல்பு. தப்பைத் திருத்திக்கறது மனிதத்தனம். அப்போ பண்ணின தப்பை இப்போ சரி பண்ணிட்டீங்க’’ என்று ஜெயலலிதா மேடையில் இருக்கும்போதே அவரை விமர்சித்தார்.

1996

``ஜெயலலிதா திரும்பவும் ஆட்சிக்கு வந்தால், தமிழகத்தை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்றார். அந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க படுதோல்வியடைந்தது.

1998

மக்களவைத் தேர்தலில் தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு ரஜினி மீண்டும் ஆதரவளித்தும் வெற்றி கிட்டவில்லை.

2001

மீண்டும் முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலிதாவைச் சந்தித்துப் பாராட்டி, `தைரிய லட்சுமி’ என்று புகழாரம் சூட்டினார்.

2002

புகைபிடிக்கும் காட்சிகளுக்காக `பாபா’ பட வெளியீட்டில் ரஜினியை உரசியது பா.ம.க.

2004

நாடாளுமன்றத் தேர்தலில், ‘‘பா.ம.க போட்டியிடும் ஆறு தொகுதிகளில் மட்டும் ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவியுங்கள்’’ என்று ரசிகர்களுக்குக் கட்டளையிட்டார். ஆனால், போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் பா.ம.க வென்றது.

2010

முதல்வர் கருணாநிதிக்கு திரைத்துறையினர் நடத்திய பாராட்டு விழாவில், ``ஆர்ப்பாட்டங்கள், ஊர்வலங்களில் நடிகர்களை கலந்துக்கச் சொல்லி வற்புறுத்துறாங்க, மிரட்டுறாங்க’’ என அஜித் பேசியதற்கு ரஜினி எழுந்து நின்று கைதட்டியது சர்ச்சையானது.

2014

நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை வந்திருந்த மோடி, திடீரென ரஜினியைச் சந்தித்தார். `மீண்டும் அரசியலில் ரஜினி’ என்ற பேச்சுகள் எழத் தொடங்கின.

மே, 2017

ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களைச் சந்தித்தார் ரஜினி. ‘நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில்தான் இருக்கிறது’, ‘சிஸ்டம் கெட்டுப்போச்சு’, ‘போர் வரும்போது பார்த்துப்போம்’ என்றெல்லாம் குழப்பியடித்தார்.

ரஜினி
ரஜினி

டிசம்பர் 31, 2017

மீண்டும் ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்கள் சந்திப்பு. ``இது காலத்தின் கட்டாயம்... வரப்போற சட்டமன்றத் தேர்தல்ல தனிக்கட்சி ஆரம்பிச்சு, 234 தொகுதியிலயும் நாம போட்டியிடுறோம்’’ என்றார்.

ஏப்ரல் 23, 2018

தனது வீட்டின் முன்பாக செய்தியாளர்களைச் சந்தித்தவர், “கட்சி ஆரம்பிப்பது உறுதி, தேதி பின்னர் அறிவிக்கப்படும்” என்றார்.

மே 22, 2018

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில், ‘‘இதற்குத் தமிழக அரசே பொறுப்பு’’ என்று அரசை விமர்சித்தார். மே 30-ல் காயமடைந்த வர்களைச் சந்திக்கச் சென்றவரை, இளைஞர் ஒருவர் “நீங்கள் யார்?” என்று கேட்டது வைரலானது. சென்னையில் பத்திரிகையாளர்களிடம், ``போராட்டம் போராட்டம்னு போனா... தமிழ்நாடு சுடுகாடா மாறிடும்” என்றார் ஆவேசமாக.

மார்ச் 12, 2020

ரஜினி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பிரஸ் மீட்டில், ``சிஸ்டம் சரிசெய்யாம அரசியலுக்கு வரக் கூடாது. அப்படி வந்தால், மீன்குழம்புவைத்த பாத்திரத்தில் சர்க்கரைப் பொங்கல் வைப்பதுபோல் ஆகிவிடும். மக்கள் மத்தியில் எழுச்சி வரும்போது அரசியலுக்கு வருவேன்’’ என்று கூறினார்.

டிசம்பர் 3, 2020

‘ஜனவரியில் கட்சி தொடக்கம், டிசம்பர் 31-ல் தேதி அறிவிப்பு’ என்று ட்விட்டரில் பதிவிட்டார். பிறகு செய்தியாளர்களைச் சந்தித்தவர், ``தமிழக மக்களுக்காக உயிரே போனாலும் நான் சந்தோஷப்படுவேன். அரசியல் மாற்றம் ரொம்ப கட்டாயம். அது இப்போ இல்லைன்னா... எப்பவும் இல்லை. எல்லாத்தையும் மாத்தணும். தமிழகத்தின் தலையெழுத்தை மாத்தப்போற நாள் வந்தாச்சு!’’ என்றெல்லாம் பேசினார்.

டிசம்பர் 29, 2020

``நான் கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை மிகுந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை மன்னியுங்கள்’’ என்று காலை 11:49 மணியளவில் ட்விட்டரில் பதிவிட்டு, அரசியல் வருகைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.