அரசியல்
சமூகம்
அலசல்
Published:Updated:

நாங்க என்ன அடி மாடுகளா? - எம்.எல்.ஏ-வுக்கு எதிராக சீறும் காங்கிரஸ் பிரமுகர்

ஜெரால்ட் கென்னடி, பிரின்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெரால்ட் கென்னடி, பிரின்ஸ்

நீங்கள் போராட்டங்கள் அறிவிக்கும்போது மட்டும் நாங்கள் வர வேண்டும். அதிகாரிகளைச் சந்திக்கும்போது நாங்கள் வரக் கூடாதா...

கன்னியாகுமரி மாவட்டம், குருந்தன்கோடு கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவராக இருப்பவர் ஜெரால்டு கென்னடி. இவர் கக்கோட்டுதலை ஊராட்சித் தலைவராகவும் இருக்கிறார். இவரின் இரண்டு வாய்ஸ் மெசேஜ்கள்தான் தற்போது சத்தியமூர்த்திபவன் வரைக்கும் சுடச்சுடப் பரவிக்கொண்டிருக்கின்றன. அப்படி அந்த வாய்ஸ்மெசேஜில் என்ன பேசியிருக்கிறார் ஜெரால்ட் கென்னடி?

“நான் வட்டாரத் தலைவராக இருக்கும் குருந்தன்கோடு பி.டி.ஓ-வை (வட்டார வளர்ச்சி அலுவலர்) காங்கிரஸ் எம்.எல்.ஏ பிரின்ஸும், மாவட்டத் தலைவர் கே.டி.உதயமும் சந்தித்திருக்கிறார்கள். ஐந்து போஸ்ட்டிங் போடுவதில் கமிஷன் வாங்கவே வந்ததாக மக்கள் பேசிக்கொள்கிறார்கள். காசு வேணுமா... வாங்கிட்டுப் போங்க. தயவுசெய்து கட்சிக்காரர்களை மதியுங்கள். ‘உங்கள் தலைவர்கள் வந்திருக்கிறார்கள், நீங்கள் வரவில்லையே’ என அதிகாரிகள் என்னிடம் கேட்கிறார்கள். யாராக இருந்தாலும் வட்டாரத்துக்குள்ள வரும்போது வட்டாரத் தலைவரிடம் சொல்லுங்க” என்று நீள்கிறது அந்த ஆடியோ.

ஜெரால்ட் கென்னடி
ஜெரால்ட் கென்னடி

மேலும், “நீங்கள் போராட்டங்கள் அறிவிக்கும்போது மட்டும் நாங்கள் வர வேண்டும். அதிகாரிகளைச் சந்திக்கும்போது நாங்கள் வரக் கூடாதா... நாங்கள் என்ன அடி மாடுகளா?” என்றும் கொந்தளித்திருக்கிறார்.

ஜெரால்டு கென்னடியிடம் பேசினோம், “அந்த ஆடியோவில் பேசியது நான்தான். நான் ஒரு பஞ்சாயத்து ஆபீஸுக்குப் போகும்போது, கட்சியின் லோக்கல் பஞ்சாயத்து தலைவருக்கு தகவல் சொல்லாமல் போனால் அவர் என்னிடம் இதே கேள்வியைக் கேட்பார்தானே... இதைக் கட்சிக்காரர்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக ‘குருந்தன்கோடு வட்டார காங்கிரஸ்’ என்ற வாட்ஸ்அப் குரூப்பில் வாய்ஸ் மெசேஜாகப் போட்டேன்” என்று முடித்துக்கொண்டார். ஆனால், தன்னை விட்டுவிட்டு அவர்கள் மட்டும் தனியே கமிஷன் வாங்கச்சென்ற ஆதங்கத்திலேயே ஜெரால்டு கென்னடி அப்படிப் பேசியதாக சிலர் குற்றம்சாட்டுகிறார்கள்.

பிரின்ஸ்
பிரின்ஸ்

குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.டி.உதயம் நம்மிடம், “கட்சிப் பிரச்னைக்காக அந்த வட்டாரத்துக்குச் சென்றால் அவரிடம் சொல்லலாம். நானும் எம்.எல்.ஏ-வும் ஒரு பொதுப் பிரச்னைக்காக பி.டி.ஓ-வைப் பார்க்கச் சென்றோம். அந்த வட்டாரத்தில் அவருக்கு பதில், வேறு ஒருவரை வட்டாரத் தலைவராக போடுவதற்கான லிஸ்ட் மாநிலத் தலைவர் கையில் இருக்கிறது. விரைவில் அறிவிப்பு வெளிவர விருக்கிறது. அந்தக் கோபத்தில்தான் இப்படிப் பேசியிருக்கிறார். நாங்கள் கமிஷன் வாங்கச் சென்றோம் என்று வாய்ஸ் மெஸேஜ் போட்டதற்காக, அவர்மீது சைபர் க்ரைம் போலீஸில் புகார் கொடுத்திருக்கிறோம்” என்றார்.

பிரின்ஸ் எம்.எல்.ஏ-விடம் பேசினோம். “நெட்டாங்கோடு ஊராட்சியில், ஒருவருக்கு வீட்டு வரி போட்டுக் கொடுக்காத பிரச்னை பற்றிக் கேட்க திடீரெனப் போனோம். அவருக்கு என்னிடம் விரோதம் இல்லை. வருத்தத்தில் அப்படிச் சொல்லிவிட்டார். இருந்தாலும் அதைப் பெரிதுபடுத்த வேண்டாம்” என்றார்.

கே.டி.உதயம்
கே.டி.உதயம்

கோஷ்டிப் பஞ்சாயத்து, தமிழக காங்கிரஸின் பரம்பரைச் சொத்து. அதை மாற்ற யாரால் முடியும்?